மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை விருது வழங்கி கெளரவித்த CavinKare அறக்கட்டளை!
நாடு முழுவதிலும் உள்ள ஐந்து மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை அவர்களுடைய முன்மாதிரி சாதனைகளுக்காக CavinKare அறக்கட்டளை விருது கொடுத்து கெளரவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ஐந்து மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை அவர்களுடைய முன்மாதிரி சாதனைகளுக்காக
அறக்கட்டளை விருது கொடுத்து கெளரவித்துள்ளது.எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன் இணைந்து எஃப்எம்சிஜி நிறுவனமான கவின்கேர், அதன் 22வது “கவின்கேர் திறன் விருதுகள் 2024” நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மதன் கார்க்கி, சாயி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.வி.ரமணி, திரைப்படத் தயாரிப்பாளர் பாரத் பாலா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சுரேஷ் ராமன், முன்னாள் HOD ஆஃப் டைரக்ஷன், எல்வி பிரசாத் காலேஜ் ஆஃப் மீடியா ஸ்டடீஸ் லதா முருகன் ஆகியோர் அடங்கிய ஜூரி உறுப்பினர்கள் குழு இந்த ஆண்டுக்கான விருதுகளைப் பெறுபவர்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தனர்.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சி.கே. ரங்கநாதன் கூறுகையில்,
“ஒவ்வொரு ஆண்டும் சாதனையாளர்கள் சவால்களை வெல்வதற்கும், தடைகளை எளிதில் உடைப்பதற்கும் தங்களின் சிறப்பான திறனை உலகுக்கு காட்டியுள்ளனர். அவர்களின் குறிப்பிடத்தக்க பயணத்தில் ஒரு சிறிய பங்காற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு தளமாக உள்ளது. வெற்றியாளர்களை நான் வாழ்த்துகிறேன்,” எனக்கூறினார்.
கவின்கேர் திறன் சிறப்பு அங்கீகார விருது:
மருத்துவர் கெட்னா எல் மேத்தா 1995ம் ஆண்டு நடந்த பாராகிளைடிங் விபத்தில் முதுகுத்தண்டு காயம் ஏற்பட்டதோடு, நீண்ட கால மறுவாழ்வும் தேவைப்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்த மேத்தா, தன்னைப் போல் முதுகுத் தண்டு காயம் ஏற்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2001ம் ஆண்டு “நினா” என்ற அறக்கட்டளையை நிறுவினார்.
இந்த அறக்கட்டளையானது முதுகுத் தண்டு காயம் ஏற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று நேரிலோ அல்லது ஆன்லைன் வழியாக மறுவாழ்வு சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. மேலும், முதுகுத் தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகிறது.
கவின்கேர் திறன் எமினென்ஸ் விருது:
வித்யா; ‘விஷன் எம்பவர்’ (Vision Empower) நிறுவனர் ஆவார். இது பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளை பள்ளியில் STEM கல்வியைத் தொடர ஊக்குவிப்பதற்காகச் செயல்படுகிறது. பள்ளிகளில் STEM இன் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு உதவுவதற்கு அணுகக்கூடிய உள்ளடக்கம், அறிவுறுத்தல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு செயல்படுகிறது.
கவின்கேர் திறன் மாஸ்டரி விருது:
டெல்லியைச் சேர்ந்த வினயனா குரானா, எழுத்தாளர், கவிஞர், பதிவர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் ஒரே மாதிரியான கருத்துகளை அகற்றி, மக்களுக்குச் சென்ற சேர வேண்டிய பயனுள்ள கருத்துக்கள் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடியவர்.
ஐஸ்வர்யா டிவி- செகந்திராபாத், தெலுங்கானா:
ஐஸ்வர்யா ஒரு கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், ஆலோசகர், தொழில்முனைவோராக உள்ளார். இவர் மாஸ் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருக்கும் போது, மூளையில் உருவான எதிர்பாராத கட்டியால் பார்வை பறிபோனது. இதனால் மனமுடைந்து போகாமல், தனது பார்வைக் குறைப்பாட்டை சவாலாக எடுத்துக்கொண்டு திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.
எல்வி பிரசாத் கண் நிறுவனத்தில் மறுவாழ்வு பணியில் ஈடுபட்டபோது, விழிப்புணர்வு ஆடியோ மற்றும் வீடியோ படங்களை இயக்கினார். கலை மீதான தனது ஆர்வத்தை மீண்டும் தூண்டி, அதை தொட்டுணரக்கூடியதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் ஐஸ்வர்யா கவனம் செலுத்தி வருகிறார்.
சோன்சின் ஆங்மோ - டெல்லி:
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஆங்மோ, நான்கு மாத காலத்திற்கு படிப்படியாக தனது பார்வையை இழந்தார். கண் பார்வையில்லாமல் பள்ளிப் படிப்பை முடிக்க வீட்டை விட்டு வெளியேறி சவாலான பாதையை தேர்வு செய்த அவர், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பதக்கங்களைக் குவித்தார்.
மாநில மற்றும் தேசிய அளவில் கபடி, நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவது வரை, சோன்சின் எல்லா இடங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அதுமட்டுமின்றி 19,635 அடி உயரமுள்ள கனமோ சிகரம், 20,459 அடி உயரமுள்ள காங் யாட்சே மலைகளில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.