இந்தியாவின் முதல் 'காகிதமில்லா பட்ஜெட்' - ‘மேட் இன் இந்தியா’ டேப்லெட்டில் மத்திய பட்ஜெட் தாக்கல்!
காகிதமில்லாத பட்ஜெட் ஆக பட்ஜெட் 2021 தாக்கல்!
வரலாற்றில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் 2021 காகிதமில்லாத பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக 'காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்' என்பதால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பஹி காட்டா’ எனப்படும் கணக்கு லெட்ஜர்கள் அதாவது வழக்கான பட்ஜெட் ஆவணங்களுக்குப் பதிலாக இந்த முறை 'மேட் இன் இந்தியா' டேப்லெட்டுடன் பட்ஜெட் அமர்வுக்கு வருகை புரிந்தார்.
வழக்கமாக பட்ஜெட் ஆவணங்கள் ஒரு தோல் ப்ரீஃப்கேசில் எடுத்துச் செல்லப்படும். ஆனால், 2019 ஆம் ஆண்டில், அந்த நீண்டகால பாரம்பரியத்தை மாற்றினார் நிர்மலா சீதராமன். ப்ரீஃப்கேசிற்கு பதிலாக 'பஹி-கட்டா' எனப்படும் சுதேசி துணிப் பையில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்துவந்தார். இதுகுறித்து கேட்டதற்கு மோடி அரசு ஒரு ‘சூட்கேஸ் சுமக்கும் அரசு’ அல்ல என்று நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனிடையேதான் இதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் நாட்டின் முதல் 'டிஜிட்டல்' பட்ஜெட்டை’ வழங்கி வருகிறார். முன்னதாக பட்ஜெட் ஆவணங்கள் ஒரு டேப் (Tablet) மூலம் வாசிப்பதற்காகக் கொண்டுவந்த நிர்மலா சீதாராமன், ஒரு சிவப்பு வண்ண உரைக்குள் அதை வைத்து எடுத்து வந்தார்.
மேலும் அதில் தங்க நிறத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. இது நிச்சயமாக, 'மேட் இன் இந்தியா' சாதனத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
பட்ஜெட்டில் உள்நாட்டு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக ஒரு வலுவான அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ -க்கு அழைப்பு விடுத்தார் நிர்மலா சீதாராமன். இது அரசாங்கம் மேட் இன் இந்தியா பிராண்டுகளில் கவனம் செலுத்துவதற்கும் நிதியளிப்பதற்கும் வழிவகுத்தது.
இதேபோல், பட்ஜெட் 2021க்கு முன்னதாக, நிதி அமைச்சகம் யூனியன் பட்ஜெட் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
முக்கியப் பங்குதாரர்கள், எம்.பி.க்கள், ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு பட்ஜெட் 2021 தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ஆவணங்களுக்கும் இந்த ஆப் எளிதான மற்றும் தொந்தரவில்லாத அணுகலை வழங்கும். இதை "டிஜிட்டல் வசதிக்கான எளிய வடிவம்" என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
“இந்த மொபைல் ஆப், 14 யூனியன் பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக அணுக உதவுகிறது, இதில் ஆண்டு நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படுகிறது), மானியங்களுக்கான தேவை (டிஜி), நிதி மசோதா போன்றவை அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன."
இந்த ஆப்பை பொருளாதார விவகாரத் துறை (டி.இ.ஏ) வழிகாட்டுதலின் கீழ் தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி) உருவாக்கியுள்ளது. இதை யூனியன் பட்ஜெட் வலை போர்ட்டலிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
மேற்கூறிய அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் உரையை முடித்த பின்னர் மொபைல் ஆப்பில் கிடைக்கும்.
தொகுப்பு: மலையரசு