'புதுயுக தொழில் முனைவு'- சரித்திரமும், பரிமாணங்களும்!
"புதுயுக தொழில்முனைவு" என்ற தொழில் உலக பரிணாம வளர்ச்சி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த முதல் அத்தியாயத்தில் புதுயுக தொழில்முனைவு என்பதற்கான வரையறை என்று ஏதாவது இருக்கிறதா? எவையெல்லாம் புதுயுக தொழில்முனைவு? அப்படியானால் பழைய யுக தொழில் முனைவு என்பது எப்படி வரையறை செய்யப்படுகிறது? இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? எதிர்காலம் எப்படியான தொழில் முனைவுகளை வரவேற்கும்? புதுயுக தொழில் முனைவோர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படை திறன் என்ன? இப்படி நம் மனதில் எழும் கேள்விகளுக்கும் ஓரளவு பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.
புதுயுக தொழில் முனைவு என்பது கால வேகத்தில் உருவான பல்வேறு வளர்ச்சிகளின் தாக்கத்தால் தொழில் முயற்சிகளின் தன்மைகளிலும் அணுகுமுறைகளிளும் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவேயன்றி வேறொன்றுமில்லை. இது பற்றி சற்று ஆழமாக புரிந்து கொள்வதத்திற்கு தொழில் உலகின் சரித்திரத்தை கொஞ்சம் பார்ப்போம்.
தொழில் வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வியாபாரம் மற்றும் தொழில் என்பது பெரும்பாலும் மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. பல்வேறு துறைகளில் அறிவியல் வளர்ச்சிகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும் தொழில் துறையின் அடிப்படையாக விவசாயமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. இதை முதல் கட்டம் எனலாம். 1930 களுக்கு பின்பு தொழில் உலகின் கவனம் இயந்திரங்களின் பக்கம் திரும்பியது. இரண்டாம் உலகப்போரினால் உருவான சூழல் மாற்றங்களும் புதிய பொறியியல் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது. போக்குவரத்து, தயாரிப்பு, தொலைத்தொடர்பு என்று பல்வேறு தளங்களிலும் இயந்திரவியலின் ஆதிக்கம் வலுப்பெற்றது. இது இரண்டாம் கட்டம்.
மூன்றாம் கட்டமாக 1970களின் பின்பு மின்னணுவியல் மற்றும் கனிணித்துறைகளின் வளர்ச்சி காரணமாக உலக வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத தலைகீழ் மாற்றங்கள் உருவாகத்தொடங்கின. "அறிவாற்றல்" என்பது மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தியது. கனிணித்துறையில் மென்பொருள் உருவாக்கம் எண்ணற்ற புதிய சாத்தியங்களை உருவாக்கியது. அறிவாற்றலின் முக்கிய விளைவான மென்பொருள் உருவாக்கம் தொழில் உலகில் கற்பனை செய்ய முடியாத தாக்கங்களை ஏற்படுத்தியது. தொழில் துறையில் தொட்டு உணரக்கூடிய பொருள்களுக்கே மதிப்பீடு செய்யப்பட்டு வந்த சூழல் மாறி அறிவாற்றலின் வெளிப்பாடாக உருவான மென்பொருள் ஆக்கங்களுக்கும் பொருளாதார மதிப்பீடுகள் செய்யப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத இந்த மென்பொருள் நிரல்கள் "அறிவுசார் சொத்து" என்று விளிக்கப்பட்டு அவற்றுக்கு சட்ட ரீதியான சொத்துரிமைகளும் வழங்கப்பட்டன.
மென்பொருள்கள், அடிப்படையில் தொழில்நுட்ப செயல்பாடாக இருந்தாலும் அவற்றின் தேவையும் வடிவமைப்பும் ஏதோ ஒரு நடைமுறை பிரச்சினையை தீர்க்கும் வகையிலேயே இருக்கும். இவ்வாறு ஒரு பிரச்சினையை ஆராய்வதும் அதற்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வை வடிவமைப்பதும் ஒரு புதிய அணுகுமுறையாக, கலாச்சாரமாக பரிமளிக்க தொடங்கியது. இதன் அடிப்படையில் ஒரு பிரச்சசினைக்கு தீர்வளிக்கும் வெறும் ஐடியாவுக்கே அதன் சக்திக்கும் எதிர்கால வீச்சுக்கும் ஏற்ற மதிப்பீடு தரும் பொருளாதார கலாச்சாரமும் உருவானது.
அடுத்ததாக இணையம் சார்ந்த தொழில் நுட்பங்களின் வியத்தகு வளர்ச்சிகள் பல மென்பொருள் சார்ந்த தீர்வுகளின் பயனை கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு நொடியில் எடுத்துச்சென்றது. இத்தகைய தீர்வுகளின் சக்திக்கு ஏற்ப அதன் வளரும் தன்மை அல்லது வளரியல்பு அனுமானிக்கப்பட்டது. ஒரு "புதுமையான தீர்வு" அதி வேகமாக விஸ்வரூப வளர்ச்சி பெறக்கூடிய தன்மையை உருவாக்கிய இந்த இணையம் என்ற மகா சக்தி புதுயுக தொழில் முனைவு என்ற பரிணாம மாற்றத்தின் அடிப்படை என்றால் அது மிகையில்லை.
இணையத்தின் வளர்ச்சியும் அதோடு இணைந்து பிற கனிணித்துறை பிரிவுகளின் வளர்ச்சியும் தொழில்முனைவோர்களை புதுவிதமாக சிந்திக்கத்தூண்டியது. புதிய புதிய தீர்வுகள் தொழில் வடிவம் பெறத்தொடங்கின. கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்ககத்திலும் இணையம் சார்ந்த "டாட் காம்" தொழில்முனைவு புரட்சி உருவானது. இதுவே புதுயுக தொழில்முனைவின் முதல் கட்டம். உருவான இடம் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி என்று அழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணம். புதிது புதிதாக பூத்த தொழிநுட்பம் சார்ந்த இந்த தொழில்முனைவுகள் முதல் முதலாக "ஸ்டார்ட் அப்" என்ற பெயரால் அழைக்கப்படத்தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான். இத்தகைய அறிவுசார் தொழில்முனைவுகளுக்கு ஏதுவான சூழல்களும் புதுயுக முதலீட்டு முறைகளும் வடிவம் பெற்றன. குறுகிய காலத்திலேயே இந்த முதல் கட்ட 'டாட் காம்' புரட்சி நீர்த்துப்போனது வேறு கதை. அதை வேறு ஒரு அத்தியாயத்தில் பார்க்கலாம். ஆனால் டாட்காம் பர்ஸ்ட் (dotcom burst) என்று அழைக்கப்படும் அந்த வீழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்த வருடங்களில் புதுயுக தொழில் முனைவின் பல்வேறு சார்பு அம்சங்களும் வலுப்பெற்று புதியதொரு தொழில்முனைவு கலாச்சாரத் தளம் உருவாகத்தொடங்கியது.
தொகுப்பாக ஒரு புது யுக தொழில் முனைவை பின்வரும் மூன்று தன்மைகளின் அடிப்படையில் வரையறுக்கலாம்:
1. புதுமையான தீர்வு (Innovative Solution)
2. அதன் வளரியல்பு (Scalability)
3. தொழில்நுட்ப உபயோகம் (Application of Technology)
இந்த இடத்தில் ஒரு கருத்தை ஆழமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நவீன தொழில்நுட்ப உலகிலும், தொழில் மேலாண்மை உலகிலும், வரையறைகள் என்று எதையும் சொல்வது மிகக்கடினம். புதிய சிந்தனைகளும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கலாச்சரங்களும் வரையறைகளின் வாழ்நாளை சுருக்கிக்கொண்டே செல்கின்றன. எனவே புதுயுக தொழில்முனைவின் தன்மைகள் கால வேகத்தில் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
இப்போது பழைய யுக தொழில்முனைவு என்று ஏதும் உள்ளதா? அப்படியென்றால் அது என்ன?
