'Byju's காணாமல் போகும் என்றவர்களுக்கு நான் சொல்வது சான்சே இல்லை...’ - TechSparks-இல் பைஜு ரவீந்திரன்!
யுவர்ஸ்டோரி ஆண்டு விழாவான ‘TechSparks'-இல மனம் திறந்து பேசிய பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன். தங்கள் நிறுவனத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
யுவர் ஸ்டோரியின் டெக்ஸ்பார்க் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு சிறப்பாக தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில்
நிறுவனத்தின் பைஜு ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் பங்கேற்றனர். பைஜூஸ் நிறுவனத்தை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வரும் சுழலில், அனைத்து சர்ச்சைக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசினார் பைஜூ ரவிந்திரன்.பணியாளார்கள் நீக்கம் குறித்து முதல் கேள்வியை யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரதா சர்மா கேட்டார். அதற்கு பதிலளித்த திவ்யா,
“கடந்த ஆறு மாத காலமாக நடப்பது கடினமான முடிவுதான். ஆனால் வேறு வழியில்லை. இந்த கடினமான முடிவை நாங்கள் எடுத்துதான் ஆக வேண்டும். இந்தச் சூழலில் இது தேவையான முடிவு. கடந்த சில ஆண்டுகளாக பல நிறுவனங்களை நாங்கள் வாங்கினோம். அவை அனைதையும் சீர் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால்தான் 5 சதவீத பணியாளர்களை நீக்க வேண்டி இருந்தது. இது எங்களுக்கும் மனவலியை கொடுக்கிறது,” என்றார்.
நாங்கள் ஐந்து சதவீத பணியாளார்களை நீக்கியதுதான் வெளியில் தெரியும். ஆனால், இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பு வழங்கும் 30 நிறுவனங்களில் பைஜூஸ் நிறுவனமும் இருக்கிறது, இந்தப் பட்டியலில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ் மட்டுமே, என்றார் பைஜூ.
மேலும், கோவிட்டுக்குப் பிறகு அதிகளவுக்கு ஆசிரியர்களை குறிப்பாக பெண்களை பணிக்கு எடுத்தோம். வரும் காலத்தில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், என்று கூறினார்.
நிறுவனத்தின் நிதி நிலை குறித்து சில மாதங்களாக சர்ச்சை இருகிறதே என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் பைஜூ ரவீந்திரன்.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம், கடன் வழங்குவதில் உருவான செயற்கையான சிக்கல். கோவிட் வந்த பிறகு எங்களது புராடக்ட்களை பயன்படுத்துவதற்கு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மறுத்துவிட்டன. அந்த சமயத்தில் நிறுவனத்தின் வசம் பணம் இருந்ததால் நாங்கள் கடன் கொடுத்தோம். அதனால் செலவு அதிகரித்ததது.
இந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஆறு மாதமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நடப்பு நிதி ஆண்டில் எங்களது செலவு பாதியாக குறைந்திருக்கும். அதேபோல், 3.5 மடங்கு அளவுக்கு வளர்ந்திருப்போம். நிதி நிலைமைக்கு இதுதான் காரணம், என்றார்.
தொழிலில் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். அந்த துணிச்சலான முடிவில் 10-ல் ஒரு முடிவுதான் பெரிய வெற்றி அடையும் என பைஜு ரவீந்திரன் பேசினார்.
பலபேரின் வேலையை பறித்துவிட்டு, கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பைஜூஸ் தூதுவராக நியமனம் செய்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது, என்னும் கேள்விக்கு பதிலளித்த பைஜூ,
“திடீரென ஐந்து நாளில் மெஸ்ஸியை தூதுவராக நியமனம் செய்ய முடியாது. இந்த முடிவு சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. மேலும், ஊடகங்களில் வெளியானதுபோல அவரை கொண்டுவர சில நூறு கோடிகள் எல்லாம் செலவு செய்யப்பட வில்லை. எவ்வளவு தொகை என்பதை தெரிவிக்க முடியாது. ஆனால், பெரிய தொகையில்லை. மெஸ்சியால் நடக்கப்போகும் தாக்கம் மட்டுமே முக்கியம்,” என்று பேசினார்.
நீங்கள் கையகப்படுத்திய நிறுவனங்கள் சரியில்லையா என்னும் கேள்விக்கு நாங்கள் கையகப்படுத்திய பெரும்பாலான நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன Whitehat Jr மட்டுமே சிறப்பாக இல்லை. ஆகாஷ் மூன்று மடங்கு அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் நாங்கள் வாங்கிய நிறுவனங்களும் 40 சதவீதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அதனால் நாங்கள் வாங்கிய நிறுவனங்கள் சிறப்பாக இல்லை என்பதை ஏற்க முடியாது, என்றார்.
கடந்த சில நாட்களாக, பைஜூஸ்-இல் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக இந்நிறுவனம் முடிவுக்கு வரும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது பற்றி விளக்கிய பைஜூ ரவீந்திரன்,
”பைஜூஸ் காணமால் போகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு சான்சே இல்லை... அவர்களின் எண்ணம் நிறைவேறாது. நாங்கள் கண்டெண்டுக்காக 1.3 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறோம். இந்த அளவுக்கு தொகையை யாரும் இதுவரை முதலீடு செய்வதில்லை. அதனால் நாங்கள் சரிய வாய்பில்லை,” என்று கூறினார்.
மேலும், எஜுடெக் துறை இப்போதுதான் வளர்ந்துவருகிறது என்று கூறிய அவர், வெறும் பணம் ஈட்ட இந்நிறுவனத்தை தொடங்கவில்லை என்றும், எங்களின் நீண்டகால கனவான அனைவருக்கும் கல்வியை சுலபமாக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம், என்று அழுத்தமாக பதிவு செய்தார் பைஜூ ரவிந்திரன்.
Tech30 - சிறந்த எதிர்காலத்தை கொண்ட 30 இந்திய ஸ்டார்ட் அப்கள் TechSparks விழாவில் வெளியீடு!