Chandrayaan-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-2 விண்கலம் பிற்பகல் 02.43 நிமிடங்களுக்கு ஜிஎஸ்எல்வி-மார்க்-3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
சந்திரயான் -2 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 ராக்கெட், இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது இந்த ராக்கெட். 43.43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை 640 டன்.
இந்த ராக்கெட் மூன்று பகுதிகளைக் கொண்டது. அடியில் உள்ள முதல் பகுதியில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த திரவ எரிபொருள் எரியூட்டப்பட்டு, அது அதிர்வோடு ராக்கெட்டை உந்தி மேலே எழும்பச் செய்யும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது பகுதியில் உள்ள திட எரிபொருள் எரியூட்டப்பட்டு, ராக்கெட் சந்திரயான்-2 விண்கலத்துடன் சுமார் 170 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதற்கு மேல் மூன்றாவது அடுக்கில் உள்ள கிரையோஜெனிக் எரிபொருள் எரியூட்டப்பட்டு, ராக்கெட் விண்கலத்துடன் 176 கிலோ மீட்டர் உயரத்திற்குக் கொண்டு செல்லப்படும். பின்னர், 181 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட் சந்திரயான் விண்கலத்தை பிரித்து அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும். இந்த விண்கலம் செலுத்தப்படும் நாளிலிருந்து அடுத்த 23 நாட்களுக்கு பூமியை அதன் நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும்.
பூமிக்கு அருகாமையில் வரும் போது, அதில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயான் நீள்வட்டப் பயணப்பாதையின் தூரம் படிப்படியாக அதிகரிக்கப்படும். 23-வது நாள் இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு, 30ஆவது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் வகையில் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து சுமார் 13 நாட்கள் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 43ஆவது நாள் விண்கலத்தின் இரண்டு பகுதிகளான ஆர்பிடெரும், லேண்டரும் பிரிக்கப்படும்.
பின்னர், ஆர்பிடெர் சந்திரனை 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும். ஆர்பிடெரிலிருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கி செலுத்தப்படும். 48-ஆவது நாள் விக்ரம் சந்திரனில் மென்மையாக தரையிறங்கும்.
ஆர்பிடெர்
ஆர்பிடெர், சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வு செய்து, பூமிக்கும், சந்திரனில் இறங்கும் விக்ரம் லேண்டருக்கும் தொடர் தகவல்களை அளிக்கும். 682 கிலோ எடைகொண்ட ஆர்பிடெரில் உள்ள எரிபொருளின் எடை 1697 கிலோவாகும். மொத்த எடை 2379 கிலோவாகும்.
சந்திரனின் தரைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கான பல கருவிகள் ஆர்பிடெரில் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரனை 100 கிலோமீட்டர் உயரத்தில் துருவப் பகுதியின் வழியாக சுற்றிவரும் இந்த ஆர்பிடெரில் சந்திரனின் தரைப் பகுதியை படம் பிடிக்கும் கேமரா, அதிலுள்ள தனிமங்களின் அளவைக் கணக்கிடும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சந்திரனில் உறைபனி இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படம் எடுப்பதற்கான கருவி, துருவப் பகுதிகளை படம் பிடிக்கும் கருவி, சந்திரனின் வளி மண்டலத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்ப்ளோரர்-2 கருவி உள்ளிட்ட பல கருவிகள் இடம்பெற்றுள்ளன.
விக்ரம் லேண்டர்
சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரின் எரிபொருள் உட்பட மொத்த எடை 1471 கிலோவாகும். விக்ரம் லேண்டரிலிருந்து சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் கருவியின் எடை 27 கிலோவாகும்.
விக்ரம் லேண்டரில் சந்திரனில் ஏற்படக் கூடிய அதிர்வுகளை கண்டுபிடிக்கும் கருவி, சந்திரனின் தரைப்பகுதியில் உள்ள வெப்பம் மற்றும் பௌதீக பண்புகளை கண்டறியும் கருவி, சந்திரனின் அயனி மண்டலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் உபகரணம், சந்திரனின் மீள் பிரதிபலிப்பு திறனை கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பிரக்யான் ரோவர்
சந்திரனின் தரையில் சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் பிரக்யான் ரோவர் கருவியில், சந்திரனில் உள்ள தணிமங்களின் அளவு பற்றி கணக்கிடும் ஆல்ஃபா துகள்கள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், விண்கலம் தரையிறங்கிய இடத்தின் அருகே உள்ள தணிமங்களின் அளவினைக் கணக்கிடும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரில், ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் கருவி, ஒரு விநாடியில் ஒரு சென்டிமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோவர் கருவி சந்திரனில் சுமார் 500 மீட்டர் தூரம் பயணிக்கும். இது சூரியசக்தியை பயன்படுத்தி இயங்குவதோடு, லேண்டர் கருவியோடு தொடர்பு கொண்டு அதற்கு தகவல்களை அனுப்பும்.
விக்ரம் கருவி ஒரு நிலவுநாள், அதாவது, பூமியில் 14 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் பெங்களூரு அருகே பையாலலுவில் உள்ள இந்திய ஆழ்விண்வெளி கட்டமைப்பு மையத்தோடும், ஆர்பிடெர் மற்றும் பிரக்யான்ரோவர் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்து அனுப்பும்.
சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, அதன் வேகம் ஒரு செகண்டுக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டு, மிகவும் மென்மையான வகையில் சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கும். சந்திரனின் தென்துருவப் பகுதியில் உள்ள மன்சினஸ்-சி மற்றும் சிம்பெளியஸ்-என் என்ற இரண்டு பள்ளங்களுக்கு இடையே உள்ள தரைவெளியில் விக்ரம் இறங்கும்.
இதுவரை எந்த நாடும், நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலன் மூலம் ஆய்வு செய்யாத நிலையில், இந்தியா சந்திரயான்-2 விண்கலம் மூலம் சந்திரனின் தென்துருவப் பகுதியில் ஆய்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதனால், சந்திரனைப் பற்றிய புரிதல்கள் மேலும் மேம்படுவதோடு, வருங்காலத்தில் சந்திரன் மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் விண்வெளியில் ஆய்வினை மேற்கொள்ள உதவுவதோடு, வருங்கால சந்ததியினரும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள உதவும்.
சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 ராக்கெட் அனைத்தும் நவீன தொழில்நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும். ஏற்கனவே அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள், நிலவில் மென்மையாக விண்கலங்களை தரையிறக்கியுள்ள நிலையில், இந்த சாதனையை படைக்கவுள்ள நான்காவது நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (சுமார் ஆயிரம் கோடி) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.