நாம் மேல பார்த்த புதுயுக தொழில் முனைவுக்கான வரையறைக்கு பொருந்தி வராத பாரம்பரிய தொழில்களை பழைய யுக தொழில்கள் என்று கூறலாம். பழைய தொழில்கள் என்று விளிப்பதால் அவை மதிப்பற்றவை என்றோ எதிர்காலம் அற்றவை என்றோ தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தொழில்களின் அடிப்படைகள் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றின் செயல்முறை வடிவங்கள் தான் மாற்றம் பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பொருட்களை வாங்கி விற்பது பல நூறு வருடங்களாக இருந்து வரும் ஒரு தொழில். இன்று ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் வாங்கி விற்கும் தொழிலின் செயல்முறை வடிவங்களை தொழில்நுட்பத்தின் துணை கொண்டு முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டன. அதே போல் விமானம், இரயில், பேருந்து என போக்குவரத்துக்கான பயணச்சீட்டுகள் விற்பது பலகாலமாக இருக்கும் தொழில் தான். ஆனால் மேக் மை டிரிப், ரெட் பஸ், irctc என பல இணைய நிறுவனங்கள் பயண தொழில்துறையின் செயல் தன்மையை முற்றிலுமாக மாற்றி அமைத்து விட்டன. ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்கள் வாடகைக்கார்களை நாம் அணுகிய விதத்தை எப்படி மாற்றியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது போன்று ஒவ்வொரு வணிகத்துறையிலும் புத்தாக்கங்கள் உருப்பெற்று வியத்தகு தாக்கங்களை செய்கின்றன. தொழில் மாதிரிகள் (business models) என்ற புதிய மேலாண்மை பிரிவே உருவாகியுள்ளது. இத்துறையில் தொழில்களின் கட்டமைப்புகளும் செயல் முறை மாதிரிகளும் ஆராயப்பட்டு வெற்றிக்கான வடிவங்கள் தரப்படுகின்றன.
வழக்கமான பழைய தொழில்களின் அணுகுமுறைகள் கால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தக்கவைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது என்பார்கள். அதேவேளை புதுயுக மாற்றங்களை கவனமாகவும் நிதானமாகவும் அணுக வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணரவேண்டியிருக்கிறது. இது ஒரு சிக்கலான காலகட்டம் தான். யாராலும் தெளிவான ஒரு வியாபார வியூகத்தையோ திட்ட அணுகுமுறையையோ உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் ஒன்றை மற்றும் உறுதியாக சொல்லலாம். அன்று முதல் இன்று வரை எந்த முயற்சியிலும் அதனை தொய்வில்லாமல் நடத்திச் செல்வதற்கு “தொடர்ந்து புதுமையாக சிந்தித்தல்” என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இன்றைய கால கட்டம் புத்தாக்கங்களின் (innovations) உச்ச கட்டம். மாற்றங்களினால் மனம் தளராமல் 'மாத்தி' யோசிப்பது தான் எதிர்கால தொழில்முனைவோர்க்கான மிக முக்கிய திறனாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இந்த அத்தியாயத்தில் புதுயுக தொழில்முனைவின் அப்படைத்தன்மைகள் பற்றியும் அவை உருவான சூழல் பற்றியும் பார்த்தோம். கடந்த சில வருடங்களாக அதிகமாக நாம் கேள்விப்படும் வார்த்தை "ஸ்டார்ட் அப்" .
ஒரு புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது? அதற்கான தேவைகள் என்ன? ஒரு இடத்தில் புதுயுக தொழில்கள் வளர்வதற்க்கான சூழல் எப்படி இருக்க வேண்டும்? வெறும் இணைய தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவுகள் மட்டுமே தான் புதுயுக தொழில் முனைவா? இது போன்ற கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் சில உதாரணங்களுடன் விடை காண முயற்ச்சிப்போம்.
கட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்