தினமும் ரூ.5.7 கோடி நன்கொடை - 3வது ஆண்டாக நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்!
இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளராக HCL நிறுவனத்தின் ஷிவ் நாடார் தொடர்வதாகவும்; மிக இளவயது நன்கொடையாளராக நிகில் கமத் உருவெடுத்துள்ளதாகவும் 'Hurun India' நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் சமுதாய மேம்பாட்டுப் பணிக்காக அதிக நன்கொடை வழங்கும் இந்திய நிறுவனங்களின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது மும்பையைச் சேர்ந்த 'Hurun India' நிறுவனம்.
அவ்வகையில், கடந்த 2023-24 நிதியாண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நன்கொடையாக மொத்தம் 8,783 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
3வது ஆண்டாக முன்னிலையில் ஷிவ் நாடார்
இது இரண்டு ஆண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 55 சதவீதம் அதிகமாகும். இதில், 96 பேர் புதிய நன்கொடையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மட்டும் ரூ.8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 18 நபர்களும்; 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 30 நபர்களும்; 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 61 நபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்தாண்டு இந்தப் பட்டியலில், இந்தியாவின் முன்னணி பணக்காரர்களாக அதிகம் ஊடகங்களில் பேசப்படும், அம்பானி அல்லது டாடா குழுமத்தின் நிறுவனங்கள் இடம்பெறும் என பொருளாதார வல்லுநர்கள் முன்னதாக எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி,
இந்த ஆண்டு ரூ. 2,153 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக ஷிவ் நாடாரின் 'HCL' நிறுவனம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வருகிறார் 79 வயதான ஷிவ் நாடார். நாளொன்றுக்கு 5.7 கோடி ரூபாயை கல்விக்காக ஷிவ் நாடார் நன்கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
2ம் இடத்தில் முகேஷ் அம்பானி
அவரைத் தொடர்ந்து, இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானியின் குழுமம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது இந்த ஆண்டு ரூ.407 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் ரூ.352 கோடியை நன்கொடையாக வழங்கிய பஜாஜ் குழுமம் பிடித்துள்ளது.
இந்த நன்கொடையாளர் பட்டியலில் முதல் பத்து இடங்களில், குமாரமங்கலம் பிர்லா குடும்பம் (ரூ.334 கோடி), கவுதம் அதானி குடும்பம் (ரூ.330 கோடி), நந்தன் நிலேகனி (ரூ.307 கோடி), கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி), அனில் அகர்வால் குடும்பம் (ரூ.181 கோடி), சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி (ரூ. 179 கோடி), ரோகிணி நிலேகனி (ரூ.154 கோடி) ஆகியோரும் உள்ளனர்.
தனிப்பட்ட நபர்களின் நன்கொடையை மட்டும் கணக்கில் கொண்டாலும், சிவ நாடார் ரூ.1,992 கோடி நன்கொடையுடன் முதலிடத்தில் உள்ளார். நந்தன் நிலேகனி மற்றும் கிருஷ்ணா அடுத்த இடங்களில் உள்ளனர்.
CSR நன்கொடை
இதேபோல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் CSR நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ.228 கோடி நன்கொடையுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், நந்தன் நிலேகனியின் மனைவியுமான ரோகினி நிலேகனி, ஆண்டுக்கு 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் அதிக நன்கொடைகள் அளித்த இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதேபோல், 'இண்டோ எம்.ஐ.எம்.,' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா, 228 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, அதிக நன்கொடை வழங்கிய 10 நபர்களின் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்று உள்ளார். மிக இளவயது நன்கொடையாளராக நிகில் கமத் உருவெடுத்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
கல்விக்கு முக்கியத்துவம்
இந்தாண்டு பட்டியலில், கல்வியை மேம்படுத்தவே நன்கொடையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கல்வி சார்ந்த விஷயங்களுக்காக 3,680 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். மொத்த நன்கொடையாளர்களில் 16 சதவீதம் பேர், மருந்துத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஷிவ்நாடார்?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மூலைப்பொழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ் நாடார்.
1945ம் ஆண்டு பிறந்த இவர். திருச்சியில் பள்ளி இறுதிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி படிப்பை முடித்தார். அதன் பிறகு, கோயம்பத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கல்லூரியில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார்.
அந்த சமயத்தில்தான், மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருந்த ஐ.பி.எம் (IBM) நிறுவனம் சில அரசியல் காரணங்களுக்காக இந்தியாவைவிட்டு வெளியேறியது. இந்தியாவில் கம்ப்யூட்டருக்கான தேவை அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்ட ஷிவ் நாடார், இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, 1976-ல் `ஹெச்.சி.எல்’ (HCL) நிறுவனத்தை ஆரம்பிக்க பல முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டார். ஷிவ் நாடாரின் திறமையான திட்டங்களால், பின்னர் அது ஐ.டி துறையில் கால்பதித்து பிரகாசிக்கத் தொடங்கி, இன்று இந்தியாவின் முக்கியமான பெரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
ஒரு பக்கம் ஐ.டி துறை, மறு பக்கம் 'எஸ்.எஸ்.என் கல்லூரி, பள்ளி' என கல்வித் துறையிலும் கால்பதித்து வளர்ந்து கொண்டிருக்கிறார் ஷிவ் நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.