ஆர்கானிக் விவசாயம் மூலம் 12 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் சகோதரர்கள்!
சகோதரர்களான சத்யஜித், அஜின்கியா விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக Two Brothers Organic Farms என்கிற நிறுவனம் தொடங்கி 680-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆர்கானிக் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்கிறார்கள்.
சத்யஜித், அஜின்கியா இருவரும் சகோதரர்கள். இருவருமே கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றினார்கள். இருவருக்குமே இந்த வாழ்க்கையில் திருப்தி கிடைக்கவில்லை.
உடலளவில் சொந்த கிராமத்தை விட்டு வெவ்வேறு நகரங்களுக்குச் சென்றாலும்கூட இவர்களது மனம் கிராமத்தையும் விவசாயத்தையும் சுற்றியே இருந்துள்ளது.
”நான் Citibank-ல் வேலை செய்தேன். அஜின்கியா HSBC-ல் வேலை செய்தார். ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தோம். ஆனால் எங்களுக்கு இதில் ஈடுபாடு இல்லை என்பதை உணர்ந்தோம்,” என்கிறார் சத்யஜித்.
’விவசாயத்தில் ஈடுபடவேண்டாம்’ என்பதே இவர்களது அப்பாவின் அறிவுறுத்தல். விவசாயம் நிலையான தொழில் இல்லை; பொருளாதார ரீதியாக பலனளிக்காது; சமூகத்தில் ஏற்புடைய தொழில் அல்ல போன்றவையே அவர் சுட்டிக்காட்டிய காரணங்கள்.
ஆர்கானிக் விவசாயம்
சகோதரர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்தார்கள். சொந்த ஊர் திரும்பினார்கள். ஆர்கானிக் விவசாயத்தைக் கையிலெடுத்தார்கள். இவர்களுக்கு விவசாயத்தின் மீதும் ஆர்வம் இருந்தது போன்றே தொழில்முனைவிலும் ஆர்வம் இருந்தது.
அப்பாவிற்கு சொந்தமான நிலமும் பரம்பரை நிலமும் இருந்தது. இருவரும் தங்களது சொந்த சேமிப்பைக் கொண்டு 2014-ம் ஆண்டு Two Brothers Organic Farms (TBOF) தொடங்கினார்கள். இந்நிறுவனத்தின் மூலம் ஆர்கானிக் தயாரிப்புகளை விளைநிலங்களில் இருந்து நேரடியாக விற்பனைக்குக் கொண்டு செல்வதே இவர்களது திட்டம்.
பலபயிர் சாகுபடி முறை, இயற்கை உரங்கள் பயன்பாடு போன்றவற்றை முயற்சி செய்து பாரக்க விரும்பினார்கள்.
நிலையான விவசாய முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு பயிர்களை விளைவித்தனர். இவற்றை விற்பனை செய்ததன் மூலம் இந்நிறுவனம் 2021 நிதியாண்டில் 12 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டியுள்ளது.
மால்களில் விற்பனை செய்வது, விவசாயச் சந்தையில் விற்பனை செய்வது எனப் படிப்படியாக விற்பனையை அதிகரித்துள்ளனர். நான்காண்டு கால கடின முயற்சியை அடுத்து நெய், வெல்லம், முருங்கைப் பொடி, மஞ்சள் என பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
டி2சி பிராண்ட்
Two Brothers Organic Farms இந்தியா முழுவதும் விற்பனை செய்வதுடன் கிட்டத்தட்ட 45-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்தத்தில் இந்த பிராண்ட் 680-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சென்றடைந்துள்ளது.
இந்த பிராண்ட் அதன் சொந்த வலைதளம் மூலமாக மட்டுமின்றி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது. இருப்பினும் மின்வணிக தளங்களைக் காட்டிலும் சொந்த வலைதளத்தில் விற்பனை இருமடங்கு இருப்பதாக சத்யஜித் கூறுகிறார்.
“அமேசான் மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்களும் இருப்பதால் தொடர்ந்து அதன் மூலம் விற்பனை செய்து வருகிறோம்,” என்கிறார்.
மக்களுக்கு தயாரிப்புகளின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதிலும் வலைதளத்தில் இணைந்திருக்கச் செய்வதிலும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.
Two Brothers Organic Farm குறித்து பிளாக் எழுதப்படுகிறது; இதன் நடவடிக்கைகள் வீடியோக்களாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ‘ஆர்கானிக் ஃபார்மிங் கிளப்’ தொடங்க புனேவில் உள்ள பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. பல வகையான ஆர்கானிக் விவசாய நுட்பங்கள் குறித்து சுமார் 9,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.
தனித்துவம்
இந்தியாவில் Organic India, Organic Tattva, Dabur, Patanjali, Pro Nature Organic Foods என எத்தனையோ ஆர்கானிக் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன.
“சந்தையில் உள்ள பெரும்பாலான பிராண்டுகள் நுகர்வோர் சார்பில் ஆர்கானிக் பொருட்களைத் திரட்டுகிறார்கள். எந்த ஒரு பிராண்டும் ஒரு விவசாயிக்கு சொந்தமானதாக இருப்பதில்லை. இந்த பிராண்டுகள் விவசாயம் குறித்துகூட அறிந்திருக்காது,” என்கிறார்.
சகோதரர்கள் இருவரும் விவசாய பின்புலம் கொண்டவர்கள். விளைநிலத்தை நேரடியாகக் கையாண்ட அனுபவமிக்கவர்கள். இதனால் போட்டியாளர்களைக் காட்டிலும் சிறப்பான புரிதல் இவர்களிடம் இருப்பதே தனித்துவமான அம்சமாகக் கருதப்படுகிறது.
தொழில்நுட்பத்துடன்கூடிய வளர்ச்சி
விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள சத்யஜித் திட்டமிட்டுள்ளார்.
நிலத்தில் அமைக்கும் வகையில் வெதர் ஸ்டேஷனை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இந்த ஸ்டேஷனில் சிம் கார்டு இருக்கும். இது காற்றின் ஈரப்பதம், வேகம், பூச்சிகளின் தாக்குதல் போன்றவற்றைக் கண்காணிக்கும். இந்தத் தகவல்கள் TBOF குழுவினருக்கு மொபைல் மூலம் கிடைக்கும்.
புத்திசாலித்தனமாகவும் தரவுகள் சார்ந்தும் வணிகத் தீர்மானங்கள் எடுப்பதற்காக ERP சிஸ்டம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பது இளைஞர்களின் கருத்தாக உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை மாற்றவும் இந்தச் சகோதரர்கள் விரும்புகிறார்கள்.
”ஐடி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, விவசாயியின் நிறுவனமும் இடம்பெறமுடியாதா என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் இந்தச் சகோதரர்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா