குறைபாடு மற்றும் சிறப்புக் குழந்தைகள் கூடி விளையாட ‘அனைவருக்குமான பூங்கா’ அமைக்கும் சென்னை அமைப்பு!
குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக, சென்னையை தளமாகக் கொண்ட ’Kilikili' அமைப்பு அனைவருக்கும் உள்ளடங்கிய விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு விளையாட்டு பூங்காங்களை சென்னை, பெங்களுரு உள்ளிட்ட இடங்களில் அமைத்துள்ளனர்.
மூன்று வயதான ஆர்.லக்ஷனாவின் மழலையர் பள்ளி அனுமதி முடிவு அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன், மாலைநேரம் முழுவதும் மைதானத்தில் உற்சாகமாக விளையாடினார்.
டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட லக்ஷக்ஷனா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இன்பினிட்டி பூங்காவில் உற்சாகமாக இருப்பதற்காக எதையும் பெரிதாக செய்ய வேண்டியிருக்கவில்லை.
ஒரு உபகரனத்தின் மையத்தில் மேலெழுந்த ஸ்டூலில் அவர் உட்கார வைக்கப்பட்டவுடன், கீழே தரை மட்டத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் அந்த இயந்திரத்தை சுற்றி வரச்செய்தனர்.
“இங்கு வருவது அவளை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. எனது மன அழுதத்தையும் குறைக்கிறது,” என்கிறார் லக்ஷனாவின் தந்தையும், தினக்கூலி தொழிலாளியுமான ராஜா.
சென்னையைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணமூர்த்தியின் 'கிலிகிலி' (Kilikili) இந்த பூங்காவை கொரோனா தொற்று காலத்தில் அமைத்தது. நாடு முழுவதும் அனைவருக்குமான விளையாட்டு இடங்களை உருவாக்கி வரும் இந்த அமைப்பின் புதிய பூங்காவாக இது திகழ்கிறது.
கவிதா கிருஷ்ணமூர்த்தி, 17 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட தனது மகன் ஆனந்த், ஊஞ்சலை பார்த்து உற்சாகம் அடைந்த போது, அனைவருக்குமான பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை உருவாக்கிக் கொண்டார். அப்போது அவரது மகனால் ஊஞ்சல் ஆட முடியவில்லை.
“விளையாட்டு பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் யாரும் இல்லை என்பதை கணவரும் கவனித்தார்,” என்கிறார்.
இந்த குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களுக்கு வெளியே கவிதா உள்ளிட்ட பெற்றோர்கள் சந்தித்து பேசிக்கொண்ட போது இந்த இடைவெளியை உணர்ந்தனர்.
“உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடு கொண்ட எங்கள் குழந்தைகளுக்கு என பொது விளையாட்டு இடங்கள் இல்லாதது எங்கள் விவாதங்களில் தொடர்ந்து இடம்பெறும் கவலையாக இருந்தது,” என்கிறார் கவிதா.
”எங்கள் முதல் ஆலோசனையை அடுத்து அதை சோதித்துப்பார்க்க பெங்களூருவில் உள்ள சின்ன பூங்காவுக்கு குழந்தைகளை அழைத்துச்சென்றோம். அங்கு இல்லாத ஆனால் அவர்கள் விரும்பிய அம்சங்களை எல்லாம் வரைந்து காட்டச்சொன்னோம். கிட்டத்தட்ட கனவு பூங்கா போல. இதன் முடிவுகள் அற்புதமாக இருந்தன,” என்கிறார்.
குழந்தைகள் வரைந்த படங்கள், விழுந்துவிடுவோம் என அச்சம் தராத ஊஞ்சல், கீழாக வளைந்த சறுக்கு மரம், நிறைய மலர்கள் என அமைந்திருந்தன.
“குறிப்பாக ஒரு சிறுமி, ஒரு மூலையில் பெரிய மரங்கள், மறுபக்கம் உள்ள வெற்றிடத்தில் விளையாட்டுப் பகுதி என வரைந்திருந்தாள்,” என்கிறார் கவிதா.
இந்த எண்ணங்களை முன்னோக்கி எடுத்துச்சென்று ’அனைவருக்குமான விளையாட்டு பூங்கா’க்களை உருவாக்கும் வகையில் கிலிகிலி, நன்கு ஆய்வு செய்யப்பட்ட, மாற்றுத்திறனாளி குழந்தைகள் நட்பான விளையாட்டு பூங்காக்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மற்ற குழந்தைகள் பெறும் அதே விளையாட்டு பலன்களை இந்த குழந்தைகளும் பெற முடியும்.
தற்போது இந்த அமைப்பு, பெங்களூரு, சென்னை, நாக்பூர், மங்களூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 10 அனைவருக்குமான விளையாட்டு மைதானங்களை உருவாக்கி இருக்கிறது. உள்ளூர் குழுக்கள், பெற்றோர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இவை அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சிகிச்சை, வாசிப்பு, எழுதுவது, பள்ளிப் பயிற்சி போன்றவை மூலம் அவர்களை மைய நீரோட்டத்தில் கொண்டு வர முயல்கின்றனர்.
