இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் ஆன பைஜூ ரவீந்திரன்!
கொரோனா தாக்கத்தால் தொழில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இந்நிலையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியல் இதோ:
கொரோனா வைரஸ் உலகமெங்கும் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பொருளாதாரம், தொழில் மற்றும் வர்த்தகத்தை ஒரு கை பார்த்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.
அடுத்து வரவிருக்கும் காலமும் சற்று கடினமாகவே இருக்கிறது. பல பெரிய ஜாம்பவான்கள் கூட சரிந்திடும் அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளது இந்த கொள்ளை நோய் கொரோனா.
இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 23 சதவீதம் குறைந்து $313 பில்லியன் என்ற அளவில் இந்த ஆண்டு இருக்கிறது. கோடீஸ்வரர்களின் மொத்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது என ஃபோர்ப்ஸ் பில்லியனர்ஸ் லிஸ்ட் 2020 தெரிவிக்கிறது. ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
BYJU's நிறுவனர் பைஜூ ரவீந்திரன் இந்தியாவின் இளம் பில்லியனராக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டுள்ளார். 39 வயதான பைஜூ, இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் சுமார் $1.8 பில்லியன் மதிப்புடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக முதன்முறை என்ட்ரி கொடுத்துள்ளார். இவருடன் 12 புதிய நபர்கள் இப்பட்டியலில் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் போன்று, ரிடெயில் ஜாம்பவான் ‘DMart’ நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானி, இந்த கடின காலக்கட்டத்திலும் பெரும் அளவில் லாபம் பார்த்துள்ள நபராக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது போட்டியாளர்களான பெரிய வர்த்தகர்கள் சப்ளை செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் பெறுத்த நஷ்டம் அடைந்துள்ள சூழலிலும், தமானி தனது சில்லறை வர்த்தகச் சங்கிலி சூப்பர் மார்கெட் வர்த்தகத்தால் லாபம் அடைந்துள்ளார்.
தமானியின் சொத்து மதிப்பு 25% அதிகரித்து $13.8 பில்லியன் என்ற மதிப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் இவர் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.
இவருக்கு மேல் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். இந்த கொரோனா பாதிப்பால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட பாதியை இழந்துள்ளார். பங்குச்சந்தை சரிவு, பன்னாட்டு எண்ணெய் விலை பிரச்சனைகள் இவரின் இந்த நஷ்டத்துக்கு காரணம்.
அதுமட்டுமின்றி அம்பானி, அலிபாபா நிறுவனர் ஜாக் மாவிடம் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தையும் இழந்துள்ளார். தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து $36.8 பில்லியன் என்ற அளவில் உள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.
பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மற்ற கோடீஸ்வரர்கள்: HCL நிறுவனர் ஷிவ் நாடார் 3ம் இடத்திலும், கோட்டக் மஹிந்திரா வங்கி சி இ ஒ உதய் கோடக் 4ம் இடத்திலும் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு $11.9 பில்லியன் மற்றும் $10.4 பில்லியன் அளவில் உள்ளது. கவுதம் அதானி $8.9 பில்லியனுடன் (5ம் இடம்), சுனில் மிட்டல் $8.8 மில்லியன் 6ம் இடத்தில் உள்ளனர்.
விப்ரோ தலைவர் அசிம் ப்ரேம்ஜி தனது சொத்தில் $21 பில்லியனை நன்கொடையாக வழங்கியதால் அவர் பட்டியலில் டாப் 5ல் இல்லை. அவரது தற்போதைய சொத்து மதிப்பு $6.1 பில்லியனாக உள்ளது. இவர் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
அசிம் ப்ரேம்ஜியின் இந்த கொடையால் இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பும் வெகுவாக குறைந்ததற்குக் காரணம்.
ஆங்கிலத்தில்: சோஹினி | தமிழில்: இந்துஜா