'எனக்கு கல்வி கிடைக்கவில்லை...' - 5000 புத்தகங்களுடன் 'புத்தக ஓட்டல் நடத்தும் 74 வயது பாட்டி!
6ம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆனதால், படிக்கமுடியாமல் போன வருத்தத்தில் இருந்த 74 வயது பாட்டி பீமாபாய், தனது கனவான வாசிப்பை மீட்டெடுக்க உதவும் 5000 புத்தகங்களை கொண்ட 'புத்தக ஓட்டல்' ஒன்றை நடத்தி வருகிறார்.
6ம் வகுப்பு படிக்கும் போதே திருமணம், குடிக்காரக் கணவன், நிலத்தையும், விளைச்சலையும் நாசம் செய்த ஆலையக் கழிவு என வாழ்வில் அடுக்காக போராட்டங்களை சந்தித்த 74 வயது பாட்டி, அவருடைய கனவான வாசிப்பை மீட்டெடுக்க உதவும் 5000 புத்தகங்களை கொண்டு 'புத்தக ஓட்டல்' ஒன்றை தொடங்கியுள்ளார்!
பீமாபாய் ஜோன்டேன் 74 வயது பாட்டி. நாசிக்கில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். பள்ளி படிக்கும் வயதிலே திருமணம் செய்து வைத்துவிட்டதால், படிக்க முடியாத ஏக்கம் அவரது நெஞ்சோடு என்றென்று ஒட்டிக் கொண்டது.
74 வயதிலும் ஏக்கம் குறையாமலிருக்க டீக்கடைக்கு வரும் படிக்கும் பசங்களோ போனையே நொண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பருவ வயதினர் முதல் அனைவரையும் மீண்டும் கையில் புத்தகத்தை புரட்டுவதையே ஹாபியாக்க எண்ணி அதற்கான திட்டமாக புத்தக ஓட்டலை தொடங்கினார். 5000 புத்தகங்களுடன் செயல்படும் ஓட்டல் இப்போது பலரது பேவரைட்...
மும்பை மற்றும் ஆக்ரா இடையே தேசிய நெடுஞ்சாலை 3ல் அமைந்துள்ள இந்த உணவகத்தின் பெயர் ’அஜ்ஜிச்யா புஸ்தகாஞ்சா’ ஓட்டல். அப்படியென்றால் பாட்டியின் ஓட்டல் மற்றும் புத்தகங்கள் என்று பொருள்.
பெயருக்கு ஏற்றாற் போன்றே பாட்டி ருசியான உணவினை வயிற்றுக்கும், அறிவினை வளர்க்க புத்தகங்களை சிந்தைக்கும் பரிமாறி வருகிறார். மக்களால் ஆஜி என்று அன்போடு அழைக்கப்படும் பாட்டி புத்தகங்களை இலவசமாகவும் வழங்கி, சமூக மாற்றத்திற்கான அவரது பங்களிப்பை ஆற்றிவருகிறார்.
குடிக்காரக் கணவன், நிலத்தை நாசமாக்கிய ரசாயனக் கழிவு...
தனித்து போராடிய பீமாபாய்!
நாசிக்கில் உள்ள கட்வாட் கிராமத்தைச் சேர்ந்த பீமாபாயுக்கு 6ம் வகுப்பு படிக்கும் போத திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவருக்கோ படிப்பிலும், புத்தக வாசிப்பிலும் அளவுகடந்த விருப்பம். ஆனால், வாழ்க்கை அவருக்காக வேறு திட்டங்களை தீட்டி வைத்திருந்தது. மணவாழ்க்கை மகிழ்ச்சியை அளிக்கும் என எண்ணியவரின் நம்பிக்கையும் பொய்த்தது.
ஏனெனில், காலைப் பொழுது விடிவதே மது அருந்துவதற்காக தான் என்ற நிலையிலிருந்த மதுவுக்கு அடிமையாகிய குடிக்கார கணவன் வாழ்க்கை துணையாக அமைந்தார். குடிகார கணவனுடனான வாழ்க்கை எளிதானது அல்ல.
"காலையில் எழுந்தவுடன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். இப்படி குடித்து குடித்தே எங்களிடமிருந்த 20 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை விற்று அழித்தார். கடைசியாக குடித்து அழித்தது போக எங்களிடம் 2 ஏக்கர் நிலம் மட்டுமே எஞ்சியது," என்று வேதனையுடன் ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் பீமாபாயின் மகன் பிரவின்.
இத்தகைய சூழலில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்த பீமாபாயுக்கு தனித்து இருந்தது போலிருந்தது. ஆனாலும், மகனின் மீதிருந்த அன்பும், குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பும் அவரை அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகர்த்தியது. குடும்பத்தை கவனித்து கொண்டு, பண்ணையையும் பராமரித்து பம்பரமாய் சுழன்று வந்தார் பீமாபாய். அதற்கும் தடையாகியது அவர்களின் நிலத்தின் அருகே திறக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை.
தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் அவர்களின் நிலத்தில் கசிந்ததால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமாகியது. பீமாபாய் பிரச்னையை உள்ளூர் பஞ்சாயத்திற்கு எடுத்து சென்றார். ஆனால், அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, விளைச்சலையும், நிலத்தையும் விற்று, நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு டீக்கடை தொடங்க முடிவு செய்தார். 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டீக்கடையே பின்னாளில் புத்தக ஓட்டலாக மாறியது.
"டீக்கடையினை ஆரம்பித்ததற்காகவும், மகனை வேலைக்கு செய்ய வைத்ததற்காகவும் உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள். புத்தக ஓட்டல் நடத்துவதைப் பார்த்தும் சிரித்தனர். ஆனால், இவை எதுவும் என்னை முன்னேறத்தை தடுக்கவில்லை," என்றார் பீமாபாய்.
சிந்தையின் பசியாற்றும் 'புத்தக ஓட்டல்'!
பிரவீன் 10ம் வகுப்பு படித்து முடித்தவுடன் வேலைக்கு அனுப்புவதையே அவருடைய தந்தையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனக்கே கல்வி கிடைக்கவில்லை என்ற வருத்தத்துடன் வாழ்ந்துவந்த தாய் பீமாபாய், பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை சந்தித்த போதிலும், பிரவீன் படிப்பதற்கான முழு தேவைகளையும் செய்தார். அவருடைய மகனும் அவரது கல்விக் கட்டணங்களுக்காகவும், குடும்பத்தின் செலவினங்களுக்காகவும் படிக்கும் நேரம் தவிர்த்து கிடைக்கும் நேரத்தில் செய்திதாள்களை விற்கும் பணிச் செய்தார்.
ஊடகவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற அவர், படித்துமுடித்த பின் உள்ளூர் செய்தித்தாள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர், வேலையை விட்டுவிட்டு ஒரு சிறிய பதிப்பகத்தைத் தொடங்கினார். இப்போது, பதிப்பகத்தை நடத்துவதோடு, உணவகத்தை நிர்வகிப்பதிலும் அவரது அம்மாவுக்கு உதவி செய்துவருகிறார்.
வெறும் 50 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தில் தற்போது 5,000 புத்தகங்கள் உள்ளன. ஆரம்பத்தில், அவர்கள் மராத்தி புத்தகங்களை மட்டுமே வைத்திருந்தனர். புத்தக ஓட்டல் முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு இந்தி மற்றும் ஆங்கில புத்தகங்களையும் வைக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில், அவர்கள் தங்களிடம் கையிருப்பிலிருந்த புத்தகங்களை காட்சிப்படுத்தினர். பின்னர், மக்களும் புத்தகங்களை நன்கொடையாக அளிக்கத் தொடங்கினர்.
"வாடிக்கையாளர்கள் உணவினை ஆர்டர் செய்துவிட்டு புத்தகங்களை படிக்க சென்றுவிடலாம். உணவினை சமைக்கும் நேரத்தில் அவர்கள் புத்தகத்தினை புரட்டி பார்ப்பர். இது மக்களிடையே மெல்ல மறைந்து கொண்டிருக்கும் வாசிப்புப்பழக்கத்தை மீட்க உதவியாக இருக்கும்," என்றார் பீமாபாய்.
மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காக மகளிர் தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற சிறப்பான முக்கிய தினங்களில் இலவசமாக புத்தகங்களையும் வழங்குகின்றனர். அத்துடன் மருத்துவமனைகளுக்கு இலவச புத்தகங்களை விநியோகிக்கவும் தொடங்கியுள்ளனர்.
புத்தக ஹோட்டல் ஒரு சமூக மாற்றத்திற்கான சிறுப்புள்ளியாகும். நாங்கள் அதை வணிகக் கண்ணோட்டத்தில் நடத்தவில்லை. தினமும் சுமார் 100 பேர் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் ஆர்டர்களுக்காகக் காத்திருக்கும் போது புத்தகங்களைப் படிக்கின்றனர். ஒவ்வொரு நாளும், அம்மா துாங்கச் செல்வதற்கு முன்பும் அல்லது வேலையில்லாத நேரத்திலும் சில பக்கங்களைப் படிப்பார், என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் பிரவீன்.
"எனக்கு கல்வி கிடைக்கவில்லை. என்னால் சிறு வயதில் அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால், ஓட்டலுக்கு வரும் மக்கள் புத்தகத்தை படிப்பதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் பீமாபாய்.
தமிழில்: ஜெயஸ்ரீ
மியாவாக்கி காடு சூழலில் புத்தக வாசிப்பு: 70,000 புத்தகங்களின் நூலகம் பற்றி தெரியுமா?