முதல் முயற்சி... 4 மாத உழைப்பு... யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐஏஎஸ் ஆன செளமியா சர்மாவின் உத்வேகம்!

முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய ரேங்க் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி சௌமியா ஷர்மாவின் கதை பலருக்கும் உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது.

முதல் முயற்சி... 4 மாத உழைப்பு... யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐஏஎஸ் ஆன செளமியா சர்மாவின் உத்வேகம்!

Friday March 03, 2023,

2 min Read

“முயற்சி திருவினையாக்கும்” - இதற்கு ஒரு செயலை தீவிரமாக முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது பொருள். குறிப்பாக, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை பெற்றுத் தரும். அப்படி விடாமல் முயற்சித்து, வெறும் நான்கு மாத கால முன்தயாரிப்பு மூலமே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற செளமியா சர்மாவின் வெற்றிக்கதை பல மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் எனப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற, பல ஆண்டுகள் கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. சிலருக்கு சின்ன வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், அதனை மெய்ப்பிக்கக்கூடிய யுபிஎஸ்சி தேர்வில் வெல்ல குறைந்தது ஓராண்டாவது கடினமாக உழைக்க வேண்டும்.

ஆனால், விதிவிலக்காக சிலர் குறைந்த மாதங்கள் மட்டுமே படித்து, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிடுவது உண்டு. அப்படி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கதைதான் இது.

ஐஏஎஸ் அதிகாரி செளமியா சர்மா:

2018-ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய ரேங்க் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி சௌமியா ஷர்மாவின் கதை பலருக்கும் உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த செளமியா, வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும்போதே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக அவர் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் சுயமாக படித்து வந்துள்ளார். செளமியாவின் கடின உழைப்பிற்கு பலனாக வெறும் 4 மாத முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதோடு, ரேங்க் பட்டியலிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

வழக்கறிஞர் டூ ஐஏஎஸ் அதிகாரி:

உண்மையான உத்வேகம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், செளமியா ஷர்மா 16 வயதிலேயே கேட்கும் திறனை இழந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாக சட்ட திட்டங்கள் குறித்து நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேசிய சட்டப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்க முடிவெடுத்த செளமியா சர்மா, அதற்காக கடுமையாக முயன்று தனது கனவை நனவாக்கியுள்ளார்.

சௌமியா தற்போது மகாராஷ்டிரா கேடரில் நாக்பூர் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் படுசுறுசுறுப்பாக இயங்கி வரும் செளமியா சர்மாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

பல சிரமங்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி சௌமியா சர்மா முன்னூதாரணமாக மாறியுள்ளார்.

Daily Capsule
IndiaMART aims to double revenue
Read the full story