அந்த தவறான முடிவெடுத்ததற்கு வருத்தம் தெரிவிக்கும் பிரபல வணிகத் தலைவர்கள்!
எலான் மல்ஸ், ரத்தன் டாடா, ஜாக் மா என தாங்கள் செய்த தவறுக்காக வருத்தப்பட்ட சில பிரபல வணிகத் தலைவர்களைப் பற்றி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
நம் எல்லோருக்குமே யாரோ ஒருவர் ரோல் மாடலாக இருப்பார்கள். இந்த ரோல் மாடல்கள் யார்? எப்படி இந்த அந்தஸ்தைப் பெற்றார்கள்? இவர்கள் வெற்றியாளர்களா? அப்படியானால் இவர்கள் தோல்வியை சந்தித்திருக்கவே மாட்டார்களா? தவறு செய்திருக்கவே மாட்டார்களா? எதிலும் வெற்றி மட்டும்தானா? என்ற கேள்விகள் எழலாம்.
ஏதோ ஒரு தருணத்தில் சிறு சறுக்கல்களையோ தோல்வியையோ சந்திக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதேபோல், தவறு செய்வதும் இயல்புதான். ஆனால், அந்தத் தவறை மீண்டும் செய்யாமல் உடனே அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளும் பக்குவம் இருந்தால் நிச்சயம் எல்லோராலும் வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் மாறமுடியும்.
நாம் எடுக்கும் எல்லா முடிவும் எல்லா நேரங்களிலும் சரியாக இருந்துவிடுவதில்லை. மிகப்பெரிய வணிகத் தலைவர்களும் ஆரம்ப நாட்களில் எத்தனையோ முடிவுகளைத் தவறாக எடுத்ததுண்டு. அதை நினைத்து வருத்தப்பட்டதும் உண்டு. அதை அவர்களே பொதுவெளியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதும் உண்டு.
எலான் மல்ஸ், ரத்தன் டாடா, ஜாக் மா என தாங்கள் செய்த தவறுக்காக வருத்தப்பட்ட சில பிரபல வணிகத் தலைவர்களைப் பற்றிப் பார்ப்போம்:
ஜாக் மா
அலிபாபா நிறுவனம் தன் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய தவறு என்கிறார் ஜாக் மா. 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இண்டர்நேஷனல் எக்கனாமிக் ஃபோரம் நிகழ்வில் ஜாக் மாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
’நீங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக எதை நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜாக் மா,
“அலிபாபா நிறுவனம் என் வாழ்க்கையை இந்த அளவிற்கு மாற்றிவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் சிறியளவில் தொழில் செய்ய விரும்பினேன். ஆனால், அலிபாபா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்ததே எனக்குப் பிரச்சனையாகிவிட்டது. தினமும் ஜனாதிபதி போல் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். இருந்தும் என்னிடம் அதிகாரம் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இல்லை. ஒருவேளை வாழ்க்கையை மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்தால், இதுபோன்ற வணிகத்தை நிச்சயம் கட்டமைக்கமாட்டேன். என் வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பேன்,” என பதிலளித்திருக்கிறார்.
ரத்தன் டாடா
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு பிராஜெக்ட் என்றால் அது நானோ கார் பிராஜெக்ட்தான். ஆனால், ரத்தன் டாடா எதிர்பார்த்த அளவிற்கு இந்த கார் மக்களின் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் நானோ கார் தயாரிப்புப் பணிகள் நிறுத்திக்கொள்ளப்பட்டன.
2015-ம் ஆண்டு கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் பட்டமளிப்பு விழாவில் ரத்தன் டாடா மாணவர்களிடம் உரையாடினார். அப்போது,
நானா காரை ’மலிவு விலை கார்’ என பிராண்ட் செய்து தவறு செய்துவிட்டதாக தெரிவித்தார். குறைந்த விலையில் தரமான கார் வழங்கவேண்டும் என்பதே நிறுவனத்தின் நோக்கம். விலை மட்டும்தான் குறைவே தவிர மதிப்பு அதிகம் என்பதால் ’எக்கனாமிக்கல் கார்’ என பிராண்ட் செய்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாரன் பஃபெட்
பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனர் மற்றும் சிஇஓ வாரன் பஃபெட் அவர் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவைப் பற்றி அவரே தெரிவித்திருக்கிறார். தன் நிறுவனத்தின் 50வது ஆண்டு நிறைவில் பங்குதாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் தான் செய்த தவறு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது,
பெர்க்ஷையர் நிறுவனத்தை வாங்கி முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். மலிவு விலையில் கிடைத்த ஒரே காரணத்திற்காக இந்நிறுவனத்தை வாங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன என்பதை வரையறுக்காமல் போனது தன்னுடைய மிகப்பெரிய தவறு என்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
2018-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திரட்டி தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பெர்க்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது வணிக பயணத்தில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மைக்ரோசாப்டில் ஆண்ட்ராய்ட் உருவாக்கியது தான் செய்த மிகப்பெரிய தவறு என்கிறார். இந்த தவறு காரணமாக 400 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். போன் ஆப்பரேடிங் சிஸ்டத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என நியூயார்க் டைம்ஸ் டீல் புக் கான்ஃப்ரன்ஸின்போது நடந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருக்கிறார்.
சாஃப்ட்வேர் உலகைப் பொருத்தவரை மொபைல் பிளாட்ஃபார்மில் வெற்றி பெற்றவர்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் போன் ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்று மக்கள் ஆண்ட்ராய்டிற்கு பதிலாக விண்டோஸ் மொபைல் பயன்படுத்தியிருப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எலான் மஸ்க்
டெஸ்லா சிஇஓ-வும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க், 2018ம் ஆண்டு நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்வு ஒன்றில் தான் இழைத்த மிகப்பெரிய தவறு என்ன என்பதைத் தெரிவித்திருக்கிறார். அதாவது,
ஆரம்ப நாட்களில் டெஸ்லா நிறுவனத்திற்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை என்றும் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். SpaceX செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இதுவே தான் செய்த மிகப்பெரிய தவறு என்கிறார்.
2004-2008 ஆண்டுகளில் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக இருந்த சமயத்தில் SpaceX நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: ஹிந்தி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா