நீங்கள் ஓவியர் என்று உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் ஓவியரா? உங்களின் சுற்றத்தாரோ, உற்றத்தாரோ அல்லது நீங்களோ உங்களை ஓவியர் என்று சொன்னதுண்டா?
“ஆம்” என்றால் இப்பதிவின் பயனை ஏற்கனவே நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
இப்பதிவினை தொடர்ந்து படித்து அழகான அடுத்த 19 நிமிடங்களை செலவழிக்க வேண்டியதில்லை. இப்பதிவினை படிக்க 4 நிமிடங்களும், இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியை காண 15 நிமிடங்களும் பயனிட்டு பத்தொன்பதாம் நிமிடத்தின் இறுதியில் நீங்களும் ஓவியர் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் இல்லை.
மேற்கண்ட கேள்விக்கு 'இல்லை' என்றால் ஓவியராகக்கூடிய உங்களை உங்களின் சுற்றத்தாரும், உற்றத்தாரும் ஏன் நீங்களும் கூட இன்னும் ஓவியராக உங்களை அடையாளம் காண முடியாதவர்கள் என்றே அர்த்தம். அடுத்த இருபதாவது நிமிடத்தில் அதாவது இப்பதிவின் முடிவில் உங்களுக்கு ஓவியராக மற்றுமொரு அடையாளம் கிடைக்கும்.
என்னைப்பற்றி :
பதின்ம வயதைக்கடந்து, உங்களில் பெரும்பாலோர் போன்று கணினி துறையில் கால் பதித்திருக்கும் இளைஞன் நான். இப்பதிவில் நான் சொல்லப்போவது எப்படி ஓவியராவது என்றல்ல, அதற்கு ஒருபடி மேலே யாரெல்லாம் ஓவியர் ஆக முடியும் என்று மட்டுமே.
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியை காண்பதன் மூலம், உங்களின் கடுமையான எதிர்வீட்டுக்காரரைப் போல் இப்போது இருக்கும் ஓவியக்கலை, பரிவான பக்கத்துக்கு வீட்டுக்காரரைப் போல் மாறிவிடும்.
உலகளவில் மிகவும் பிரசித்திபெற்ற TEDx எனப்படும் அறிவுசார் நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வின் பதிவு தான் இந்தக் காணொளி. சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் பதிவிடப்பட்ட காணொளி இது. சுமார் 15 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட காணொளி இது. ஏறக்குறைய 15 மில்லியன் ஓவியர்களை அறிமுகப்படுத்திய பெருமை இக்காணொளிக்கு உண்டு என்றும் கூறலாம்.
15 நிமிட தொடர்ச்சியுள்ள இந்தக் காணொளியின் முதற் பகுதியிலேயே நீங்கள் உங்கள் கை பட ஓவியம் தீட்டிப்பார்ப்பீர்கள். இப்பதிவின் முடிவில் நீங்கள் பார்புகழும் ஓவியராக மாறியிருக்காவிட்டாலும், பக்கத்திலிருப்பவர்கள் வியக்குமளவு ஓவியராக மாறியிருக்கக் கூடும்.
என் வரைபட அனுபவம் : அமீபாவை தவிர வேறு எந்த உருவத்தையும் என்னால் வரைய முடியுமா என்ற சந்தேகமே என் ஓவியத் திறமையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை. ஏனெனில் அமீபா மட்டுமே எவ்வடிவதிலும் தன் வடிவத்தை மாற்றும் என்பதால் என் வரைபட வடிவத்திலும் அது மாற்றிக்கொள்ளும் என்பதனால் வந்த நம்பிக்கை அது. எதேச்சையாக நான் பார்த்த இந்தக் காணொளி எனக்கான புது பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொடுத்தான் வெளிப்பாடே இந்தப்பதிவு.
புன்னகையைப் போல ஓவியமும் ஒரு உலகப் பொது மொழி தான் எனவே ஆங்கிலத்தில் உள்ள இந்தக் காணொளிக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது.
ஓவியமும், இதைப் போன்ற மற்றபிற கலைகளும், நம் கை சார்ந்தது என்பதை விட நமது நம்பிக்கை சார்ந்தது என்றே கூறலாம்.