Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஜெர்மனியில் வேலை செய்த ஐடி ஊழியர்; பெங்களூரு தெருவில் பிச்சை எடுக்கும் அவலம் - என்ன காரணம்?

குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் வேலையை இழந்து, சொத்துக்களை இழந்து பெங்களூரு தெருக்களில் யாசகம் எடுக்கும் நிலைக்கு ஆளான முன்னாள் ஐடி ஊழியரின் சோகக்கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனியில் வேலை செய்த ஐடி ஊழியர்; பெங்களூரு தெருவில் பிச்சை எடுக்கும் அவலம் - என்ன காரணம்?

Friday November 29, 2024 , 3 min Read

மது நாட்டுக்கும் வீட்டுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு என எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடிவதில்லை. மது குடிப்பவர்கள் தங்களது இந்தப் பழக்கத்திற்கு நிச்சயம் ஏதாவது காரணம் வைத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போதும் அப்படித்தான், மதுவால் வேலையை இழந்து, தனது சொத்துக்களை இழந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு, பெங்களூரு தெருக்களில் யாசகம் கேட்டு வாழும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் ஒரு முன்னாள் ஐடி ஊழியர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவர் ஜெர்மனி மற்றும் பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். தற்போது இவரது சோகக்கதைதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

bengaluru man

குடிக்கு அடிமையாக்கிய சோகம்

பெங்களூருவின் ஜெயநகர் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த நபரை, ஷரத் யுவராஜ் என்ற கண்டெண்ட் கிரியேட்டர் பேட்டி எடுத்து, அதனைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு பரிதாபமாக, பழைய சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, காலில் செருப்பில்லாமல், லேசான தாடியுடன் காணப்படுகிறார் அந்நபர்.

தான் ஒரு முன்னாள் ஐடி ஊழியர் என தன்னைப் பற்றி அந்த வீடியோவில் அவர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சில காலம் ஜெர்மனியில் வேலை செய்ததாகவும், பின்னர் பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது இந்த நிலைக்கு குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்தான் காரணம் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன படித்துள்ளீர்கள் என யுவராஜ் கேட்ட கேள்விக்கு,

"நான் ஒரு பொறியாளர். நான் குளோபல் வில்லேஜில் உள்ள மைண்ட்ட்ரீயில் பணிபுரிந்தேன். எனது பெற்றோரை இழந்தபோது நான் மது குடிக்கத் தொடங்கினேன்," என்கிறார் அவர்.

கைகூடாத காதல்

சம்பந்தப்பட்ட அந்த நபர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், காதல் என வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் தனது பெற்றோர் மற்றும் காதலியை இழந்துள்ளார். அவர்களுக்கு என்ன ஆனது, அப்போது என்ன நடந்தது என்பதைப் பற்றி அந்த வீடியோவில் அவர் தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால், பாசம் வைத்திருந்த அனைவரும் இல்லாமல் போனது அவரை மனரீதியாக மிகவும் பாதித்துள்ளது.

எனவே, தனது சோகத்தை மறக்க அவர் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி, மது இல்லாமல் தன் நாட்களை நகர்த்த முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார். இதனால் வேலையை இழந்துள்ளார். பின்னர், தன் மது செலவுக்காக தன் சொத்துக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக விற்று செலவழித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருக்க வீடுகூட இல்லாமல், சாப்பாட்டிற்கு வழியில்லாமல், மற்றவர்களிடம் யாசகம் கேட்டு வாழும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு ஜெயாநகர் பகுதியில் அவர் யாசகம் கேட்டு வாழ்ந்து வருவதாக யுவராஜ் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுப்பூர்வமான பேச்சு

இது தொடர்பாக மூன்று வீடியோக்களை யுவராஜ் பகிர்ந்துள்ளார். அதில், கடைசி வீடியோவில்,

“மதம், சாதி, இவையெல்லாம் சேர்ந்து என்னை எப்படி ஆக்கிவிட்டது எனப் பாருங்கள்.. நான் இன்னும் படித்திருக்க வேண்டும்," என அந்நபர் கூறுகிறார்.

மேலும், தனது பேச்சில், தத்துவம், தியானம், அறிவியல் எனப் பலதரப்பட்ட விசயங்களைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறார் அந்நபர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் டேவிட் ஹூம் பற்றியெல்லாம்கூட தன் பேச்சினூடே அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், அவரது உடல்மொழியைப் பார்க்கும் போதே, அவர் எந்தளவுக்கு மதுவால் உடம்பைக் கெடுத்து வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. அதோடு பேசுவதற்கும் கொஞ்சம் திக்கித் திணறித்தான் பேசுகிறார்.

உதவி

முதலில் யுவராஜிடம் பேச ஆரம்பிக்கும் போதே அவர் தனக்கு ஏதாவது பண உதவி செய்ய வேண்டும் என அந்நபர் வேண்டுகோள் விடுக்கிறார். அதற்கு யுவராஜ் சம்மதித்த பிறகே அவர் பேச ஆரம்பிக்கிறார். தான் கூறியபடியே அப்போதைக்கு அவருக்குத் தேவையான உதவியை யுவராஜ் செய்துள்ளார்.

ஆனாலும், அந்நபரின் பரிதாப நிலையைக் கண்டு வேதனை அடைந்த யுவராஜ், அவருக்கு உதவ வேண்டும், மறுவாழ்வு அளிக்க வேண்டும் என தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். என்ஜிஓ மூலம் உதவலாம் என்று அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றையும் யுவராஜ் தொடர்பு கொண்டிருக்கிறார். இருப்பினும், போலீஸ் உதவியில்லாமல் உதவ முடியாது என்று என்ஜிஓ தரப்பினர் கூறியுவிட்டதாக யுவராஜ் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தபிறகு பலர், தாங்களும் அந்நபரை அந்தப் பகுதியில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். கூடவே அவரது நிலையைப் பார்த்து பரிதாபத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனதைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போது அந்தப் பகுதியில் அந்நபரைக் காணவில்லை எனவும், அவரை யாராவது பார்த்தால் உடனடியாக தனக்குத் தெரிவிக்கும்படியும் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

விழித்துக் கொண்டால் நல்லது!

அளவாகக் குடித்து, சுயகட்டுப்பாடுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் மதுவிடம் தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதில்லை. ஆனால், அளவுக்கதிகமாகக் குடிப்பவர்கள், வேலையை இழந்து, சொத்துக்களை இழந்து, சுயசிந்தனையை இழந்து, சமூகத்தில் அடுத்தவர்களிடம் யாசகம் கேட்டு வாழும் நிலைக்கு ஆளாகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் நிலையைப் பார்த்தாவது இனி வரும் காலங்களில் மக்கள் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்தால் நல்லது.