ரோபோட்டிக்ஸ் மூலம் ஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி– ரம்யா மூர்த்தியின் உன்னத முயற்சி!
சென்னையைச் சேர்ந்த ரம்யா எஸ் மூர்த்தி 'நிமயா இன்னொவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனம் தொடங்கி ரோபோடிக் சாதனங்களின் உதவியுடன் பயிற்சியாளர்கள் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க உதவுகிறார்.
பொதுவாக பெற்றோர்களுக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். குழந்தை நன்கு படிக்கவேண்டும். பாட்டு, நடனம், நீச்சல் என பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும். இப்படி பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
சாதாரணக் குழந்தைகளின் பெற்றோருக்கு இப்படியெல்லாம் பல கனவுகள் இருக்கும். ஆனால் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறுபடும். அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு கற்றுக்கொண்டாலே போதும் என்று நினைப்பார்கள். ஏனெனில், இந்தக் குழந்தைகளைப் பொருத்தவரை அடிப்படை விஷயங்களே மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகின்றன.
அப்படிப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு ரோபோடிக்ஸ் உதவியுடன் பயிற்சியளிக்கப்பட உதவுகிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா எஸ் மூர்த்தி.
ரம்யா மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். அம்மா, அப்பா, தம்பி, பெரியம்மா ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்துள்ளார். ரோபோடிக்ஸ் பிரிவில் எம்டெக் முடித்துள்ளார்.
Social Robotics for Children with Autism and other Disabilities என்பதை மையமாகக் கொண்டு பிஎச்டி படித்தார்.
”பிஎச்டி-யில் நான் பண்ண டிவைஸ்தான் கம்பெனியா கன்வர்ட் ஆகியிருக்கு,” என்கிறார் ரம்யா.
(Nimaya Innovations Private Limited) என்பதுதான் இவரது நிறுவனத்தின் பெயர். 2018ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ’நிமயா’ என்றால் சமஸ்கிருதத்தில் மாற்றத்தைக் கொண்டு சேர்ப்பது என்று பொருள்படும்.
ஆட்டிசம் மற்றும் இதர குறைபாடுள்ள குழந்தைகளிடையே மாற்றத்தைக் கொண்டு சேர்த்து அவர்கள் அன்றாட வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவுவதே ரம்யாவின் நோக்கம்.
Nimaya குழு
ரம்யா எஸ் மூர்த்தி, எஸ்.ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி இருவரும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்கள். எஸ்.ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தயாரிப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமிக்கவர்.
நிறுவனத்தின் இயக்குநர் ரமா எஸ் மூர்த்தி. ஸ்பெஷல் எஜுகேட்டர்ஸ், ப்ரீ ஸ்கூல் எஜுகேட்டர்ஸ், குழந்தைகள் நல மருத்துவர் போன்றோர் இணைந்திருந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர என்ஜினியர்கள், ஐடி நிபுணர்கள், ஆப் டெவலர்ப்பர்கள் என ஏழு பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
நிமயா உருவாக்கப்பட்டதன் பின்னணி
“கதவைத் திறக்கறது, பாட்டில் மூடியைத் திறந்து தண்ணி குடிக்கறது, பென்சில் பிடிச்சு எழுதறது இதெல்லாம் நாம சாதாரணமா செய்யற விஷயங்கள். அதாவது தனிச்சையான செயல். ஆனா ஆட்டிசம் மாதிரியான குறைபாடு இருக்கறவங்களுக்கு இதெல்லாம் ரொம்பவே சவாலான விஷயம்,” என்கிறார் ரம்யா.
நம் மூளை ஒரு விஷயத்தை நம்மிடம் சொல்கிறது. அதை நாம் செய்து முடிக்கிறோம். இந்தத் தகவல் மீண்டும் மூளைக்கு செல்கிறது. அதாவது அந்த குறிப்பிட்ட வேலை செய்து முடிக்கப்பட்டது என்பது மூளைக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், நரம்பியல் தொடர்பான குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தத் தொடர்பு இருக்காது என ரம்யா விவரிக்கிறார்.
பொதுவாக இத்தகைய குறைபாடு இருப்பவர்களிடம் 4 முக்கிய பிரச்சனைகள் இருக்கும்.
- தகவல் தொடர்பு
- நடத்தை தொடர்பான சிக்கல்கள்
- சமூக தொடர்பு இருக்காது
- சைக்கோமோட்டார் திறன்கள் பாதிக்கப்பட்டிருக்கும்
இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எப்படி பயிற்சியளிப்படுகிறது என்பதை ரம்யா ஆய்வு செய்தார். பல்வேறு ஆய்வறிக்கைகளை படித்தார். சிறப்புப் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அங்கிருப்பவர்களுடன் உரையாடினார்.
அதன்படி, சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பவர்கள் இதுவரை முதல் மூன்று அம்சங்களிலேயே கவனம் செலுத்தி வந்தது தெரியவந்தது. சைக்கோமோட்டார் திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் யாரும் அதிகம் ஈடுபடவில்லை என்பதை தனது விரிவான ஆய்வின் மூலம் தெரிந்துகொண்டார்.
சைக்கோமோட்டார் திறன்களில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்பது மட்டுமல்லாது சிறப்புக் குழந்தைகளுக்கு ரோபோடிக்ஸ் சாதனங்கள் உதவும் என்பதும் அவருக்குப் புலப்பட்டுள்ளது.
”ரோபோக்கள்; ஆட்டிசம் மாதிரியான குறைபாடு இருக்கறவங்களை ரொம்பவே அட்ராக்ட் பண்ணுது. இதை தெரிஞ்ச்கிட்டேன். எனக்கு அதுல நிபுணத்துவம் இருந்ததால் அதை பயன்படுத்தி உதவ முடிவு பண்ணேன்,” என்கிறார்.
ரோபோடிக்ஸ் உதவியுடன் பயிற்சி
ரோபோடிக் அம்சங்களுடன் கற்றுக்கொடுக்கும்போது குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றனர் என்று கூறும் ரம்யா,
“ஒரு குழந்தைகிட்ட அவங்க அம்மா ஒரு பொருளை எடுத்து வைக்க சொல்றாங்க. முதல்ல ரெண்டு மூணு தடவை பொறுமையா சொல்லுவாங்க. அதையே திரும்ப திரும்ப சொல்லும்போது அவங்க சொல்ற தொணி மாறிடும். இது குழந்தைங்களோட கற்றலை பாதிக்கும். ஆனா ஒரு ரோபோ பத்தாயிரம் தடவை பண்ண சொன்னாலும் ஒரேமாதிரி பண்ணும். குழந்தைங்களும் ஈஸியா கத்துக்கலாம்,” என்கிறார்.
அதேசமயம் மனிதர்களின் தலையீட்டுடன் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ரம்யா. அதாவது ரோபோக்கள் உதவியுடன் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே இவரது திட்டமாக இருந்தது.
“எங்க டிவைஸ் தானாகவே குழந்தையை ட்ரெயின் பண்ணாது. நாங்க அந்த மாதிரி டிசைன் பண்ணலை. ஆக்குபேஷன் தெரபிஸ்டோ, ஸ்பெஷல் எஜுகேட்டரோ எங்க டிவைஸ் யூஸ் பண்ணி ட்ரெயின் பண்ணுவாங்க,” என்கிறார்.
வழக்கமாக பந்து, மரத்தால் ஆன பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு ஆட்டிசம் மாதிரியான குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். அந்த பொருட்களுக்கு பதிலாக இந்த சாதனத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் வழங்கும் சாதனங்கள் ஐஓடி சார்ந்த ரோபோடிக் சாதனங்கள். எந்தப் பகுதியில் இருந்து இந்த சாதனங்களை இயக்கினாலும் அதன் தரவுகள் ரம்யாவிடம் கிடைத்துவிடும். அந்த அளவிற்கு அனைத்தும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன.
“எம்டெக் முடிச்சுட்டு பிஎச்டி அப்ளை பண்ணும்போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நிறைய பேரைப் பார்த்தேன். வெவ்வேற வயசை சேர்ந்தவங்களா இருந்தாங்க. இவங்களுக்கு உதவணும்னு தோணுச்சு,” என்கிறார்.
ரம்யாவும் அவரது அப்பாவும் சேர்ந்து ரோபோடிக் டிவைஸ் போன்ற ஹாபி கிட்ஸ் நிறைய செய்துள்ளனர். ஒருமுறை இதுபோன்ற கிட் உருவாக்கி இருவரும் ஒரு பள்ளியில் சென்று கொடுத்துள்ளனர். குழந்தைகளும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் ரோபோடிக்ஸ் சாதனங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
”தஞ்சாவூர் சாஸ்தா கல்லூரியில பிஎச்டி பண்ணேன். என்னோட கைட் ஆட்டிசம் சம்பந்தப்பட்ட ஆய்வுல இருந்தது எனக்குத் தெரியவந்தது. ஆட்டிசம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவற நோக்கம் ரெண்டு பேருக்குமே இருந்துது. இப்படித்தான் என்னோட ரிசர்ச் ஆரம்பிச்சுது,” என்றார்.
பிஎச்டி முடித்து – நிறுவனம் தொடக்கம்
ரம்யா பிஎச்டி முடிக்க இருந்த சமயம் அது, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டிய அவகாசம் முடிய ஒரு வாரகாலம் மட்டுமே இருந்தது. ஒரு மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கிக்கொண்டார் ரம்யா.
”கிட்டத்தட்ட 5 நாள் வெண்டிலேட்டர்ல இருந்தேன். உடம்புல தீக்காயம் இருந்தது. 6 மாசம் வரைக்கும் பேசவே முடியாம போச்சு. பிஎச்டி முடிக்க நான் கஷ்டப்பட்டு தயார் பண்ண எல்லா டேட்டாவும் எரிஞ்சு போயிடுச்சு,” என்று நினைவுகூர்ந்தார்.
ரம்யா தனது பிஎச்டி ஆய்வின் ஒரு பகுதியாக திருச்சி, தஞ்சாவூர், சென்னை என பல பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆட்டிசம் மற்றும் இதர குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நேரடியாக பயிற்சியளித்துள்ளார்.
அப்படி பெங்களூருவில் இவர் பயிற்சியளித்த பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் இவரை அழைத்துள்ளார்.
”விபத்து நடந்ததால என்னால பேசமுடியலைன்னு அவங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அவங்க நான் சொல்றதை மட்டும் கேளுங்கன்னு சொன்னாங்க. பிஎச்டி பண்ணப்ப நான் அந்த ஸ்கூல்கூட இணைஞ்சு வேலை செஞ்சேன். அங்க படிச்ச ஒன்றரை வயசு குழந்தைக்கு சைக்கோமோட்டார் திறன் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்ததா டயாக்னைஸ் பண்ணியிருந்தாங்க. அந்தக் குழந்தைக்கு நான் பயிற்சி கொடுத்திருந்தேன். அந்த மேடம் எனக்குக் கால் பண்ணி அந்தக் குழந்தை நல்லா இம்ப்ரூவ் ஆகியிருந்ததா சொன்னாங்க. கத்துகிட்ட எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கிட்டு செய்யறதா சொல்லி சந்தோஷப்பட்டாங்க,” என்கிறார்.
பொதுவாக ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் கற்றுக்கொள்வதை நினைவில் தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என விவரிக்கிறார்.
அந்த ஆசிரியர் அழைத்து பாராட்டியது ரம்யாவிற்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளித்துள்ளது.
மீண்டும் தரவுகளைத் திரட்டி முழுமூச்சுடன் செயல்பட்டு 2018-ம் ஆண்டு பிஎச்டி முடித்தார். உடனே ’நிமயா இன்னொவேஷன்’ நிறுவனத்தை பதிவு செய்தார்.
நிமயா பயிற்சி
மற்ற பயிற்சி முறைகளுடன் ஒப்பிடும்போது நிமயா மூலம் பயிற்சியளிப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக முன்னேற்றியிருப்பதாக ரம்யா சுட்டிக்காட்டுகிறார்.
“நாங்க கண்ட்ரோல் குரூப், டார்கெட் குரூப் வெச்சு டெஸ்ட் பண்ணும்போது எங்க சிஸ்டம் கற்றல் திறனை 60% அதிகப்படுத்தினது தெரியவந்துது. உதாரணத்துக்கு ஒரு குழந்தைக்கு ஒரு கதவை திறந்து மூட சொல்லிகொடுக்கணும்னா வழக்கமான ஆக்குபேஷன் தெரபிஸ்ட் மூலமா கத்துக்கும்போது 8 மாசத்துலேர்ந்து ஒரு வருஷம் வரைக்கும் ஆகும். ஆனா எங்களால 2 மாசத்துல கத்துக்கொடுக்க முடியும்,” என்கிறார்.
சென்னை மயிலாப்பூரில் ஒரு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு நேரடியாக அழைத்து வந்து பயிற்சி பெறலாம்.
மேலும், ஏராளமான ஸ்பெஷல் ஸ்கூல்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த சிறப்பு பள்ளிகள் நிமயா டிவைஸ் பெற்றுக்கொள்ள சப்ஸ்கிரைப் செய்துள்ளன.
”நாங்க இப்ப ஆறு டிவைஸ் வெச்சிருக்கோம். சிறப்பு பள்ளிகளுக்கு எந்த டிவைஸ் வேணுமோ அதை சப்ஸ்கிரைப் பண்ணிக்கலாம். 4 மாசம் தேவைப்படும்னா யூஸ் பண்ணிட்டு திரும்ப கொடுத்துடலாம். நாங்க கிளவுட் சர்வீஸ் கொடுக்கறதால அதை கொடுத்துட்டு அடுத்து வேற டிவைஸ் வாங்கிக்கலாம்,” என்றார்.
அதேபோல், பெரிய நிறுவனங்கள் ஒரு டிவைஸை வாங்கிக்கொள்ள விரும்பினால் வாங்கிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
டிவைஸ் சிறப்பம்சம்
இது கற்றல் வேகத்தை அதிகரிக்கிறது. இதுபோன்ற டிவைஸ் அறிமுகமாவது இதுவே முதல் முறை. துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதேபோன்ற டிவைஸ் இருக்கின்றன, ஆனால் அது ஹியூமனாயிட் ரோபோ போல் இருக்கும். விலை அதிகம்.
ஒரு குழந்தைக்கு ஒரு அமர்விற்கு 350 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரம்யா தெரிவிக்கிறார்.
இவர்களது டிவைஸ் பயன்படுத்தி கற்றுக்கொள்ளும்போது மாணவர்கள் வேகமாக கற்பது மட்டுமல்லாமல் பொதுமைப்படுத்திப் பார்க்கவும் மாணவர்கள் கற்றுக்கொள்வதாக அவர் தெரிவிக்கிறார்.
“2013ம் ஆண்டு முதல் ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்காக பணியாற்றி வருகிறேன்,” என்கிறார் ரம்யா.
இவர்கள் வழங்கும் 6 டிவைஸ் மூலம் 32 விதமான சைக்கோமோட்டார் திறன்களில் பயிற்சியளிக்கமுடியும்.
செயலி மற்றும் இதர நடவடிக்கைகள்
பெற்றோர் குழந்தைகளை நேரடியாக பயிற்சி மையத்திற்கு அழைத்து வந்து பயிற்சியளிக்கலாம். அல்லது சிறப்புப் பள்ளிகள் சப்ஸ்கிரைப் செய்து டிவைஸை வாங்கி குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கலாம்.
இதுதவிர உத்தண்டியில் இருக்கும் NIEPMD உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
“இங்குள்ள குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் டிவைஸ் மூலம் பயிற்சியளிக்கப்போகிறோம். இதோட லான்ச் சமீபத்துலதான் நடந்து முடிஞ்சுது,” என்கிறார்.
அடுத்து GITA என்கிற செயலியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
“இது குறைபாடு இருக்கற குழந்தைங்களுக்கானது கிடையாது. எல்லா குழந்தைக்கும் பயன்படுத்தறதுக்காக இந்த செயலியை வடிவமைச்சிருக்கோம். பிறந்த குழந்தையிலேர்ந்து அஞ்சு வயசு வரைக்கும் அவங்களோட வளர்ச்சியை கண்காணிக்கறதுக்காக இந்த செயலி கண்டுபிடிக்கப்பட்டிருக்கு,” என்கிறார்.
குழந்தைகள் எப்போது குப்புற விழும், எப்போது உட்காரும், எப்போது நிற்கும் என முன்பெல்லாம் முதியவர்கள் கற்றுக்கொடுப்பார்கள். தனிக்குடித்தன அமைப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க வழிகாட்டுகிறது.
குழந்தைகளுக்கு குறைபாடு ஏதேனும் இருந்தால் அதை 8 மாதங்களிலேயே கண்டறியமுடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“குறைபாடு இருக்கறதை எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்கறோமோ அவ்ளோ சீக்கிரம் சிறப்பான பயிற்சியைக் கொடுக்க முடியும். ஆனா இன்னிக்கு பேரண்ட்ஸ் 8 வயசாகியும் இன்னும் பேசறதில்லை, கையில ஒரு பொருளைக் கொடுத்தா சரியா பிடிக்க முடியறதில்லைன்னு கூட்டிட்டு வராங்க,” என்கிறார்.
குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக GITA செயலியைத் தொடங்கியுள்ளார். தற்போது பிளேஸ்டோரில் கிடைக்கிறது.
இந்த ஆப் பிராந்திய மொழியில் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என தற்சமயம் நான்கு மொழிகளில் கிடைக்கின்றன.
ஒருவேளை குழந்தைக்கு அந்தந்த வயதிற்குரிய வளர்ச்சியில் குறைபாடு இருப்பது தெரிந்தால் மருத்துவ ஆலோசனை பெறுமாறு செயலி அலர்ட் செய்துவிடும். தற்போது புதுச்சேரியில் உள்ள 2 அங்கன்வாடிகளில் GITA செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“இது ஒரு இலவச ஆப். விழிப்புணர்வு ஏற்படுத்தறது மட்டும்தான் இந்த செயலியோட நோக்கம்,” என்கிறார்.
அந்தந்த பிராந்திய மொழிகளில் செயலியை உருவாக்குவதற்காக அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் ரம்யா.
அங்கீகாரம்
கடந்த ஆண்டு ரம்யாவின் தொழில்நுட்பத்திற்கு ‘சிறந்த புத்தாக்க விருது' (Best Innovation Award) வழங்கி ஆந்திர அரசாங்கம் கௌரவித்துள்ளது.
இந்த ஆண்டு மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின்கீழ் ’இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள்’ (Women Transforming India) என்கிற விருது பெற்றிருக்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
விரைவில் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் பிராடக்ட்ஸ் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார் ரம்யா.
அடுத்தபடியாக கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பெரும்பாலான சிறப்புப் பள்ளிகள் மூடியிருந்தன. குழந்தைகளின் கற்றல் தடைபட்டது. எனவே பெற்றோர் வீட்டிலேயே வாங்கி பயன்படுத்தும்படியான பிராடக்ட்ஸ் தயாராகி வருகின்றன.
இது கற்றல் தடைபடாமல் இருப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்புப் பள்ளிக்கு செல்ல முடியாமல் கற்றல் தடைபடும்போது பயன்படுத்திக்கொள்ள, இது ஒரு இடைக்கால தீர்வு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறார் ரம்யா.