படித்தது பொருளாதாரம்; வைத்திருப்பது டீக்கடை: பிரியங்கா குப்தா ‘Chaiwali’ ஆனது எப்படி?
பீஹாரைச் சேர்ந்த பிரியங்கா குப்தா பொருளாதார பட்டதாரியாக இருந்தாலும் ‘சாய்வாலி’ என்ற தன்னுடைய இலக்கிற்காக கல்லூரி முன்பு டீக்கடை நடத்தி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டீக்கடைக்காரர் (Chaiwala), டீ குடிக்க வருபவருடன் விவாதிப்போம் (Chai pe Charcha) இந்த வார்த்தைகள் 2014ம் ஆண்டு முதல் இந்திய அரசியலில் பலரும் அறிந்தவை. ஆனால், 24 வயது பட்டதாரிப் பெண்ணான பிரியங்கா குப்தா 'Chaiwali' என்பதை தன்னுடைய வாழ்க்கை இலக்காகக் கொண்டிருக்கிறார்.
பீஹார் மாநிலம் பூர்னியாவைச் சேர்ந்தவர் பிரியங்கா குப்தா, பொருளதாரப் பட்டதாரியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிப்பணித் தேர்வுகளுக்காக தீவிரமாகத் தயாராகி வந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக இவருக்கு பணி கிடைக்காத நிலையில் சுயமாக தொழில் தொடங்கி தன்னை Chaiwali ஆக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதம மந்திரியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை நோக்கி தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் பிரியங்கா. வாரணாசியின் மகாத்மா காந்தி காசி வித்யாபீட் கல்லூரியில் இளநிலை பொருளாதாரம் பயின்று பட்டம் பெற்றிருக்கும் இவர், கடந்த 11ம் தேதி முதல் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி முன்பு டீக்கடை நடத்தி வருகிறார்.
குறுகிய காலத்திலேயே பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார் இவர்.
"வெயிலில் வெளியே செல்வது என்றாலே எனக்கு பிடிக்காது, ஆனால் இப்போது நாள் முழுவதும் வெயிலில் அதுவும் நின்று கொண்டே வேலை செய்கிறேன். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. Chaiwali என்கிற என்னுடைய வெற்றிக்கான பயணத்தை மிகுந்த உறுதியோடு எதிர்கொள்கிறேன்," என்று பெருமையோடு செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துள்ளார் பிரியங்கா.
எம்பிஏவை பாதியிலேயே நிறுத்திவிட்டு அகமதாபாத்தில் MBA Chaiwala நிறுவி பிரபலமடைந்துள்ள பிரஃபுல் பில்லோர் தான் என்னுடைய முன்மாதிரி. அவருடைய ஊக்கம் தரும் வீடியோ பேச்சுகள், சுயசரிதை உள்ளிட்டவற்றை படித்த பின்னரே எனக்கும் Chaiwali அக வேண்டும் என்ற விருப்பம் வந்தது, என்கிறார்.
ஆனால், என்னுடைய லட்சியத்தைச் சொன்னால் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் மேல்படிப்பு படிக்கச் செல்வதாகக் கூறி விட்டு ஜனவரி 30ம் தேதி பாட்னாவிற்கு வந்தேன். இங்கு பல டீக்கடைகளுக்குச் சென்று டீ போடும் முறை மற்றும் கையாளும் யுத்திகளைக் கற்றுக்கொண்டேன் என்கிறார் பிரியங்கா.
'டீக்கடை திறப்பதும் மிகப் பெரிய சவாலே'
ஒரு சின்ன டீக்கடை திறப்பதும் கூட எனக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. "பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்குமாறு பல வங்கிகளை அணுகினேன். சில வங்கிகள் வருமான வரி கணக்குத் தாக்கல் படிவம், தொழில் திட்டம், தங்குமிட ஆதாரம் என பல ஆவணங்களைக் கோரினர்.
சுமார் ஒன்றரை மாதங்கள் அலைந்த போதும் எந்தக் கடன் உதவியும் கிடைக்கவில்லை. எனினும் நான் சோர்ந்து போகவில்லை. எனக்குத் தெரிந்த பலரிடம் தொழில் தொடங்க நிதி உதவி கோரினேன். இறுதியில் என்னுடைய கல்லூரி நண்பர் ஒருவர் ரூ.30,000 கடன் உதவி செய்தார்.
சற்றும் யோசிக்காமல் அன்றே கடைக்குச் சென்று டீக்கடை ஸ்டாலை ரூ.12,000க்கும் மற்ற தேவையான பொருட்களையும் வாங்கி வந்து டீக்கடை திறந்துவிட்டேன்.
“பட்டம் படித்துவிட்டு டீக்கடை நடத்துகிறேனே என்று நான் அவமானமாக நினைக்கவில்லை, சொந்தமாக எனக்கு ஒரு கடை இருக்கிறது என்று நான் பெருமையாகவே உணர்கிறேன்,” என்கிறார் பிரியங்கா குப்தா.
இவரின் கடையில் சாதாரண டீயுடன், மசாலா டீ, சாக்லேட் டீ, பான் டீ, குல்ஹட் டீ, குக்கீஸ் என்று பல ரகங்கள் ரூ.15 முதல் ரூ.20 வரையிலான விலையில் நல்ல தரத்தில் கிடைக்கிறது. குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார் இவர்.
"கண்டிப்பா நீங்க குடிக்கணும்" (Peena hi padega), "யோசிக்காதீங்க... வந்து ருசித்துப் பாருங்க " (soch mat... chalu kar de bas) போன்ற வாசகங்களை தனது ஸ்டாலில் எழுதி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மார்க்கெட்டிங் யுத்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரியங்கா.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்பதை நிரூபித்திருக்கிறார் இவர்.
தகவல் உதவி மற்றும் படங்கள் உதவி: ANI | தமிழில்: கெஜலட்சுமி