Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

120 முதியோர்களை முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வைத்த தொழிலதிபர்!

விமானத்தில் பயணம் செய்யும் அனுபவத்தை தனது கிராமத்தைச் சேர்ந்த முதியோர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கியுள்ளார் கோவை அவினாசி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்.

120 முதியோர்களை முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வைத்த தொழிலதிபர்!

Tuesday February 12, 2019 , 2 min Read

நாம் துணிந்து ஒரு செயலில் ஈடுபட்டால் எப்பேர்ப்பட்ட கனவையும் நனவாக்கிவிட முடியும்.

தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் 44 வயதான எம் ரவிக்குமார். தொழிலதிபரான இவர் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களின் கனவை நனவாக்க விரும்பினார்.

பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரவிக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து 4 லட்ச ரூபாய் திரட்டினார். அந்தத் தொகையைக் கொண்டு தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 120 முதியோர்கள் கோயமுத்தூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்தார்.

102 வயதான குப்பாத்தாள் தனது வாழ்நாளில் முதல் முறையாக விமானத்தில் ஏறியதாக தெரிவித்தார். இவரைப் போன்றே இந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் 119 பேர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கோயமுத்தூரைத் தாண்டி பயணித்ததில்லை என ரவிக்குமார் குறிப்பிட்டார்.

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கனவு. எனவே விமானத்தில் பயணம் செய்ய விரும்புபவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்தேன். சில நண்பர்களின் உதவியுடன் அவர்களது பயண செலவிற்கான தொகையைத் திரட்டினேன்.

இவர்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறையில் பணிபுரிந்த பெண்கள். இந்த 120 பேரும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

தனது முதல் விமான பயணம் குறித்து 57 வயதான ஜி வள்ளியம்மாள் கூறுகையில்,

”என்னுடைய வாழ்நாளில் நான் விமானத்தில் பயணம் செல்வேன் என்று கற்பனையிலும் நினைத்ததில்லை. எங்களில் பெரும்பாலானோர் ரயிலில்கூட பயணம் மேற்கொண்டதில்லை,” என்றார்.

63 வயதான சரஸ்வதி கூறுகையில்,

"இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு முறை விமானம் கடந்து செல்லும்போதும் அதை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பேன். இது எனக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருக்கும்,” என்றார்.

ரவிக்குமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக முதல் முறையாக கொல்கத்தாவிற்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதன் பிறகு தனது கிராமவாசிகளை விமானத்தில் பயணம் செய்யவைத்து மகிழ்விக்கவேண்டும் என விரும்பினார். அந்த பயணத்திற்கு பிறகு அவர் ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும்போதும் அவரது விருப்பம் அதிகரிக்கத் துவங்கியது.

”மறைந்த என்னுடைய அப்பா கிராம மக்களிடம் மிகுந்த அன்பு காட்டினார். அவர்களுக்காக நிறைய நற்பணிகள் செய்துள்ளார். அந்த மரபை நானும் முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA