’பொறியாளர் தினம்’- விஸ்வேஸ்வரய்யா பற்றி குவியும் வாழ்த்துக்கள்!
நண்பர்கள் தினம், தந்தையர் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வது போல, பொறியியலில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று பொறியியல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம்.
நண்பர்கள் தினம், தந்தையர் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வது போல, பொறியியலில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று பொறியியல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம். ஆம், இன்று பொறியியல் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசத்தின் பொறியியல் தந்தை என போற்றப்படுபவர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய மைசூரில் பிறந்த விஸ்வேஸ்வரய்யா, நாட்டின் பாசனத்துறை வளர்ச்சி மற்றும் அணைக்கட்டு திட்டங்களின் முன்னோடியாக விளங்கியவர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை சிற்பி என்றும் இவர் பாராட்டப்படுகிறார்.
அணைக்கட்டு நிர்வாகத்தில் தானியங்கி மதகை கண்டுபிடித்த பெருமைக்குறியவராகவும் கருதப்படுகிறார். பாசனத் திட்டங்கள் மட்டும் அல்லாமல், ஆலைகள், பொறியில் கல்லூரிகள், பல்கலைக்கழகம் என பலவற்றை உருவாக்கியவராகவும் பாராட்டப்படுகிறார். பொருளாதார திட்டமிடலை முன்வைத்த முன்னோடி அறிஞராகவும் கருதப்படும் விஸ்வேஸ்வரய்யா தனது இறுதிக்காலம் வரை பணி செய்யும் வழக்கம் கொண்டவராகவும் இருந்தார்.- https://www.itstamil.com/mokshagundam-visvesvaray.html
விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு 1962 ம் ஆண்டு நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
பொறியியல் வல்லுனர்களுக்கு எல்லாம் உந்துசக்தியாக கருதப்படும் அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு அவரது 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேடியந்திரமான கூகுள், தனது லோகோவில் விஸ்வேஸ்வரய்யா உருவத்தை டுடூலாக வெளியிட்டு கவுரவித்தது. முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் நினைவை போற்றும் வகையில் தனது லோகோவை டுடூலாக மாற்றும் வழக்கப்படி கூகுள் தனது லோகோவில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு புகழ் சேர்த்துள்ளது.
அணைக்கட்டு பின்னணியில் மதகுகளில் கூகுள் எனும் எழுத்துக்கள் மின்ன, அதற்கு முன் விஸ்வேஸ்வரய்யா உருவம் தோன்றும் வகையில் லோகோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த லோகோவை கிளிக் செய்தால், விஸ்வேஸ்வரய்யா வாழ்க்கை குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ள தேடல் பக்கம் தோன்றுகிறது.
இதே போல டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும், விஸ்வேஸ்வரய்யாவை நினைவு கூறும் தகவல்களை #EngineersDay எனும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலரும் #EngineersDay எனும் ஹாஷ்டேகுடன் பொறியாளர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதோடு, விஸ்வேஸ்வரய்யா சாதனைகளையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தேசத்தின் பொறியியல் முன்னோடி மற்றும் அவரது வழித்தோன்றகளை வாழ்த்துவதில் நீங்களும் இணையலாம். மகிழ்ச்சியான பொறியியல் தின வாழ்த்துக்கள்!