300 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் பங்காற்றிய Byju's நிறுவனரின் 6 வயது மகன்!
யூனிகார்ன் நிறுவனமான பைஜுஸ் அண்மையில் மும்பையைச் சேர்ந்த ‘WhiteHat Jr.’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான Byju’s, மும்பையைச் சேர்ந்த ‘ஒயிட்ஹேர் ஜேஆர்’ (WhiteHat Jr.) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கையகப்படுத்தியதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்நிறுவனம், ஆறு வயது முதல் 14 வயதான பள்ளிக்குழந்தைகள் கோடிங் கற்றுக்கொள்ளவும், செயலிகள் உருவாக்கவும் ஆன்லைனில் பயிற்சி அளிக்கிறது.
இந்நிறுவனத்தை பைஜுஸ் 300 மில்லியன் டாலர் ரொக்க ஒப்பந்தத்தில் கையகப்படுத்தியது.
பைஜுஸ் நிறுவனர் மற்றும் சி.ஒ.ஓ பைஜு ரவீந்திரன் மற்றும் WhiteHatJr நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கரன் பஜாஜ் இடையே ஆறு வார காலத்தில், வாட்ஸ் அப் செய்திகள், ஜூம் அழைப்புகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. கையக்கப்படுத்தலுக்குப்பிறகும் கரண் பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவார்.
பள்ளி மாணவர்களுக்கு கோடிங் கற்றுத்தரும் பிரிவில் பைஜுஸ் நிறுவனத்தை நுழைய வைத்துள்ள இந்த ஒப்பந்தத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பைஜுஸ் நிறுவனரின் ஆறு வயது மகன் நிஷ் இதில் முக்கியப் பங்காற்றியது தான்.
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில், WhiteHatJr நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையை துவக்கிய நேரத்தில், இந்த சேவையை ஆய்வு செய்ய தனது ஆறு வயது மகனுக்கு அதை அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறினார் பைஜு.
“என் மகன் இந்த சேவையை பயன்படுத்துகிறான். 6 வாரங்களுக்கு முன் தான் WhiteHatJr சேவையை அறிமுகம் செய்தேன். அதை ஆய்வு செய்வதும் நோக்கமாக இருந்தது. அவனுக்கு ஏற்பட்ட உற்சாகம் மட்டும் அல்லாமல், கட்டண பயனாளிகளின் நெட் புரோமோட்டர் ஸ்கோரும் திருப்திகரமாக இருந்தது என்னைக் கவர்ந்தது. இது பைஜூஸ் போலவே இருந்தது,” என்கிறார் ரவீந்திரன்.
என்.பி.எஸ், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வர்த்தக வளர்ச்சியை கணிக்கிறது. நிறுவன சேவை தொடர்பான வாடிக்கையாளர் திருப்தியை அளவிட உதவுகிறது.
வெற்றிக்கு ஆறு வாரம்
ஒயிட்ஹேட் ஜேஆர் நிறுவனம் பைஜுஸால் கையக்கப்படுத்தப்படும் ஐந்தாவது நிறுவனமாகும். ஒரு வாட்ஸ் அப் செய்தியில் இது எளிமையாக துவங்கியது என்கிறார் ரவீந்திரன்.
“என்னைப்பொருத்தவரை இது எளிதாக இருந்தது. ஆறு வாரங்களுக்கு முன் தான் கரணை சந்தித்தேன். ஒரு எளிமையான வாட்ஸ் அப் செய்து மற்றும் அதன் பிறகு ஜூமில் பேசிக்கொண்டோம். அவர்கள் என்ன உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தொடர்பான தொலைநோக்கை என்னால் பார்க்க முடிந்தது. உடனே எங்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டது,” என்கிறார் அவர்.
கடந்த ஆண்டு துவக்கத்தில், பைஜுஸ் அமெரிககவைச் சேர்ந்த கல்வி கேம் உருவாக்கும் நிறுவனமான ஆஸ்மோவை 120 மில்லியன் டாலருக்கு வாங்கியது. இப்போது மேற்கொண்டுள்ள கையகப்படுத்தல் அமெரிக்காவில் பைஜுஸை வலுப்படுத்த உதவும்.
ஏனெனில் WhiteHatJr நிறுவனம் அமெரிக்காவில் 20,000 கட்டணp பயனாளிகளைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் 60 சதவீத வருவாய் இதன் மூலம் வருகிறது. எஞ்சிய வருவாய் இந்தியாவில் இருந்து வருகிறது.
பைஜுஸ் இதற்கு முன் மேத் அட்வன்சர்ஸ், டுயூட்டர் விஸ்டா, வித்யானாத் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. WhiteHatJr நிறுவன கையகப்படுத்தலை பொருத்தவரை, இப்போது கொரோனா சூழலில் ஒரு அங்கமாகியிருக்கும் ஆன்லைன் சந்திப்புகள் மூலம் இந்த ஒப்பந்தம் எளிதாக உண்டாதாக ரவீந்திரன் கூறுகிறார்.
“ஆறு வாரங்களில் ஒப்பந்தத்தை முடித்தோம். இப்போது மாணவர்கள் ஆன்லைன் கல்வி எத்தனை சிறப்பாக இருக்கும் என உணர்வது போல, ஆன்லைன் சந்திப்புகள் எத்தனை சிறப்பாக இருந்ததால், முடிவை வேகமாக எடுக்க முடிந்தது,” என்கிறார் அவர்.
“ஆன்லைன் வழியில் செயல்படுவதன் பலன்களை உணர்பவர்கள், நெருக்கடிக்கு பிறகும் இதே போல செயல்படுவதை தொடரலாம். நெருக்கடிக்கு பிறகும் நீங்கள் அதிக ஆன்லைன் சந்திப்புகளில் ஈடுபடப்போவதாக நம்புகிறேன். மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடர இருப்பது போலவே இதுவும்” என்கிறார் அவர்.
நம்பிக்கை முக்கியம்
கையகப்படுத்தலை பொருத்தவரை நம்பிக்கை முக்கியம் என்கிறார் ரவீந்தரன். “எனவே நாங்கள் இந்த கையகப்படுத்தல்கள் குறித்து யோசித்துக்கொண்டிருப்பதில் அதிக நேரத்தை வீணடிப்பதில்லை. நம்பிக்கையை உருவாக்கியதும் வேகமாக நகர்வுகளை மேற்கொள்கிறோம்,” என்கிறார்.
“இப்போது முதலீடு கையில் இருப்பது ஒரு விதத்தில் எல்லாவற்றையும் எளிதாக்குகிறது. ஏனெனில் இவற்றை வேகமாக முடிவெடுத்து நிறைவேற்றலாம். பல நேரங்களில் செயலாக்க வேகம் முக்கியம். சில நேரங்களை ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியம்.”
பைஜுஸ் உலகில் அதிகம் நிதி பெற்ற கல்வி ஸ்டார்ட் அப்பாக இருக்கிறது. 16 சுற்றுகளில் 1.6 பில்லியன் நிதி திரட்டியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், சீனாவின் டென்சண்ட் நிறுவனம், தென்னாப்பிரிக்காவின் தனியார் ஈக்விட்டி நிறுவனம் நேஸ்பர்ஸ், சிலிக்கான் வேலி முதலீட்டாளர் மார்க் மீக்கரின் பாண்ட் கேபிடல் உள்ளிட்டோர் இதில் முதலீடு செய்துள்ளனர்.
மழலையர் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழங்கும் மற்றும் மருத்துவ, பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி ஆளிக்கும் பைஜுஸ், இந்தியாவின் இரண்டாவது மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்’பாக இருக்கிறது. 16 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பேடிஎம் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த நிதிச் சுற்றில் பைஜுஸ் 10.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்பட்டது.
WhiteHatJr ஒப்பந்தத்தை பொருத்தவரை இரண்டு விஷயங்கள் முக்கியமாக அமைகிறது என்கிறார் ரவீந்திரன்.
“ஒன்று; முக்கிய எதிர்காலத் திறனான கோடிங்கை இது எங்கள் சேவையில் சேர்க்கிறது. மாணவர்களும், பெற்றோர்களும் இதை உணர்வார்கள். இரண்டாவதாக அமெரிக்காவில் துவங்கி எங்கள் சர்வதேச விரிவாக்கத்தை வேகமாக்க இது உதவும்,” என்கிறார் அவர்.
ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா