கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை ஆர்வலர்!
நாஸ்காம் தென்னிந்தியாவின் கல்வி சார்ந்த முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் உதயசங்கர், கஜா புயல் தாக்கிய பகுதிகளின் நிலையை சீர் செய்ய தானே களத்தில் இறங்கி பல பணிகளை செய்துள்ளார்.
2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இந்தப் புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. எண்ணற்ற வீடுகள் அடித்து செல்லப்பட்டன, மரங்களும் மின் கம்பிகள் வேறோடு பிடுங்கி வீசப்பட்டன. சாலைகள் முடங்கிப்போயின. விளைநிலங்கள் அழிந்துபோயின. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 2,50,000 பேர் இடம்பெயர்ந்தனர். 85,000-க்கும் அதிகமான வீடுகள் நாசமாயின.
வி உதயசங்கர்; நாஸ்காம் தென்னிந்தியாவின் கல்வி சார்ந்த முயற்சிகளுக்கு தலைமை வகிக்கிறார். இவர் நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தொழில்முறைக் கல்வி வழங்கும் ’மாற்றம் அறக்கட்டளை’ என்கிற அரசு சாரா நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார்.
இவர் கஜா புயலால் தீவிர பாதிப்பிற்கு உள்ளான மன்னார்குடிக்கு அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதன் பாதிப்பை வெகுவாக உணர்ந்திருந்தார். உடனே களத்தில் இறங்கினார். மக்கள் பத்திரமாக இடம்பெயர்ந்து செல்லவும் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டார்.
நவம்பர் 16-ம் தேதி உதயாவின் மனைவி அவரது பெற்றோரின் நிலம் மற்றும் கிராமத்தின் நிலையை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப் வாயிலாக உதயாவிற்கு அனுப்பினார். இதைக் கண்ட அவர், புயலில் தீவிரத்தை உணர்ந்தார். அவர் மறுநாள் மன்னார்குடியைச் சென்றடைந்தபோது அந்தப் பகுதி முழுவதையும் இருள் சூழ்ந்திருந்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஒன்றுகூடி தங்கள் வீடுகள், கால்நடைகள், மரங்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து மெழுதுவர்த்தி வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடையே பல்வேறு கேள்விகள் இருந்தன. மன்னார்குடியைச் சுற்றியுள்ள கிராமவாசிகளின் கேள்விகளுக்கு விடைகாண உதவவேண்டும் என்று உதயா தீர்மானித்தார்.
அவர் சென்னையில் உள்ள சாய்ராம் கல்வி நிறுவனங்களின் சிஇஓ சாய் பிரகாஷ் லியோ முத்துவை அணுகினார். திருத்துறைபூண்டியில் சாய்ராம் குழுமத்திற்கு சொந்தமான பள்ளி ஒன்று இருந்தது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய அங்கிருந்து தண்ணீர் வண்டிகள் அனுப்பப்பட்டன. தனது கிராமத்திற்கும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்குமாறு உதயா, சாய் பிரகாஷிடம் கோரினார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உருவாக்கியிருந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்துகொண்டார். அதன் பிறகு அவர் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, கேசிஜி பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல்கலைக்கழகம், செயிண்ட் ஜோசப் கல்லூரி என சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் அடங்கிய மற்றொரு குழுவை உருவாக்கினார்.
மேலும் மதுரை அருகே உள்ள கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை நேரு கல்வி குழுமம், கோவை எஸ்என்எஸ் கல்லூரி, கோவை ரத்தினம் கல்வி குழுமம் போன்றவற்றையும் அணுகினார். காவேரி டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளான நிலையை விவரித்து, 10 நிறுவனங்களிடமும் உதவி கோரினார். குறிப்பாக அதிக பாதிப்படைந்த நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருந்ததால் அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்தினார்.
அடுத்த நாள் உதயாவின் நண்பர்கள், உறவினர்கள் என தன்னார்வலர்கள் அடங்கிய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவும் குடிநீரும் விநியோகித்தது. நவம்பர் 18-ம் தேதி முதல் உதயா தனது அடுத்தகட்ட நிவாரணப் பணிகளைத் துவங்கினார்.
அவரது கோரிக்கையின்பேரில் கல்லூரிகள் தரப்பில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன் தன்னார்வலர்களாக செயல்பட மாணவர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர். பிறகு அதிக உதவி தேவைப்படும் கிராமங்களைக் கண்டறிவதே அவரது பணியாக இருந்தது. நிவாரணப் பொருட்களுடன் மன்னார்குடியை நோக்கி வந்த ட்ரக்கில் இருந்து இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவு, உடை, அத்தியாவசிய பொருட்களான பாய், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி போன்றவற்றை மக்களுக்கு விநியோகம் செய்வதில் உதயாவும் அவரது குழுவும் கவனம் செலுத்தினர்.
மற்ற கிராமங்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டன
நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகையில் தமிழகத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது வெளியுலகிற்குத் தெரியாமலேயே இருந்தது. மின்சாரம் இல்லை. செல்போன் கோபுரங்கள் இயங்கவில்லை. உதயா, குழுவில் இருந்த சிலருடன் 20 கி,மீ தூரம் வரை சென்று வாட்ஸ் அப் வாயிலாக அங்கு நடப்பவற்றை வெளியுலகத்துடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார். கஜா புயல் கரையைக் கடந்து ஆறு நாட்களுக்குப் பிறகே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டத் துவங்கியது.
ஐந்தாம் நாள் 16 மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று மன்னார்குடி பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை. உதயாவின் குழு அவர்களை கிராமத்திற்கு வழிநடத்தியது. அங்கு சென்றதும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினர்.
”மக்கள் தங்களது உடல் உபாதைகள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினர்,” என்றார் உதயா.
உதயா தனது குழுவுடன் மற்ற கிராமங்களுக்குப் பயணிக்கையில் வீடுகள், இதர சொத்துக்கள், கால்நடைகள், மரங்கள், நிலங்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்டிருந்த சேதங்களைக் காணமுடிந்தது.
”காற்றின் தீவிரம், அனைத்தையும் சூறையாடிச் சென்றது. எனக்குத் தெரிந்து சுமார் 20 சதவீத வீடுகள் மட்டுமே இந்த புயலால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்,”
என்று உதயா தனது நிவாரணப் பணிகள் குறித்து யுவர் ஸ்டோரி உடனான பிரத்யேக உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 கல்வி நிலையங்கள் உதயாவின் குழுவிற்கு தினமும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தன. உதயாவும் கிராமங்களின் நிலையை புகைப்படமாக எடுத்து ட்வீட் செய்யத் துவங்கினார். அவரது நண்பரும் தமிழ் திரைப்படக் கதாநாயகனுமான விஜய் சேதுபதி, உதயாவின் ட்வீட்டை மறுட்வீட் செய்தபோது அது வைரலாகப் பரவியது. அதிகளவிலான திரைப்பிரபலங்கள் இந்த முயற்சியில் பங்களிக்கத் துவங்கினர்.
”நாங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அனைவரிடமும் நிவாரணப் பொருட்களை மட்டுமே அனுப்புமாறு வலியுறுத்தினோம்,” என்று நினைவுகூர்ந்தார்.
அவரது நண்பர்களான நடிகர் சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் அவரது முயற்சியில் பங்களித்துள்ளனர்.
அதிக நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் இருந்தது. ஒரு மாதத்தில் 117 கிராமங்களுக்கு நிவாரணப் பணிகளும் நிவாரணப் பொருட்களும் சென்றடைய தனது குழுவுடன் உதவியுள்ளதாக தெரிவிக்கிறார் உதயா.
தென்னிந்தியாவின் அவ்வப்போதைய நிகழ்வுகளை வழங்கும் ஆன்லைன் தளமான சென்னை மீம்ஸ் இவரைப் பற்றி ஒரு மீம் பதிவிட்ட பிறகே நாஸ்காம் மனிதவளக் குழுவிற்கு உதயா இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
நாஸ்காம் தலைவர் தேபாஜனி கோஷ் உதயாவின் முயற்சியை பாராட்டியதுடன் நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் உறுப்பினராக இணைந்துள்ள நிறுவனங்கள் வாயிலாக உடனடியாக உதவினார். அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமத்தினருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுகளை தனிப்பட்ட முறையில் வழங்கி உதவினார்.
சில நாட்களுக்குப் பிறகு உடனடியாகத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களில் இருந்து நீண்ட கால தேவைகளில் கவனம் செலுத்தத் துவங்கினர். பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் 500 தார்பாலின்களை வழங்கியது. மேற்கூரையில் பிளாஸ்டிக் கவர்கள் போடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் வேல்மோகன் 50 பேருக்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். நிவாரணப்பொருட்களுடன் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் வாகனத்தில் இருக்கும் எரிபொருள் அளவைக் கேட்டறிந்து எரிபொருள் தேவையில் பாதியளவிற்கான தொகையை வழங்குவதே இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாக இருந்தது.
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர், நுண் கலை மற்றும் சிவில் பொறியியல் மாணவர்களை பள்ளிகளை சீரமைக்கும் பணிக்கு உதவ அனுப்பிவைத்தார்.
”குழந்தைகளின் மகிழ்ச்சி குடும்பத்தை சகஜ நிலைக்கு கொண்டு வரும் என்று என் நண்பர்கள் கூறினர். எனவே பள்ளிகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தினோம்,” என்று விவரித்தார்.
17 அரசுப் பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதை தெரிந்துகொண்டோம். அதில் 13 பள்ளிகள் பழுதுபார்க்கப்பட்டது. வகுப்பறைகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. மின்விசிறிகள் போடப்பட்டன. நுண் கலை மாணவர்கள் சுவர்களை வண்ணமயமாக மாற்றினர்,” என்றார்.
இத்தகைய மோசமான நிலையிலும் கிராம மக்கள் அவர்களிடம் போதுமான நிவாரணப்பொருட்கள் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்டால் அவற்றை வாங்க மறுத்தனர். தேவையான உதவிகளில் மட்டுமே கவனம் செலுத்துமாறு உதயாவிடமும் அவரது குழுவிடமும் வலியுறுத்தினர். கிராமமக்களும் தன்னார்வலர்களும் சூழலை நன்குணர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கியபோது சமூகப்பிரிவினைகள் மறைந்தது. நகராட்சி மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் மக்களுக்குத் தேவையான வசதிகளையும் மின் விநியோகத்தையும் வழங்க ஓய்வின்றி உழைத்தனர்.
”எங்களது குழுவின் நிவாரணப்பணிகள் 50,000-க்கும் அதிகமானோரை சென்றடைந்திருக்கும்,” என்கிறார் உதயா.
13 நாட்களுக்குப் பிறகு உதயா சென்னைக்கு திரும்பியபோதும் அவரது குழு 2019, ஜனவர் 1-ம் தேதி வரை பாதிக்கப்பட்டோருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தனர்.
உதயாவின் முயற்சிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் கிடைத்தது. நிகழ்வு ஒன்றில் அமைச்சர்கள் டாக்டர் நிலோஃபர் கஃபீல், மாஃபா கே பாண்டியராஜன் ஆகியோரிடமிருந்து உதயா விருது பெற்றார். அது மட்டுமல்லாது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2018, டிசம்பர் 13-ம் தேதி உதயாவை உணவருந்த அழைத்து அவரது செயல்பாடுகளைப் பாராட்டினார்.
”தற்போது என்னுடைய பணிச்சுமை காரணமாக நிவாரணப் பணிகளில் இருந்து விலகி இருக்கவேண்டிய கட்டாயம் இருப்பினும் பலருடன் இதுகுறித்து பேசி வருகிறேன்,” என்றார் உதயா.
சமூக நலனில் பங்களிக்க அனுமதித்தற்காக நாஸ்காம் நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவிக்கிறார். மக்களிடையே உரையாற்றுவதற்காக உஸ்பெகிஸ்தான், துபாய் ஆகிய பகுதிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளது. உள்ளூர் சமூகத்திலிருந்து இதன் வாயிலாக நிதி திரட்டலாம் எனத் தெரிவித்துள்ளனர். அரசு சாரா நிறுவனத்திற்கு உதவ மக்கள் விரும்புவதை அவர் சுட்டிக்காட்டினார்.
”இந்தப் பணியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டால் என்னுடைய வேலை பாதிக்கப்படும்,” என்றார். உதயா பணிக்குத் திரும்பியிருந்தாலும் அவரது தன்னார்வலப் பணிகள் நிறைவடையவில்லை.
“இன்னமும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது,” என்கிறார்.
ஏற்கெனவே சில பெரிய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள் சில கிராமங்களை தத்தெடுக்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிவடைந்ததும் மாநில அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இது அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
”இது என்னுடைய தனிப்பட்ட முயற்சி அல்ல. 300 பேர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மேற்கொண்ட பணி இது,” என்று உதயா குறிப்பிட்டார்.
ஆங்கில கட்டுரையாளர் : வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா