ஒருபுறம் அதிகரிக்கும் பிட்காயின் மதிப்பு: மறுபுறம் தடை விதிக்க ரெடியாகும் மத்திய அரசு!
உச்சம் தொட்ட டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பு!
கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து வர்த்தகத்திலும் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்படலாம்.
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் மதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சனிக்கிழமையன்று ஒரேநாளில் பிட்காயினின் விலை 6.64% அதிகரித்து 61,000 டாலர்களைத் தாண்டியுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பிட்காயின் பக்கம் திரும்பிவருகிறது. டெஸ்லா போன்ற சர்வதேச நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று மட்டும் பிட்காயின் மதிப்பானது 6.64% அதிகரித்து, 61,073.71 டாலர்களாக உயர்ந்தது. இதுவே கடந்த ஜனவரி 4 அன்று பிட்காயினின் விலையானது 27,734 டாலர்கள் மட்டுமே.
இரு விலையையும் ஒப்பிடும்போது தற்போது பிட்காயின் 120.2% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முடிவுக்குள் பிட்காயின் 1,00,000 டாலர்களை எட்டலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இப்படியான நிலையில் பிட்காயின் தொடர்பாக மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் வளர்ச்சி காரணமாக உலகின் மற்ற நாடுகளைப் போலவே இந்திய முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாகக் கிரிப்டோ சந்தைக்குள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தான் மத்திய அரசு விரைவில் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் தடை என்பதோடு நில்லாமல் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுத்து இதற்கென தனியாக ஒரு மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த சட்டம் கிரிப்டோகரன்சியை எதிர்க்கும் உலகிலேயே மிகவும் கடுமையான சட்டமாக இருக்கும். அதன்படி, கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து வர்த்தகத்திலும் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்படலாம்.
மேலும், தனியார் கிரிப்டோகரன்சிகளையும் முழுமையாகத் தடை செய்வதோடு, ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை உருவாக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான செயல்முறை வடிவங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் மசோதா தாக்கல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மசோதா கொண்டுவரப்படும் பட்சத்தில் இந்தியாவில் கிரிப்டோ சந்தையும், கிரிப்டோ சந்தை முதலீட்டாளர்களும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.