செஸ் ஒலிம்பியாட்டில் நிறைமாத கர்ப்பிணி: கிராண்ட்மாஸ்டர் ஹரிகா பற்றி தெரியுமா?
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 மாத கர்ப்பிணியாக, பதக்கம் வென்றே தீருவது என்ற வேட்கையுடன் களமிறங்கியுள்ள இந்திய வீராங்கனை ஹரிகா உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தேசிய அளவில் 16 பட்டங்கள் உட்பட 45க்கும் அதிகமான பட்டங்களை பெற்றவர் இவர், 22 ஆண்டுகளாக செஸ் விளையாடி வருகிறார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் 30 வீரர், வீராங்கனைகள் 6 பிரிவுகளாகக் களமிறங்கியுள்ளனர்.
சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில், மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா.
31 வயதான இவர், தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். உலக செஸ் போட்டிகளில் 22 ஆண்டுகளாக விளையாடி வரும் ஹரிகா, நிறைமாதக் கர்ப்பத்தோடு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள மாமல்லபுரம் வந்திருப்பது, செஸ் விளையாட்டின் மீது அவர் கொண்டுள்ள பற்றையும், எப்படியும் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற அவரது கடமை உணர்வையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.

யார் இந்த ஹரிகா?
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவரான ஹரிகா, 6 வயது முதலே செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்று வருகிறார். தனது 9வது வயதில், பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக தனது 10வது வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், 12 வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரானார். சர்வதேச தர வரிசையில் 11வது இடத்தில் இருந்து வருகிறார். ஹரிகாவின் இந்த சாதனையை பாராட்டி, 2008ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அளித்து கௌரவித்தது.

2011ம் ஆண்டு சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார் ஹரிகா. இதன் மூலம் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது பெண் என்ற சாதனையை அவர் படைத்தார். ஹரிகாவுக்குப் பிறகு எந்த பெண்ணும் இதுவரை கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செஸ் விளையாட்டில் தனது திறமையை நிரூபித்து வரும் ஹரிகா, 2012, 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் வெண்கலம் வென்றவர் ஆவார். தேசிய அளவில் 16 பட்டங்கள் உட்பட 45-க்கும் அதிகமான பட்டங்களை பெற்றுள்ளார் ஹரிகா.

“செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராவது மிகவும் சிறப்பான விஷயம். எனது உடல் நலனையும் ஒலிம்பியாட்டுக்கு தயாராவதையும் சம நிலையில் வைத்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்து வரும் எனது கணவர் கார்த்தி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி,” என ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ஹரிகா.
கடந்த 22 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளிலும், இந்திய செஸ் போட்டிகளிலும் விளையாடி பட்டங்களைக் குவித்து வரும் ஹரிகா, இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் வென்றே தீருவது என்ற இலட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறார். ஹரிகாவுக்கு அவருடைய பயிற்சியாளர் அபிஜித் குந்தே மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் உள்ளிட்டோரும் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பாக ஹரிகா திகழ்ந்து வருகிறார். அவருக்கு இது 8-வது ஒலிம்பியாட் போட்டியாகும். ஹரிகாவின் அனுபவம் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மகளிர் அணியில், கொனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோருடன் சேர்ந்து ஹரிகாவும் களமிறங்குகிறார்.
“இம்முறை நாங்கள் பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், எங்கள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக, நாங்கள் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறோம், ஆனால் போட்டி நடைபெறும் நாளின் முடிவில், நாம் எப்படி கூட்டாகச் செயல்படுகிறோம் என்பது முக்கியம். எங்கள் திறனுக்கு மேல்செயல்பட நாங்கள்ஆர்வமாக இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் ஹரிகா.
இந்த 44வது ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டதன்மூலம், 2004ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8 ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சாதனையையும் புரிந்திருக்கிறார் ஹரிகா.

இந்தப் போட்டியிலும் தங்கம் வென்று தனது வெற்றி மகுடத்தில் மற்றுமொரு பதக்கத்தை ஹரிகா சூட்டிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்ல ஹரிகாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த 30 வீரர்களுக்கும் யுவர்ஸ்டோரி தமிழ் சார்பில் வாழ்த்துகள்!