“இது இயல்பானது என்றாலும், உங்கள் குழந்தை விளையாடி மகிழ வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். என் அனுபவத்தில் கூட, ஆனந்திற்கு புதிர் விளையாட்டுகள் பிடிக்கவில்லை எனத் தெரிந்து கொண்டேன். இதற்கு புரிந்து கொள்ளுதல் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவன் ஒலிகள் மற்றும் ஒலி பொம்மைகளை விரும்பியதை உணர்ந்தேன்,” என்கிறார் கவிதா.
மூளை வளர்ச்சி எட்டு வயதில் உச்சத்தில் இருப்பதாக குழந்தை நல வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பெற்றோர்கள், குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் இயக்க மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை வளர்க்க இயற்கையை பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“குழந்தைகளின் மூளை ஒரு ஸ்பாஞ்ச் போன்றது...” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மிரா அறக்கட்டளையின் தலைமை சிகிச்சையாளர் துர்கா பிரியதர்ஷினி.
இந்த அமைப்பு பல்வேறு தரப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
“தண்ணீர், மணல், வெளிப்புற விளையாட்டு என குழந்தைகள் பலவிதமான சூழலை எதிர்கொள்ளும் போது, அது அவர்கள் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறது. காட்சி, ஒலி மற்றும் உத்தி விளையாட்டு மூலம் கற்றுக்கொள்ளும் உடல் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இது இன்னும் பொருந்தும்,” என்கிறார் துர்கா.
கிலிகிலி 2006ல் பெங்களூருவில் உள்ள கோல்ஸ் பூங்காவில் சிறப்பு குழந்தைகளுக்கான முதல் பூங்காவை அமைத்தது.
வீட்டிலே இருப்பது அல்லது சும்மா வேடிக்கை பார்ப்பது என்பது மாறி, சிறப்புத்தேவை கொண்ட குழந்தைகள், உடல் ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கான பக்கெட் இருக்கை ஊஞ்சல், உயரத்தை கண்டு அஞ்சும் குழந்தைகளுக்கான விளையாட்டு, மணல் படுக்கைகள் என பலவிதமான விளையாட்டுகளை இங்கு விளையாடி மகிழந்தனர்.
இதன் விளைவாக, கோல்ஸ் பூங்கா மாலை வேளைகளில் குழந்தைகளின் கேளிக்கை சிரிப்பொலிகளால் நிறையத்துவங்கியது. கன்னட மொழியில் இதற்கான வார்த்தை தான் கிலிகிலி.
அடுத்து வந்த ஆண்டுகளில் கவிதா, ஒரு பெற்றோராகவும், கிலிகிலி நிறுவனராகவும் நிறைய மாற்றங்களை சந்தித்து வந்துள்ளதாகக் கூறுகிறார். சக பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள், மாற்றுத்திறனாளி அமைப்புகளுடனான உரையாடல்கள் மூலம் மேலும் பல நகராட்சி அமைப்புகள் இதில் ஆர்வம் கொண்டன.
சென்னை சாந்தோமில், சென்னை மாநாகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து கிலிகிலி சார்பில் இன்பினி’ட்டி பூங்கா’ அமைக்கப்பட்டது.
“மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டணி அமைப்பு ஏற்கனவே சென்னை மாநகராட்சியுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியிருந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு பூங்காவிலும் குழந்தைகளின் மாறிவரும் விளையாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப விளையாட்டு இடங்களை வடிவமக்கத்துவங்கினோம்,” என்கிறார் கவிதா.
முதல் பகுதி தாழ்வான சறுக்கு மரம், பக்கெட் ஊஞ்சல் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி அதிக உயர சறுக்கு மரங்கள், கயிறு விளையாட்டுகள் கொண்டுள்ளன. மூன்றாவது பகுதி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கானது. சக்கர நாற்காலி கூடை பந்தாட்டம், ஸ்கேட்டிங் மற்றும் ஓட்ட பகுதி கொண்டது.
பூங்காவில் இசை சார்ந்த விளையாட்டு பொருட்களும் இருக்கின்றன. நடக்கும் போது புரிதலை தூண்டும் அம்சங்களும் உள்ளன.
கிலிகிலியின் அனைவருக்குமான பூங்கா, வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான அமைதி பகுதியையும் கொண்டுள்ளன. ஆட்டிசம் போன்ற குறைபாடு கொண்ட குழந்தைகள் அதிக உற்சாகம் கொண்ட இடங்களில் மிகவும் சுருங்கிபோகலாம். இந்த அமைதி பகுதிகளில் லூடோ அல்லது ஸ்னேக்ஸ்- லேடர் விளையாடு விளையாடலாம்.
“சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகள் பெற்றோர்களிடம் அவர்கள் தேவைகள் தொடர்பாக எப்போதும் புரியாத தொழில்நுட்ப மொழியில் பேசுகிறோம். ஆனால் விளையாட்டு எளிமையானது, சக்தி வாய்ந்தது. இந்த குழந்தைகள் பரந்த அளவில், நம்பிக்கை கொண்டவர்களாக வளர இது உதவுகிறது,” என்கிறார் துர்கா.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
சிறப்புக் குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்வியை வழங்க போராடும் ஃபரிதா ரிஸ்வான்!
Edited by Induja Raghunathan