சிக்கல் இல்லாமல் தண்ணீர் லாரி புக் செய்யணுமா? அப்போ இந்த ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க!
தண்ணீர் தேவை இருப்போரையும் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள தண்ணீர் லாரி சேவை வழங்குவோரையும் ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படுகிறது Tankme.
தண்ணீரின் முக்கியத்துவத்தை 'நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார் திருவள்ளுவர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் வளத்திற்கு எப்போதும் பற்றாக்குறை இருந்து வருகிறது. தண்ணீர் கிடைக்க மக்கள் கடும் போராட்டங்களை சந்திக்கிறார்கள்.
மழைக்காலங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எத்தனையோ பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துகொள்வதால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவிப்பதைப் பார்க்கமுடிகிறது. அதேசமயம் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
மழைக்காலத்தில் அதிகப்படியான நீர் பிரச்சனையாக இருப்பதுபோல் கோடைக்காலத்தில் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. வீட்டில் கலர் கலராக சட்டையும் சேலையும் இருக்கிறதோ இல்லையோ கலர் கலராக குடங்கள் இருக்கும். மழைக்காலங்களில் வீட்டிற்குள் தேங்கிக்கிடக்கும் நீரை வெளியேற்றவும் கோடைக்காலங்களில் வீட்டுக்குள் நீரைக் கொண்டு வந்து நிரப்பவும் இந்தக் குடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதற்கு ஏற்ப இதன் விலையும் அதிகரித்து வருகிறது. மாதத் தவணையில் வீடு, நிலம், கார் போன்ற சொத்துக்களை வாங்கிய காலம் போய் தண்ணீர் வாங்கும் காலம் வந்துவிட்டது.
தண்ணீர் தேவைப்படுவோர் தண்ணீர் லாரிகள் மூலம் பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் தண்ணீர் லாரி மூலம் விநியோகம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கிறார்கள். விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
அப்படியே அதிகம் செலவு செய்து புக் செய்தாலும் சரியான நேரத்தில் தண்ணீர் வண்டி வந்து சேர்வதில்லை. எத்தனை முறை அழைத்தாலும் பக்கத்து தெருவில் இருப்பதாகவே சொல்வார்கள். ஆனால் வண்டியைப் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
மக்கள் சந்திக்கும் தண்ணீர் தொடர்பான இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வளித்து தண்ணீர் தேவை இருப்போரையும் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள தண்ணீர் லாரி சேவை வழங்குவோரையும் ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படுகிறது ‘டேங்க்மீ’ நிறுவனம் (Tankme).
நிறுவனர்கள் – ஓர் அறிமுகம்
எம்பிஏ பட்டதாரிகளான அருண் ஆண்டெர்சன், ஃபஹத் ஜவேத், கௌஷிக் மோகன் மூவரும் இணைந்து இந்நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இவர்கள் மூவரும் 2013ம் ஆண்டு LIBA கல்வி நிறுவனத்தில் அறிமுகமானார்கள்.
பிராஜெக்ட் தொடர்பாக ஒன்றாகச் செயல்பட்டார்கள். இதில் தொடங்கியது இவர்களது பயணம். கடந்த இரண்டாண்டுகளாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அருண் ஆண்டர்சென் ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஃபஹத் தொழில்நுட்பம், மின்வணிகம், மீடியா போன்ற துறைகளில் பல்வேறு வணிகங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார். கௌஷிக் QSR, தயாரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
துறையைத் தேர்வு செய்த காரணம்
தண்ணீர் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு அங்கம். இந்த வளத்தை பாதுகாக்கவேண்டியது அவசியம். ஆனால் இந்த முக்கிய வளத்தின் பற்றாக்குறை அதிகரித்தாலும்கூட இதை அணுகும் விதம் எந்த வகையிலும் மேம்படவில்லை என்கின்றனர் நிறுவனர்கள்.
சென்னையில் மட்டுமே தண்ணீர் லாரி வணிகம் ஆண்டிற்கு 450 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கிறது. கிட்டத்தட்ட 4,500 தண்ணீர் வண்டிகளும் 300 வாகன ஆப்பரேட்டர்களும் இந்தத் துறையில் இயங்கி வருகிறார்கள்.
தண்ணீர் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால் லாரிகளில் தண்ணீர் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், இதில் பல பிரச்சனைகளை நிலவுவதால் இதிலுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்வதில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்கள்.
தண்ணீர் லாரி சேவை வழங்குவோர் பல கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தண்ணீரை நிரப்பி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
“தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவர்களது செலவைக் குறைத்து திறனை மேம்படுத்த முடியும் என்று நம்பினோம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒருவர் ஓலா, ஊபர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி எளிதாக கார் புக் செய்வது போன்ற ஏற்பாட்டை தண்ணீர் வாகனச் சேவைக்கு உருவாக்கத் திட்டமிட்டோம். இதனால் தண்ணீர் வாகனங்களை ஆபரேட் செய்வோர், வாடிக்கையாளர் இருவரும் பலனடையலாம். இரு தரப்பினரின் நேரமும் பணமும் மிச்சமாகும்,” என்கின்றனர் நிறுவனர்கள்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அதாவது ஊரடங்கு சமயத்தில் வணிக ரீதியாக திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிறுவனர்கள் கலந்து பேசினார்கள். ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தைப் பதிவு செய்தனர். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
டேங்க்மீ சேவைகள் மற்றும் வணிக மாதிரி
டேங்க்மீ தளம் தண்ணீர் தேவையிருப்போரை அவர்களது பகுதிக்கு அருகிலுள்ள தண்ணீர் வண்டி சேவை வழங்குவோருடன் இணைக்கிறது.
