தாத்தாவின் ஷூ நிறுவனத்தை 163 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வணிகமாக மாற்றிய சகோதரன் சகோதரி!
Inc.5 இந்தியா முழுவதும் 54 பிரத்யேக ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. பெண்களுக்கு ஸ்டைலான அதேசமயம் அணிந்துகொள்ள வசதியாக இருக்கும் காலணிகளை வழங்குவதே இந்த பிராண்டின் நோக்கமாகும்.
”ஒரு பெண்ணிடம் நல்ல ஷூக்கள் இருந்தால், அவரால் உலகத்தையே வசப்படுத்தமுடியும்,” என்றார் மெர்லின் மன்றோ.
சரியான ஷூக்கள், குறிப்பாக ஹீல்ஸ் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஆனால் ஸ்டைலாக இருப்பதுடன் அணிந்து செல்ல வசதியாகவும் இருக்கும் விதத்தில் ஹீல்ஸ் கிடைப்பது கடினமான விஷயம்.
பல பெண்கள் ஒரு அம்சத்திற்காக மற்றொன்றில் சமரசம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது அவர்கள் அணிந்திருக்கும் ஹீல்ஸ் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் கால் விரல்களை இறுக்குவதால் அசௌகரியமாக உணர்வார்கள். அல்லது வசதியாக இருப்பதால் அணிந்திருப்பார்கள். ஆனால் அவை பார்க்க மிகவும் சாதரணமாக தோற்றமளிக்கும்.
அல்மாஸ் நந்தா இதிலுள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டார். ஸ்டைலாக இருப்பதுடன் மிகவும் வசதியாகவும் இருக்கும் வகையில் ஷூக்கள் இருக்கவேண்டும் என விரும்பினார். 1998-ம் ஆண்டு அவருக்கு 24 வயதிருக்கையில் Inc.5 துவங்கினார். இந்நிறுவனம் பெண்களுக்கான ஸ்டைலான, வசதியான காலணிகளை வழங்குகிறது.
அமின் விர்ஜி, அல்மாஸ் நந்தாவின் சகோதரும் Inc.5 நிர்வாக இயக்குநரும் ஆவார். இவர் எஸ்எம்பி ஸ்டோரி உடனான உரையாடலில் மும்பையின் ஹீரா பன்னா ஷாப்பிங் செண்டரில் ஆரம்பத்தில் ஒரே ஒரு ஸ்டோராக துவங்கப்பட்டது குறித்தும் இந்தியா முழுவதும் 54 பிரத்யேக ஸ்டோர்களுடன் வளர்ச்சியடைந்து இந்த பிராண்ட் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
”எங்களது தாத்தா 1954-ம் ஆண்டு ’ரீகல் ஷூஸ்’ துவங்கினார். ஆரம்பத்தில் இது குடும்பத் தொழிலாக இருந்தது. ஆனால் நாங்கள் அடிப்படையான ஃபார்மலான காலணிகளைத் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம். 1998-ம் ஆண்டு அணிவதற்கு வசதியாக இருப்பதுடன் அழகாகவும் இருக்கும் காலணிகளை வழங்கும் சந்தை வாய்ப்பினை ஆராய நினைத்தோம். அப்போது உருவானதுதான் Inc.5,” என்றார்.
ஆரம்பக்கட்டம்
இளம் பெண்களுக்கு அதிகளவிலான காலணி வகைகளை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் 100 சதுர அடி ஸ்டோரில் Inc.5 துவங்கப்பட்டது. அமின் கூறுகையில்,
“ஃபேஷனாக காட்சியளிக்கும் காலணிகள் அணிந்துகொள்ள வசதியாக இருக்காது என்கிற பழமையான கருத்தைத் தகர்த்தெறிய விரும்பினார் அல்மாஸ். அவர் அதிகம் பயணம் மேற்கொள்வார். மற்ற பகுதிகளில் பார்க்கும் அம்சங்களை தனது காலணி பிராண்டிலும் இணைக்க விரும்பினார்,” என்றார்.
வெறுமனே குஷன் போன்ற அமைப்புகளை மட்டும் சேர்ப்பது வசதியானதாக கருதப்படாது. அமின் விவரிக்கையில், “வசதி என்பது ஷூக்கள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் சார்ந்தது. ஒவ்வொரு காலணி வகைக்கும் வெவ்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படும். சரியான பொருட்களை சேர்க்காமல் பல அடுக்குகளாக ஃபோம்களை மட்டும் வைப்பது வசதியானதாக அமையாது,” என்றார்.
ஆரம்ப நாட்களில் காலணிகளின் வடிவமைப்பை அல்மாஸ் கையாண்டார். ஷூக்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிய அவர் முதலில் அணிந்து முயற்சி செய்வார். அந்த சிக்கலைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். தற்போது இருபதாண்டுகள் கடந்த நிலையில் அவர் பெண்களுக்கான காலணிகள் விற்பனையை நிர்வகித்து வருகிறார்.
”1989-ம் ஆண்டு காலகட்டத்தில் இணையம் பரவலாக பயன்பாட்டில் இல்லை. ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரை செய்ததன் மூலமாகவே பிராண்ட் பிரபலமானது. எங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இரண்டாண்டுகளில் மும்பையில் இரண்டு ஸ்டோர்களைக் கூடுதலாகத் திறந்தோம். அப்போதிருந்து தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறோம்,” என்றார் அமின்.
