பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள 5 இந்திய தொழிலதிபர்கள் பட்டியல் இதோ!
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் நாட்டை விட்டு தப்பி ஓடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்தியாவில் எத்தனையோ தொழில்கள் வெற்றி கண்டுள்ளன. எத்தனையோ தொழிலதிபர்கள் உருவாகியிருக்கின்றனர். சிலர் மக்களுக்கு பயனுள்ள வகையில் வணிக முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் சிலர் மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றி மோசடியும் செய்துள்ளனர்.
அந்த வகையில் மோசடியில் ஈடுபட்ட 5 பிரபல தொழிலதிபர்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஹர்ஷத் மேத்தா
ஹர்ஷத் மேத்தா மும்பை பங்குச் சந்தையின் தரகர். 1992ம் ஆண்டு மும்பை பங்கு சந்தையின் பங்குகளை வாங்கி விற்றதில் 4025 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஹர்ஷத் மேத்தா ஒரு குறிப்பிட்ட உத்தியை பின்பற்றினார். முதலில் சில பங்குகளை வாங்குவார். அதைத்தொடர்ந்து அந்த பங்குகளின் விலை உயரும். மக்கள் அந்தப் பங்குகளில் அதிகளவில் பணத்தை முதலீடு செய்வார்கள். பங்குகளின் விலையை உச்சத்தை எட்டும். அந்த சமயத்தில் அதிக லாபத்துடன் வெளியேறிவிடுவார்.
போலி ஆவணங்களின் அடிப்படையில் வங்கியில் கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்வார். இந்த வங்கிக் கடனை அடைக்க வேறொரு வங்கியில் கடன் வாங்குவார். இப்படி தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பொதுத் துறை வங்கிகளில் அதிக தொகையைப் பெற்று மோசடி செய்திருக்கிறார்.
ராஜு ராமலிங்கம்
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உரிமையாளர் ராஜு ராமலிங்கம் அந்நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் பல ஆண்டுகளாக சுமார் 7800 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை ராஜு ராமலிங்கம் மோசடி செய்துள்ளார்.
1987-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் மோசடி விவகாரம் 2009-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. 5000 ரூபாய் வங்கிக் கணக்கில் இருப்பு இருப்பதாக தவறாக கணக்கு காட்டியுள்ளது. ராஜு ராமலிங்கத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
விஜய் மல்லையா
தொழிலதிபர் விஜய் மல்லையா எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளில் 9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் 1600 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து பிஎன்பி வங்கியில் 800 கோடி ரூபாயும் ஐடிபிஐ வங்கியில் 650 கோடி ரூபாயும் கடன் வாங்கியிருக்கிறார்.
2005-ம் ஆண்டு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடங்கினார். ஐந்தாண்டுகளிலேயே இந்நிறுவனம் மூடப்பட்டது. கடனை திருப்பி செலுத்த மற்றொரு கடன் வாங்கியிருக்கிறார். இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தபோது அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கு பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கம் கடினமாக முயற்சி செய்து வருகின்றன.
சுப்ரதா ராய் சஹாரா
சஹாரா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான சஹாரா ஹவுசிங் மற்றும் சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பேரில் கடனீட்டுப் பத்திரங்கள் கொண்டு முறைகேடாகப் பணம் திரட்டியும் பங்குதாரர்களுக்கு முறையாக பங்கீட்டுத் தொகை அளிக்காமலும் சுமார் 24,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் சுப்ரதா ராய் சஹாரா.
நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் என பல கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார். இவற்றிற்கு செபியின் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. முதலீட்டாளர்களிடம் வசூல் செய்த பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால் 2014-ம் ஆண்டு சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நிரவ் மோடி
வைர வியாபாரி நிரவ் மோடி தனது தாய்மாமா மெகுல் சோக்ஸியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இந்த விவகாரம் 2018-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர். லண்டனில் கைது செய்யப்பட்ட இவர் அங்கு சிறையில் இருந்து வருகிறார்.
2011-ம் ஆண்டு நிரவ் மோடி வைரம் இறக்குமதி செய்வதற்காக பிஎன்பி வங்கிக் கிளையில் போலியாக எல்.ஓ.யூ எனப்படும் வங்கி உத்திரவாதம் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் வெளிநாட்டு வங்கிக் கிளைகள் கடன் வழங்கியுள்ளன. 2018-ம் ஆண்டு நிரவ் மோடி பிஎன்பி வங்கியில் மீண்டும் மோசடி செய்ய முயற்சி செய்தபோது புதிய அதிகாரிகள் இந்த மோசடியைப் பற்றி கண்டுபிடித்தனர். அப்போதுதான் இந்த விவகாரம் பொதுவெளிக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழில்: ஸ்ரீவித்யா