BharatPe நிறுவனத்தில் நடப்பது என்ன? இணை நிறுவனர் மோதல் விவகாரம் தொடங்கியது எப்படி?
யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிதிநுட்ப நிறுவனமான பாரத் பே இயக்குனர் குழு மற்றும் இணை நிறுவனர் ,மோதல் விவகாரம் தீவிரமாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த சர்ச்சையின் பின்னணி பற்றி ஒரு கண்ணோட்டம்.
அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வரும் 'BharatPe' 'பாரத் பே' நிறுவன சர்ச்சையில் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் இயக்குனர் குழுவுக்கு நிபந்தனை விதித்திருக்கும் நிலையில், நிறுவனமும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுவனத்தில் நிதி மோசடி நடந்திருப்பதாக தணிக்கையில் தெரிய வந்துள்ள நிலையில், குரோவரை நிறுவனத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற்றுவதில் இயக்குனர் குழு தீவிரமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குரோவரும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுவதால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப்களுக்கான ரியாலிட்டி ஷோவான ஷார்க் டாங்க் இந்தியாவில் பங்கேற்பாளராக பரபரப்பை ஏற்படுத்திய அஷ்னீர் குரோவரரையும், அவரது நிறுவனத்தையும் சுற்றியுள்ள இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என பார்க்கலாம்.
நிறுவன துவக்கம்
’பாரத் பே’ நிறுவனம் 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரத்தக நிறுவனங்கள், சிறு வணிகர்களுக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது, பவிக் கொலாடியா மற்றும் ஷஸ்வத் நகர்னி துவக்கிய நிறுவனத்தில் பின்னர் அஷ்னீர் குரோவர் இணை நிறுவனராகவும், சி.இ.ஓவாகவும் இணைந்தார்.
அதே ஆண்டு நிறுவனம், சொக்கோயா கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 20 மில்லியன் டாலர் நிதி பெற்றது. இதனிடையே கோரிவரின் மனைவி மாதுரி குரோவரும் நிறுவனத்தில் கட்டுப்பாடுகள் பிரிவுத் தலைவராக இணைந்தார்.
இந்நிலையில், பவிக் தனது பங்குகளை ஷஸ்வத், அவரது தந்தை, அஷ்னீர் மற்றும் சில தேவதை முதலீட்டாளர்களுக்கு மாற்றினார். அமெரிக்காவில் அவர் தொடர்புடைய குற்ற வழக்கு ஒன்று இதற்குக் காரணமாக அமைந்தது.
BharatPe தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி அடைந்தது. வர்த்தக நோக்கிலும் வளர்ச்சி அடைந்த நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்ற நிதிக்குப் பிறகு யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது.
பிரச்சனை என்ன?
இந்நிலையில் தான், இணை நிறுவனர் அஷ்னீர் குரோவருக்கும், இயக்குனர் குழுவுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த மாத இறுதியில், அஷ்னீர் குரோவர் தாமாக விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தரப்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மோதலுக்கு முன்னால், அஷ்னீர் தொடர்பான ஒரு சர்ச்சை சமூக ஊடகத்தில் வெடித்தது. ஸ்டார்ட் அப்களுக்கான ரியாலிட்டி ஷோவான ஷார்க் டாங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அஷ்னீர் மேலும் பிரபலமான நிலையில், தனியார் வங்கியான கோடக் மகிந்திரா ஊழியர் ஒருவரை அவர் தரக்குறைவாக தாக்கிப் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியானது.
ஸ்டார்ட் அப் வெற்றிக்கதையான நைகா நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டில் பங்கேற்க கோடக் வங்கியை நிதி உதவிக்காக அணுகிய போது, அது மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சனை தொடர்பாக குரோவார் இந்த ஆடியோவில் பேசியதாகக் கூறப்பட்டது.
அந்த ஆடியோவில் ஊழியரை குரோவார் மிரட்டியிருந்ததாகவும் செய்தி வெளியான நிலையில், இந்த ஆடியோ ஒரு போலித்தயாரிப்பு, மற்றும் பண மோசடி முயற்சி என குரோவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான குறும்பதிவை அவர் நீக்கிவிட்டார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கோடக் வங்கி நிர்வாகம் மீது குரோவர் வழக்கும் தொடர்ந்தார். வங்கி இந்த பிரச்சனையை சட்டரீதியாக சந்திப்பதாகத் தெரிவித்தது.
புதிய மோதல்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், குரோவர் நிறுவனப் பணியில் இருந்து மார்ச் மாத காலம் வரை விடுப்பு எடுத்துத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இதை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் நிறுவனத்தரப்பில் அறிக்கை வழியாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது மனைவி மாதுரியும் தானாக விடுப்பில் செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நிறுவன செயல்பாடுகள் தொடர்பாக சுயேட்சையான தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. தணிக்கையில் நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதன் பிறகு, நிதி மோசடி மற்றும் நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல் கட்ட விசாரணையில் நிதி மோசடி குறித்து தெரிய வந்துள்ளதாக மின்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. இடர் ஆலோசனை நிறுவனமான ஆல்வர்ஸ் அன்ட் மார்சல் அளித்த அறிக்கையின் படி இந்தத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பான தகவல்கள் நிறுவன விவகாரத்தில் புதிய திருப்பமாக அமைந்தது. இயக்குனர் குழுமம், குரோவர் மீது மேலும் நெருக்கடியை ஏற்படுத்த இது வழிவகுக்கும் என்று கருதப்பட்டது.
குரோவர் நிபந்தனை
இந்நிலையில், குரோவர் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நிறுவனம் தன்னை வெளியேற்ற முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
“ஒன்று என்னை நிறுவனத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது என் பங்குகளை ரூ.4,000 கோடிக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், பாரத்பே நிறுவனத்தில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியின் அங்கமாக இந்த குற்றச்சாட்டு படலம் அமைகிறது,” என குரோவர் கூறியிருந்தார்.
"என் உரிமைகளுக்காக போராடுவேன். முன் தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பை எனக்கு எதிராக செயல்படுத்த முடியாது. என்னிடம் தகவல் தெரிவிக்காமல் நிர்வாக தணிக்கை நடத்தி விட்டு, பத்திரிகைக்கு தகவல் கசியவிடுவது சரியல்ல. அவரை களங்கப்படுத்துவோம். அதன் பிறகு அவரே பேச்சுவார்த்தைக்கு வருவார் என நினைக்கிறார்கள், என அஷ்னீர் கூறியிருந்தார்.
தொடரும் சர்ச்சை
இதனிடையே, நிறுவன சி.இ.ஓ நியமனம் தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிர்வாக இயக்குனராக இருந்த அஷ்னீர் விடுப்பில் சென்ற நிலையில், சுஹைல் சமீர் நிறுவன பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், சமீர் நிறுவனத்தில் தலைவராக இணைந்தார்.
சமீர் சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு இணை நிறுவனரான ஷஸ்வத், சுஹைலுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும், நீக்கத்திற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
குரோவர் நிபந்தனைகளை விதித்திருந்தாலும் அவரை நிரந்தரமாக வெளியேற்றுவதில் இயக்குனர் குழு உறுதியாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிறுவனப் பங்கு ஒப்பந்தம் படி இதற்குத் தேவையான சான்றை பெற முன்னணி தணிக்கை நிறுவனத்தை கொண்டு ஆய்வு நடத்தி நிதி மோசடி தொடர்பாக அறிக்கை பெற திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் தொடர்பான விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், குரோவர் எந்த இழப்பீடும் இல்லாமல் நிறுவனத்தில் இருந்து வெளியேறத் தயாராக இல்லை என்றும், இதற்காக சட்ட வழிகளை அவர் நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
நிறுவனத்திற்கு எப்படி மதிப்பை உருவாக்க வேண்டும் என தனக்குத்தெரியும் என்றும், குற்றச்சாட்டுகளால் பயந்துவிட மாட்டேன் என அவர் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் எனத்தெரியாத பரப்பப்பு நிலவுகிறது.
தகவல் உதவி: YS Team | தமிழில் தொகுப்பு: சைபர் சிம்மன்