14 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் டைட்டில்: சென்னை மாணவியின் ‘சதுரங்க சாதனை'
யார் இந்த சவிதாஷ்ரி?!
சென்னையைச் சேர்ந்த வேலம்மாள் வித்யாலயா மாணவி, சவிதாஷ்ரி, 2021 பெல்கிரேட் ஸ்பிரிங் செஸ் போட்டியில் வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டர் (விஐஎம்) பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு 14 வயது மட்டுமே. தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் முன்னேறி வருகிறார். செர்பியாவில் பெல்கிரேட் ஸ்பிரிங் செஸ் தொடர் நடந்தது. இதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதனால் தாமதமான போட்டித் தொடர் போன்ற காரணங்கள் இல்லையென்றால் சர்வதேச பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகத் தேவையான சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)-ன் 2200 மதிப்பீட்டை அவர் அடைந்திருப்பார். இதற்கு முன்னர் 12 வயது இருந்தேபோது 2100க்கும் மேற்பட்ட மதிப்பீடு எடுத்து பெண் கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவிதாஷ்ரி தனது ஐந்து வயதிலிருந்தே செஸ் விளையாடி வருகிறார் என்றாலும், எட்டு வயதாகும்போது தான் போட்டி தொடர்களில் பங்கேற்கத் தொடங்கினார்.
”எனது சகோதரரும் ஒரு சதுரங்க வீரர், அவர் இப்போது விளையாடவில்லை என்றாலும். நான் அவருடன் உட்கார்ந்து அவர் விளையாடுவதைப் பார்ப்பேன். அவர் எப்படி விளையாடுவது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். அப்படி தான் செஸ் விளையாட்டை கற்றுக்கொண்டேன்,” என்கிறார்.
என் தந்தை சதுரங்க விளையாட்டில் நான் காட்டிய ஆர்வத்தை கண்டுபிடித்தார். அவர் தான் என்னை போட்டித் தொடர்களில் விளையாடுவதை ஊக்குவித்தார். நான் எனது விளையாட்டை மேம்படுத்திக்கொண்டிருக்கும்போது, நான் சதுரங்கத்தைத் தொடர விரும்புகிறேன் என்று புரிந்து கொண்டார்," என்றார் சவிதாஷ்ரி.
சவிதாஷ்ரி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார், செர்பியாவுக்கான பயணம் ஒரு போட்டிக்காக வெளிநாடு செல்ல வேண்டிய முதல் பயணம் கிடையாது. முன்னதாக, அவர் 2019ல் ஸ்பெயினில் நடந்த 12 வயதுக்குட்பட்ட போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் இவர்.
தனக்குப் பிடித்த சதுரங்க நகர்வுகள் குறித்து பேசிய சவிதாஷ்ரி,
“சிசிலியன் ஓப்பனிங் மற்றும் கிங் இந்திய பாதுகாப்பு டிஃபன்ஸ் விளையாடுவதை நான் அதிகம் விரும்புகிறேன். ஆன்லைன் வகுப்புகள் மூலம், பாடங்கள் நடைப்பெறுவதால், வகுப்பை மிஸ் பண்ணுவதில்லை, அதனால் சதுரங்க விளையாட்டை நிர்வகிப்பது தற்போது கொஞ்சம் எளிதாகிவிட்டது. முன்னதாக, நான் அடிக்கடி போட்டிகளுக்கு பயணிக்க வேண்டியிருப்பதால் இது ஒரு பிரச்சனையாக இருக்கும். ஆனால் பள்ளி நிர்வாகம் எனக்கு ஆதரவாக உள்ளது," எனக் கூறுகிறார்.
பெரும்பாலான நேரங்களில், அறையில் அமர்ந்து சதுரங்கம் விளையாடி அதில் மேம்பட முயற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் செஸ் விளையாட்டு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது சவிதாஷ்ரி பெயரும் பொறிக்கப்பட்டு வருகிறது.
தகவல் உதவி: Chess base india | தமிழில்: மலையரசு