அமின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்று அல்மாஸின் நோக்கத்தை விரிவுபடுத்தினார். காலணி சந்தையில் முன்னணி பிராண்டாக உருவாக்கினார். கடின உழைப்பினாலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியினாலும் இந்த வெற்றி சாத்தியமானது என்று குடும்பத்தினர் கருதுகின்றனர்.
அமினின் அப்பா அப்துல் ரசூல் விர்ஜி, உறவினர் ஜலால் விர்ஜி ஆகியோர் தாய் நிறுவனமான ’ரீகல் ஷூஸ்’ நிறுவனத்தை நிர்வகித்து அபார வளர்ச்சியடையச் செய்தனர்.
2001-ம் ஆண்டு ரீகல் ஷூஸ், Inc.5 இரண்டும் இணைப்பட்டு ’Inc.5 ஷூஸ் பிரைவேட் லிமிடெட்’ உருவானது.
தற்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அஹ்மதாபாத், கான்பூர், லக்னோ, புனே உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் Inc.5 நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 163 கோடி ரூபாய்.
சந்தை செயல்பாடுகள்
இந்தியா முழுவதும் உள்ள 300 ஸ்டோர்களில் Inc.5 ஷூக்கள் கிடைக்கிறது. நிறுவனத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதால் விநியோக அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை என்கிறார் அமின்.
அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா, ஜபோங் போன்ற மின்வணிக தளங்களிலும் Inc.5 ஃபுட்வேர் தொகுப்புகள் உள்ளன. ஆனால் 95 சதவீத விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது.
வடிவமைப்பு, இந்திய வாடிக்கையாளர்களுக்கான காலணிகள் தயாரிப்பிற்கான பொருட்கள் போன்றவற்றிற்கு இந்நிறுவனம் அந்நிய நாடுகளின் சந்தைகளை ஆராய்கிறது. Inc.5 ஸ்டோர்களில் Sketchers, Steve Madden, Clarks, Crocs போன்ற மற்ற காலணி பிராண்டுகளும் உள்ளன.
இந்நிறுவனம் தற்போது இலங்கைக்கு அதன் காலணி தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
Inc.5 நிறுவனம் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள டெல்லி, ஆக்ரா, கான்பூர், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆர்டர்கள் வழங்குகிறது. தற்சமயம் இந்நிறுவனத்திற்கென சொந்தமாக உற்பத்தி அலகுகள் எதுவும் பிரத்யேகமாக செயல்படவில்லை.
முக்கிய சவால்கள்
சிறந்த காலணிகளுக்கு தரமான மூலப்பொருட்கள் அவசியம். இந்தியாவில் அத்தகைய பொருட்கள் கிடைப்பது எளிதல்ல. அவர்கள் இந்த முயற்சியைத் துவங்கியபோது இந்தியாவில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கவில்லை. ஏனெனில் நவநாகரீகமான ஸ்டைல்களை இணைப்பது சவாலாகவே இருந்தது. பின்னர் ஷூக்களின் கீழ்ப்பகுதி (சோல்), பக்கிள்ஸ், ஹீல்ஸ் போன்ற பொருட்களை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்தனர்.
தற்சமயம் சீனா, வியட்னாம், தாய்வான் போன்ற நாடுகளில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். மின்வணிகத்துடன் சந்தை மேலும் விரிவடைந்து வருவதால் போட்டி வலுவாகவே உள்ளது.
"இன்று நுகர்வோர் ஆன்லைனில் வாங்குவதை மின்வணிகம் எளிதாக்கியுள்ளது. எனவே இது உலகச் சந்தையாக மாறியுள்ளது. வடிவமைப்பு, இருப்பு, விலை போன்ற அம்சங்களில் சிறந்து விளங்குவது சவால் நிறைந்ததாகவே உள்ளது,” என அமின் விவரித்தார்.
விற்பனை மிகச்சிறப்பாக இருப்பினும் காலணிகளை ஆன்லைனில் விற்பனை செய்வது சவால் நிறைந்ததாகவே உள்ளது. திரும்பப்பெறப்படும் விகிதமும் அதிகமாகவே உள்ளது. அமின் கூறுகையில், “காலணிகளை மக்கள் அணிந்து பார்த்து வாங்கவே விரும்புவார்கள். ஆடைகளைப் பொறுத்தவரை திரும்பக் கொடுப்பது குறித்து சற்று யோசிப்பார்கள். ஆனால் எங்களது துறையில் அவ்வாறு கிடையாது,” என்றார்.
Inc.5 பெண்களுக்கான காலணிகளில் முக்கியக் கவனம் செலுத்தினாலும் Atesner, Privo ஆகிய மற்ற இரு பிராண்டுகளின் வாயிலாக ஆண்களுக்கான காலணிகளை வழங்குகிறது.
எதிர்காலத் திட்டம்
வரும் ஆண்டுகளில் ஸ்டோர்களின் எண்ணிக்கையை இருமடங்காக்குவதிலும் இலங்கையில் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் திட்டமிடப்பட்டு வருவதாக அமின் தெரிவித்தார். Inc.5 ஹேண்ட்பேக் தயாரிப்புகளுக்கான பிரத்யேக ஸ்டோர்கள் அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்த உள்ளது. அத்துடன் ஏற்றுமதிகளை விரிவடையச் செய்வதிலும் கவனம் செலுத்தப்படும் என்றார் அமின்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில் : ஸ்ரீவித்யா