எலிசா முதல் சாட் ஜிபிடி வரை - 1 | சாட்பாட் சரித்திரம்: ஓர் அறிமுகம்
ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பார்த்து, அவற்றின் எதிர்கால தாக்கத்தை அலசி ஆராயும் புதிய தொடரின் அறிமுகம்.
2023-ம் ஆண்டு ‘சாட் ஜிபிடி’ ஆண்டாக அமைந்திருக்கிறது. இணைய உலகில் எங்கும் சாட் ஜிபிடி பற்றிதான் பேச்சாக இருக்கிறது. சாட் ஜிபிடியால் என்ன எல்லாம், செய்ய முடியும் என்பது பற்றி பலரும் வியக்கின்றனர் என்றால், இந்த சாட்பாட்டின் தாக்கம் எப்படி எல்லாம் இருக்கும் என்பது பற்றிய கணிப்புகளும், எச்சரிக்கைகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் சாட் ஜிபிடியின் போட்டி சாட்பாட்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே, சாட் ஜிபிடி-க்கும், கூகுளுக்குமான போட்டி பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறது. இணையத் தேடலுக்கு மறுபெயராக கூகுள் கருதப்பட்டு வந்த நிலை மாறி, எதை தேடுவதாக இருந்தாலும், சாட் ஜிபிடியிடம் கேட்கலாமே என வல்லுநர்களே பேசத் துவங்கியிருக்கின்றனர்.
சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுளும் தன் பங்கிற்கு ஒரு சாட் பாட்டை அறிமுகம் செய்திருந்தாலும், இது கொஞ்சம் தாமதமான எதிர்வினையாகவே கருதப்படுகிறது. இதற்குள், மைக்ரோசாஃப்ட் தனது ‘பிங்’ தேடியந்திரத்தில் சாட் ஜிபிடியை ஒருங்கிணைத்து கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது.
‘பிங்’ என்று ஒரு தேடியந்திரம் இருந்தும், அதை பலரும் கண்டு கொள்ளாத நிலை மாறியிருக்கிறது. சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் செய்த முதலீட்டின் பலனை மைக்ரோசாப்ட் அறுவடை செய்யும் நிலையில் இருக்கிறது.
இதுவரை கூகுள் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது ஏஐ திறன் கொண்ட தேடியந்திரங்கள் பற்றி பேசத் துவங்கியிருக்கின்றனர். இனி, தேடல் உலகில், முடிவுகளின் பட்டியல்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, சாட்பாட்களிடமே நேரடியாக கேட்கும் நிலை உருவாகலாம் என்கின்றனர்.
சாட்பாட்களின் எழுச்சி உண்மையில் கூகுள் தேடியந்திரத்திற்கு பெரும் சவால்தான். இத்தனை ஆண்டுகளில் கூகுள் இப்போதுதான் முதல் முறையாக வலுவான போட்டியை சந்திக்கிறது.
இந்தப் போட்டிக்கு கூகுளால் ஈடு கொடுக்க முடியும் என்றாலும், சாட் பாட் திறனுக்கு மாறினால், கூகுள் தனக்கு வருவாயை கொட்டிக் கொடுக்கும் தேடல் முடிவுகள் பட்டியலில் இருந்து மாற வேண்டியிருக்கும். இது தான் கூகுள் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்.
கூகுளும், இணைய தேடலும் எப்படி உருமாறும் எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்க, சாட் ஜிபிடி போன்ற சாட்பாட்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய விவாதமும் சூடி பிடித்திருக்கிறது.
சாட்பாட்கள் மனிதர்களுடன் அவர்களை போலவே உரையாடி பதில் சொல்லும், கதை எழுதும், கட்டுரை எழுதும், படம் வரையும் என்பதெல்லாம் வியப்பை ஏற்படுத்தினாலும், இந்த ஏ.ஐ மென்பொருள்களை முழுவதும் நம்ப முடியுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை.
இன்னும் பலவித கேள்விகள் எழுந்தாலும், ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலக்கும் முக்கியக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். இதன் சாதக, பாதகங்கள் பற்றி நாம் கவலை கொண்டாக வேண்டும்.
ஏ.ஐ நுட்பம் புதிதாக வந்துவிடவில்லைதான். அதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அண்மை ஆண்டுகளில் எண்ணற்ற துறைகளில் ஏ.ஐ பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், ஏ.ஐ உலகில் சாட் ஜிபிடி பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்திருக்கிறது.
இணையத்தில் டைப் செய்யும்போது, அடுத்த வார்த்தை இதுவா என பரிந்துரைக்கும் ஆட்டோ கம்ப்ளீட் துவங்கி, அலெக்சா, சிரி என அரட்டை மென்பொருள்கள் வரை ஏ.ஐ-க்கான எண்ணற்ற உதாரணங்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் போதாமைகள் இல்லாமல் இல்லை. கூகுளின் இயந்திர மொழிபெயர்ப்பு வியப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பெரும்பாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருவதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
ஆனால், சாட் ஜிபிடி தனது புத்திசாலித்தனத்தால் (!) ஏ.ஐ நுட்பத்தை அறியாதவர்களையும், அதை சந்தேகிப்பவர்களையும் வியக்க வைத்திருக்கிறது. ஏ.ஐ மென்பொருளால் என்ன எல்லாம் சாத்தியம் என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறது. ஏ.ஐ உலகம் இப்படி ஒரு வெற்றிக்காக தான் காத்திருந்தது.
எல்லாம் சரி, சாட் ஜிபிடியின் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள, ஜிபிடி எனும் மூன்றெழுத்தின் பின்னே இருக்கும் நுட்பங்களையும், அவற்றின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், சாட் ஜிபிடி உருவான விதத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது.
சாட் ஜிபிடியின் செயல்திறன் சூட்சமத்தையும் (அதன் வரம்புகளையும் தான்) புரிந்துகொள்ள, சாட்பாட்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். சாட்பாட்களின் வரலாறு என்பது ஒருவிதத்தில் ஏஐ நுட்பத்தின் வரலாறாகவும் அமைகிறது.
சாட்பாட்களின் வரலாற்றில் இருந்து துவங்கி, சாட் ஜிபிடி எனும் பாய்ச்சல் நிகழ்ந்த விதத்தை விவரிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இதன்மூலம் சாட்பாட்களின் அடிப்படை அம்சங்களையும், அவற்றின் வகைகளையும், பயன்பாடுகளையும், கூடவே வரம்புகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் சாட் ஜிபிடியின் இடத்தைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் சாட்பாட்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவும் இது உதவும்.
சாட்பாட்களின் கதையில் இருந்து இந்தப் பயணத்தை துவங்கலாம் வாருங்கள்!
| தொடரும்... |
Edited by Induja Raghunathan