வாடிக்கையாளர்கள் அருகிலிருக்கும் தண்ணீர் வண்டிகள் மூலம் விரைவாக தண்ணீர் பெறலாம். அதிக நேரம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. நேரம் மிச்சமாகிறது.
அதேபோல் சேவையளிப்போர் தண்ணீர் வண்டிகளில் நீர் நிரப்ப வெகு தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை. அருகிலேயே இருக்கும் தண்ணீர் நிரப்பும் பகுதியை டேங்க்மீ சுட்டிக் காட்டுகிறது. இதனால் இவர்களது நேரமும் மிச்சமாகிறது.
இதுவே தற்போதைக்கு இந்நிறுவனம் வழங்கும் முக்கியச் சேவை. இதுதவிர வாடிக்கையாளர்கள் தங்களது தண்ணீர் தொட்டியில் இருக்கும் தண்ணீரின் அளவை நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள உதவும் வகையில் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் ஐஓடி சார்ந்த தீர்வையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது இது சோதனைக்கட்டத்தில் உள்ளது. இதன் மூலம் தேவையை முன்னரே கணிக்கமுடியும். பின்னர் அதற்கேற்றவாறு விநியோகத்தை முறையாகத் திட்டமிட முடியும். இந்த சேவை சந்தா அடிப்படையில் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ஆர்டர் மதிப்பில் ஒரு சிறு கமிஷன் தொகையை டேங்க்மீ கட்டணமாக வசூலிக்கிறது. இதுதவிர வேறு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
டேங்க்மீ சேவையின் தனிச்சிறப்பு
எளிமையான புக்கிங் முறை - தனிநபர்களும் வணிகங்களும் எளிதாக தண்ணீர் வண்டிகளை புக் செய்யலாம்.
வெளிப்படைத்தன்மை – தண்ணீர் கொள்ளளவின் அடிப்படையில் கட்டணம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தத் தொகையை செலுத்தினால் போதும். எந்தவித மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு 100% வெளிப்படத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது.
சரியான நேரத்தில் டெலிவரி –தண்ணீர் வண்டியை நிகழ்நேர அடிப்படையில் கண்காணித்து டெலிவரி குறித்த தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். மேப் சார்ந்த செயலி வாடிக்கையாளர்களின் இடத்தைக் கண்டறிந்து ஓட்டுநருக்கு வழிகாட்டுகிறது.
தற்சமயம் சுமார் 220 பயனர்கள் இணைந்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் 300 ஆர்டர்களை இந்நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
“ஆப் மூலம் தண்ணீர் லாரி புக் செய்ய உதவும் டேங்க்மீ சேவை குறித்து கேள்விப்பட்டதும் ஆர்வம் ஏற்பட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள என் அலுவலக வளாகத்திற்கு இச்சேவையைப் பயன்படுத்தி முயற்சி செய்தேன். எளிதான பயன்பாடு, விலையில் வெளிப்படைத்தன்மை ஆகியவை இந்த ஆப்பின் சிறப்பம்சம். தற்போது ஒரு வாரத்தில் இரண்டு முறை டேங்க்மீ மூலம் தண்ணீர் புக் செய்கிறோம்,” என்கிறார் ஏபிசி டெக்னோ லேப்ஸ் நிர்வாக இயக்குநர் பிரியங்கா முருகேஷ்.
சவால்கள்
மக்கள் தங்களுக்கு பழகிப்போன விஷயங்களை அத்தனை எளிதாக மாற்றிக்கொள்வதில்லை. புதிய முறையை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள்.
“இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல வாகன ஆப்பரேட்டர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும்கூட பொருந்தும். அவர்களது வணிகத்தை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் என்பதை புரியவைத்தோம்,” என்கின்றனர்.
கோவிட்-19 மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனால் ஆப் உருவாக்கும் பணி தாமதமானது.
வருங்காலத் திட்டம்
ஆரம்பத்தில் இரண்டு வாகனங்களுடன் சென்னையில் உள்ள 70 இடங்களுக்கு சேவையளிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களது சேவையின் தரம் பலரைச் சென்றடைந்தது. தினமும் புதிதாக பார்ட்னர்கள் இணைந்து சென்னை முழுவதும் விரிவடைந்துள்ளனர்.
சென்னையில் மைலாப்பூர், எழும்பூர், கீழ்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அம்பத்தூர், கிண்டி, சாலிகிராமம் என 70-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தற்போது டேங்க்மீ சேவையளிக்கிறது.
ஆப் மூலமாக டீசல் மற்றும் கழிவுநீர் அகற்றும் சேவையை வழங்குவதில் இருக்கும் வாய்ப்புகளையும் இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பருடன் இணைந்து இதற்கான சோதனை நடந்து வருகிறது.