சிறப்புக் குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்வியை வழங்க போராடும் ஃபரிதா ரிஸ்வான்!
ஃபரிதா ரிஸ்வான் பெங்களூருவில் தொடங்கிய My Giggle Garden ப்ரீ ஸ்கூலில் சிறப்புக் குழந்தைகளும் சாதாரண குழந்தைகளும் ஒன்றிணைந்து விளையாடி கற்றுக்கொள்கிறார்கள்.
வழக்கமாகவே குழந்தைகள் பெற்றோர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்ப்பார்கள். ஆனால் ஒரு சிலரது வாழ்க்கையில் குழந்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் பயணிக்கும் பாதையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியமைத்துவிடுகிறார்கள்.
ஃபரிதா ரிஸ்வானுக்கு அப்படித்தான் நடந்துள்ளது. இவரது மகள் ஃபர்ஹீனா சிறப்புக் குழந்தை. ஃபரிதா ஒருமுறை தனது மகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஃபர்ஹீனா பலமுறை ’என்னைப் போன்றவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள்…’ என்றும் ‘உங்களைப் போன்றவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள்…’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவோ முயன்றும் தனது மகள் இந்த உலகத்தில் ஒன்றியிருக்காமல் ஒதுக்கப்பட்டதாக நினைக்கிறாரோ என்கிற உணர்வு இந்த உரையாடலின் போது ஃபரிதாவிற்கு ஏற்பட்டது.
“ஃபர்ஹீனா போன்று சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாறவேண்டும் என்று விரும்பினேன். எனவே சாதாரணக் குழந்தைகளும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளும் ஒரே இடத்தில் படிக்கும் வகையில் ப்ரீ ஸ்கூல் திறக்கத் தீர்மானித்தேன்,” என்கிறார் ஃபரிதா.
2017-ம் ஆண்டு ஜுன் மாதம் 15-ம் தேதி My Giggle Garden என்கிற பெயரில் ப்ரீ ஸ்கூல் திறந்தார்.
“இது வழக்கமான சிறப்புப் பள்ளிகள் போல் இருக்கக்கூடாது என்பதால் ஒரு சிறப்புக் குழந்தைக்கு எட்டு சாதாரண குழந்தைகள் (1:8) என்கிற விகிதத்தில் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்தேன்,” என்கிறார் ஃபரிதா.
போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை
ஃபரிதாவிற்கு போராட்டம் என்பது புதிதல்ல. பழக்கப்பட்ட ஒன்றுதான். 1992-ம் ஆண்டு இவரது அப்பாவிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவரது சகோதரிக்கு 1994-ம் ஆண்டு புற்றுநோய் கண்டறியப்பட்டது. ஃபரிதாவிற்கும் 1996-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
2006-ம் ஆண்டு ஃபரிதாவின் அம்மா புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஃபரிதாவின் சகோதரிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை இறுதிகட்டத்தை எட்டும்போது ஃபர்ஹீனா சிறப்புக் குழந்தை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
“மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவாறு புற்றுநோய் என்னை மாற்றிவிடுமோ என்று பயந்தேன். ஆனால் மற்றவர்களின் வேதனைகளைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினேன். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது,” என்கிறார்.
My Giggle Garden தொடர்பான சவால்கள்
My Giggle Garden திறக்கத் தேவையான பணம் திரட்டமுடியவில்லை. இவரது மகன் ரயன் அம்மாவின் கனவிற்கு உதவியுள்ளார். ரயனுக்கு ஒரு மிகப்பெரிய தொகை போனஸாக கிடைத்துள்ளது. அதை அம்மாவிடம் கொடுத்துள்ளார்.
ஃபரிதா தன்னுடைய சேமிப்புத் தொகையைக் கொண்டும் மகன் கொடுத்த தொகையைக் கொண்டும் பள்ளியைத் திறந்தார். இருப்பினும் செலவு அதைக் காட்டிலும் அதிகம் இருந்ததால் சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார்.
ஆரம்பத்தில் பெற்றோர் இதுபோன்று சிறப்புக் குழந்தைகளையும் உள்ளடக்கிய பள்ளிக்கு அனுப்பத் தயங்கியுள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. மற்ற குழந்தைகள் சிறப்புக் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு சகஜமாகப் பழகினாலும் அவர்களது பெற்றோர்களை சமாளிப்பது சவாலாக இருந்துள்ளது.
இங்குப் படித்த மாணவர்களில் ஒருவர் திஷா. இவர் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள குழந்தை. இரண்டு முதல் நான்கு வயதுள்ள குழந்தைகள் திஷா உடன் பழகுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் திஷாவிடம் இருந்து விலகியே இருக்குமாறு குழந்தைகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தனை சவால்கள் இருப்பினும் ஓராண்டு காலத்தில் இந்தச் சூழலில் மாற்றம் தென்பட்டது.
குழந்தைகளிடையே ஏற்புத்தன்மை
“சிறப்புக் குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகள் அவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். சாதாரண குழந்தைகளைக் கண்டு அவர்களைப் போன்றே கற்றுக்கொண்டார்கள். இவ்வாறு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நேரம் செலவிடுவதைக் கண்டு பெற்றோர் மனதில் இருந்த பயம் நீங்கியது. எங்கள் செயல்பாடுகளைப் பாராட்டத் தொடங்கினார்கள்,” என்றார் ஃபரிதா.
அப்போது முதல் அனைத்தும் சிறப்பாகவே சென்றுகொண்டிருந்தது. லாபகரமாகவும் செயல்பட்டது. குழந்தைகள் உற்சாகமாகக் காணப்பட்டார்கள். பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பக்கூட அந்தக் குழந்தைகளுக்கு மனமில்லை.
அனைத்தும் சரியாக நடந்துகொண்டிருந்த சூழலில்தான் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது. பள்ளி இயங்கிய இடத்தின் உரிமையாளர் வாடகையை உயர்த்தினார். வேறு வழியின்றி வகுப்புகளை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பள்ளி மீண்டும் திறக்க விருப்பம்
ஃபரிதா தற்போது ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகிறார். அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்கவேண்டும் என்பதே இவரது கனவு. அதற்காகப் பள்ளியை மீண்டும் திறக்க விரும்புகிறார்.
“My Giggle Garden வாங்க பலர் முன்வந்தார்கள். ஆனால் அனைவருமே சிறப்புக் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு சாதாரணக் குழந்தைகளை மட்டும் சேர்த்துக்கொண்டு பள்ளியை நடத்தவே விரும்பினார்கள். இந்த கண்ணோட்டத்தை மாற்றவே நான் போராடி வருகிறேன்,” என்கிறார் ஃபரிதா.
இவரைப் போன்றே சிறப்புக் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே சரியான துவக்கம் இருக்கவேண்டும் என்கிற ஒத்த சிந்தனை கொண்ட நபருடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறார்.
குழந்தைகளின் பெற்றோர் பள்ளி திறப்பு குறித்து தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதாக வாக்களித்து அதை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக கவலை கொண்டிருக்கிறார்.
“நான் மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறேன். பள்ளி கட்டிடத்திற்கான பிளான் தயாராக உள்ளது. என்னுடைய கனவு நனவாக இடமும் சரியான பார்ட்னரும் மட்டுமே தேவை. நிறைய போராட்டங்களை சந்தித்துவிட்டேன்.
நான் சரியாகத்தான் செயல்படுகிறேனா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. என்னைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துத் தட்டிக்கொடுத்தால் நான் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்துகொண்டிருக்கேன் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா