அலோக் சாகர்: அன்று ரகுராம் ராஜனுக்கு பேராசிரியர்... இன்று பழங்குடி மக்கள் நல ஆர்வலர்!
ஐஐடி டெல்லி’யில் பொறியியல் டிகிரி முடித்துவிட்டு, முதுகலை மற்றும் பிஎச்டி பட்டங்களை ஹூஸ்டனில் முடித்துள்ள அலோக் சாகர், முன்னாள் ஐஐடி பேராசிரியர். ஆனால் அலோக் கடந்த 32 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மிகவும் பின்தங்கிய ஒரு பழங்குடியினர் கிராமத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள மக்களுக்கு சேவை செய்தும் வருகிறார்.
ஐஐடி டெல்லியில் பேராசிரியராக இருந்தபோது, அலோக் பல மாணவர்களை தயார் படுத்தியுள்ளார். அதில் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் பணியை ராஜினாம செய்த அலோக், பெதுல் மற்றும் ஹொஷன்காபாத் என்ற இரண்டு பழங்குடி கிராமங்களில் பணி செய்ய தொடங்கினார். கடந்த 26 வருடங்களாக கோச்சமு என்னும் மிகவும் பிந்தங்கிய ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அலோக். இங்கு சுமார் 750 பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு மின்சார வசதியோ சாலை வசதியோ இல்லை, ஒரே ஒரு ஆரம்பப்பள்ளி மட்டும் உள்ளது.
அலோக் இதுவரை 50 ஆயிரம் மரங்களை அந்த பகுதிகளில் நட்டுள்ளார். தன்னைப் போன்றோர் கீழ்தட்டு மக்களுக்கு சேவை செய்வது மிக அவசியம் என நம்புகிறார்.
“இந்தியாவில் மக்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆனால் பலரும் மக்களுக்கு சேவை புரிவதை காட்டிலும் தங்களது புத்திசாலித்தனத்தை வெளியில் காண்பிக்கவே ஆசைபடுகின்றனர்,” என்று அலோக் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை பேட்டியில் தெரிவித்துளார்.
அலோக் தன்னைப் பற்றி வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. அண்மையில் பெதுல் மாவட்டத்தில் நடந்த தேர்தலின் போது, அவரை சந்தேகப்பட்ட அதிகாரிகள் அலோகை கிராமத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அவரைப்பற்றி தெரிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் ஆச்சர்யம் அடைந்து அவரை அங்கிருக்க அனுமதித்தனர்.
அலோகின் கதை ஊக்கமளிக்க முக்கியக் காரணம் அவரது எளிமை. அவரிடம் மூன்று குர்தாக்கள், ஒரு சைக்கிள் மட்டுமே உள்ளது. அலோக் விதைகளை சேகரிப்பதிலும் அதை பழங்குடியினர்களுக்கு கொடுக்கவுமே தனது தினப் பொழுதை கழிக்கிறார். அலோகிற்கு பல மொழிகள் தெரியும், பழங்குடியினரின் பாஷையும் புரிகிறது. ஷ்ராமிக் ஆதிவாசி சங்கத்தன் எனும் அமைப்புடன் இணைந்து தன் பணிகளை அலோக் செய்து, கீழ்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்.
கட்டுரை: Think Change India