சென்னை துறைமுக கூலித் தொழிலாளி எம்ஜி.முத்து ரூ.2500 கோடி மதிப்பிலான சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?
"மனம் இருந்தால் மார்கம் உண்டு” என்கின்ற வழியில் பல தொழில்முனைவோர் தங்கள் பயணத்தில் வெற்றி அடைந்துள்ளதை பார்த்து வருகிறோம். ஏணிப்படியின் கீழ் நிலையில் இருந்து உயரச் சென்ற பல கதைகளை படித்தும் வருகிறோம். அந்த வழியில் மன திடம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை எல்லாம் கொண்டு வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்தவர் எம்ஜிஎம் குழுமத்தின் நிறுவனர் எம்ஜி.முத்து. பல சவால்களை தாண்டியும், சரியான கல்வித்தகுதி பெற போதிய வழிகள் இல்லாமல் இருந்தாலும், அவர் நினைத்ததை அடைவதற்கு எதுவும் தடையாக அவருக்கு இல்லை. தன் வழியில் வந்த எல்லா பிரச்சனையையும் துணிந்து எதிர்த்து இன்று வெற்றி தொழிலதிபராக உள்ளார்.
எம்ஜி.முத்து ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிக்கு செல்வது அவருக்கு கனவாக இருந்தது. தனது கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை கண்ட முத்து தானும் பள்ளியில் சேர விரும்பினார். ஆனால் வறுமையுடனான போராட்டத்துடன் பள்ளிக்கு சென்று கல்வி கற்பது மிக கடினமாக இருந்ததால் படிப்பை தொடராமல் பாதியில் விட்டார். தன் தந்தையுடன் தானும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் முத்து. 1957 இல் கப்பல் துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருமான ஈட்டினார் முத்து. கப்பலில் வரும் கார்கோ பொருட்களை ஏற்றுவது, இறக்குவதே அவரது தினசரி பணியாகும். பல நாட்கள் அவரும் அவரது குடும்பமும் ஒரு வேளை சாப்படின்றி வெறும் வயிற்றுடன் உறங்கியுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் கடுமையாக உழைத்த முத்து, கனமான கார்கோ மூட்டைகளை தன் முதுகில் சுமந்து சென்று வருமான ஈட்டியுள்ளார். அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்கவும் செய்தார். கப்பல்துறையில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்ட அவர், தன்னிடம் இருந்த சேமிப்பை கொண்டு ஒரு சிறிய தளவாடங்கள் நிறுவனத்தை துவக்கினார். அவரது தொழிலின் மூலம் சிறிய வர்த்தகர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். சிறந்த டெலிவரி சேவை மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றார் முத்து. இதுவே அவரது இன்றைய இந்த நிலைக்கு முக்கியக்காரணம்.
தனது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் விதத்தில் அவர் எந்த ஒரு விஷயத்திலும் குறை வைக்காமல் தொழிலை நடத்தினார். நினைத்ததை விட அதிக டெலிவரிக்கள் செய்து மெல்ல தொழிலை பெருக்கினார்.
அவரைப் பற்றிய செய்தி வெளியில் பரவ, பலரும் இவரது நிறுவனத்தின் சேவையை பெற விரும்பினர். அப்போது பெரிய வாடிக்கையாளர்கள், வணிகர்களுடன் தன் தொடர்புகளை விரிவடையச் செய்தார் முத்து. சிறியதாக தொடங்கிய அவரது நிறுவனம், பெரிய அளவில் உருவெடுத்த பின் அதற்கு ‘தி எம்ஜிஎம் குழுமம்’ என்று பெயரிட்டார்.
எம்ஜிஎம் குழுமம், இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் ஒரு பிரபல நிறுவனம் ஆகும். வர்த்தக உலகில் எம்ஜி.முத்து ஒரு பிரபலமான தொழிலதிபர் ஆனார். இந்த வெற்றியை தொடர்ந்து, அவர் நிலக்கரி உற்பத்தி, கனிம-சுரங்க தொழில், உணவுத்துறை என்று பல துறைகளில் கால் பதித்தார். கென்ஃபோலிஸ் அறிக்கையின் படி, அண்மையில் எம்ஜிஎம் குழுமம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பலவகையான மதுபானங்கள் தயாரித்து வருகின்றது. விரைவில் கர்நாடகாவிலும் இது விரிவடையப்போகிறது என்றும் செய்திகள் வந்துள்ளது. இதைத்தவிர முத்து, மேரி ப்ரவுன் என்ற பிரபல மலேசிய ப்ராண்ட் சிற்றுண்டி ரெஸ்டாரண்டின் இந்திய ப்ரான்சைஸ் உரிமையாளராக இருந்து வருகிறார்.
தற்போது எம்ஜிஎம் குழுமம், பெங்களுரு வைட்பீல்டில் ஒரு பெரிய பிசினஸ் ஹோட்டலை திறந்துள்ளது. அக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தி நியூஸ் செர்விஸ் பேட்டியில்,
“பெங்களுருவில் இருந்து வந்து இந்த அற்புதமான வாய்ப்பை நாங்கள் தவறவிடுவதாக இல்லை,” என்று தெரிவித்தார்.
முத்துவின் கதை உண்மையில் குடிசையில் இருந்து கோபுரம் அடைந்த கதையாகும். நேர்மை, கடுமையான உழைப்பு மற்றும் தன்னடக்கம் ஆகிய குணங்களே இவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வளரும் தொழில்முனைவோருக்கு எம்ஜி.முத்துவின் கதை ஊக்கத்தையும், உத்வேகத்தையும் நிச்சயம் அளிக்கும்.
கட்டுரை: Think Change India