மியாவாக்கி காடு சூழலில் புத்தக வாசிப்பு: 70,000 புத்தகங்களின் நூலகம் பற்றி தெரியுமா?
மியாவாக்கி எனப்படும் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நட்டு வைத்து வளக்கும் பழக்கம் விசாகப்பட்டினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அந்த ஐடியாவை வைத்து குழந்தைகளுக்கான பொது நூலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மியாவாக்கி எனப்படும் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நட்டு வைத்து வளக்கும் பழக்கம் விசாகப்பட்டினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அந்த ஐடியாவை வைத்து குழந்தைகளுக்கான பொது நூலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள பொது நூலகத்தில் குழந்தைகளுக்கான பிரிவு ‘மியாவாக்கி’ காடுகளின் வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் இருந்து குழந்தைகள் செக்ஷனுக்கு காலடி எடுத்து வைத்தால் ஏதோ கார்ப்ரேட் அலுவலகத்தில் இருந்து காட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வை பெற முடிகிறது.
வீடியோ கேம், செல்போன், கம்ப்யூட்டர் என ஸ்கிரீனுக்கு முன்னால் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை மீண்டும் புத்தகங்களை நோக்கி திரும்ப வைக்க இந்த புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் பொது நூலகத்தின் செயலாளரான டி.எஸ்.வர்மா கூறுகையில்,
“இங்கு மியாவாக்கி பிரிவுக்குள் வரும் குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை படிக்கலாம். அத்துடன் கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் போன்ற பிற செயல்பாடுகளிலும் பங்கேற்கலாம்,” என்கிறார்.
நூலகத்தின் புதிய நிர்வாகி மற்றும் தலைவரான எஸ்.விஜயகுமார் சேவை மனப்பான்மை கொண்ட கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து திரட்டிய நிதியில் இதனை உருவாக்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக மூத்த குடிமக்கள், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அடங்கிய வாசகர்களின் தேவைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், புதிய தோற்றமுள்ள நூலகம் ஒரு கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது, இது ஒரு ஊக்கமளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
70,000 புத்தகங்களின் சொர்க்க பூமி:
இந்த நூலகத்தில் 70,000 புத்தகங்கள் உள்ளன மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 இதழ்களுக்குச் சந்தா செலுத்தப்படுகிறது. நூலகத்தின் முக்கிய அம்சங்களில் மின்னணு நுழைவு வாயில், ஆன்லைனில் மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளவும், வாசகர்களின் நலனுக்காக அனைத்து புத்தகங்களின் விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களுடன் கூடிய மின்-கியோஸ்க் ஆகியவை அடங்கும்.
போட்டித் தேர்வுகளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்துவதற்காக நூலகத்தில் 40 கணினிகள் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன.
“அனுமதி கிடைத்தால் நூலகத்தை 24x7 திறந்து வைக்க திட்டமிட்டுள்ளோம். நூலகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் நான்கைந்து கணினிகளை வைத்து பல்வேறு புத்தகங்களின் ஆன்லைன் பதிப்புகளுக்கான அணுகலை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்கிறார் நூலக செயலாளர் வர்மா.
ஒரு நாளைக்கு சராசரியாக ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1,000 பேர், தங்கள் அறிவை வளப்படுத்த நூலகத்திற்கு வருகிறார்கள். கோடை விடுமுறை மற்றும் போட்டித் தேர்வுகளின் போது நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.
கடந்த 2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம், போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வுக்கான புத்தகங்கள் கிடைக்காமல் தவிக்கும் மாணவர்களின் இலக்காக இருந்து வருகிறது. நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றதற்கு அறிவு இல்லத்திற்கு பலர் கடமைப்பட்டுள்ளனர்.
போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் எஸ் கோட்டாவைச் சேர்ந்த கங்கா பவானி கூறுகையில்,
இந்த நூலகத்தில் கிடைத்த புத்தகங்கள் மூலமாக வங்கித் தேர்வுக்குத் தயாரான தனது சகோதரருக்கு பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை கிடைத்ததாகக் கூறினார். APPSC தேர்வுகளுக்குத் தயாராவதற்கு இந்த நூலகத்திற்குச் செல்லும்படி அவர் தான் எனக்கு வழிகாட்டினார். பொது நூலகம் படிப்பிற்கான சரியான சூழலைக் கொண்டுள்ளது. ஏபிபிஎஸ்சி தேர்வுகளுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் நூலகத்தில் செலவழித்து வருகிறேன்,” என்கிறார்.
மாணவர்களின் நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிட வைப்பது மட்டுமின்றி, போட்டித் தேர்வுக்கும் தயார்படுத்த உதவும் இந்த நூலகம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி