பதிப்புகளில்
ஸ்டார்ட்-அப் நாயகர்கள்

திரையரங்குகளுக்கு நிர்வாக சேவைகளை அளிக்கும் சென்னை ஸ்டார்ட் அப் 'சினிகிளவுட்'

சினிகிளவுட் சேவை, ஒற்றை திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் அரங்குகள், தங்கள் டிக்கெட் நிர்வாகம், இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றை கையாள தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது.

YS TEAM TAMIL
14th Mar 2019
11+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சுரேஷ் குமார், தனது ’MacApp Studio’ நிறுவனம் சார்பில், ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கான இணையதளத்தை உருவாக்க முயன்ற போது எதிர்கொண்ட பிரச்சனையே சினிகிளவுட் (CiniCloud) நிறுவனம் உருவாகக் காரணம் என்கிறார்.

சினிகிளவுட் நிறுவனர்கள்: சுரேஷ் மற்றும் ஜார்ஜ்

டிக்கெட் சேவை மென்பொருள் அமைப்பான விஸ்டாவுடன், ஏஜிஎஸ் பேக் என்ட் அமைப்பை இணைக்க முயன்ற போது சிக்கலை எதிர்கொண்டனர். சந்தையின் 65 சதவீத பங்குடன், சினிமாவுக்கான எஸ்.ஏ.பி என்று அழைக்கப்படுவதை மீறி, விஸ்டா பலுவானது, மெதுவானது மற்றும் கிளவுட் சாராதது என்கிறார் சுரேஷ். அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் பின் தங்கியது.

“விஸ்டாவின் பேக் எண்டுடன் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால், ஒவ்வொரு திரையரங்கிற்கும் தனி சர்வர் இருந்ததால், இந்த ஒருங்கிணைப்பு மிகவும் சிக்கலானது. அவர்கள் வாடிக்கையாளர் சேவை அதிவேகமானது, ஆனால் பேக் எண்ட் சேவை மாட்டு வண்டி போன்றது,” என்கிறார் சுரேஷ்.

ஆக பிரச்சனையை புரிந்து கொண்ட சுரேஷ், இணை நிறுவனர் ஜார்ஜ் கிரிஸ்டோபருடன் இணைந்து, இதற்குத் தீர்வு காண முயற்சித்தார். கிளவுட் அடிப்படையிலான திரையரங்க சேவை மற்றும் டிக்கெட் சேவையை உருவாக்க தீர்மானித்தனர். இதை ஏஜிஸ் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், புதிய மென்பொருள் (SaaS ) சேவையாக உருவாக்க விரும்பினர். அதன் பயனாக, 2018ல் சென்னையில்  உருவானது தான், ’சினிகிளவுட்’.  

சினிகிளவுட் சேவை

திரையரங்க நிர்வாகம், இருப்பிடம் நிர்வாகம், திரைப்பட பட்டியல், அட்டவணை, திரை நிர்வாகம், இருக்கை அமைப்பு நிர்வாகம், பார்க்கிங், டிக்கெட் சேவை, நிதி, மனிதவள மேம்பாடு என அனைத்திற்குமான ஒருங்கிணைந்த சேவையாக சினிகிளவுட் இருக்கிறது. ரசிகர்கள் விருப்பம் மற்றும் அவர்கள் தேர்வுகளை அறிந்து கொள்ள உதவும், டேட்டா அனல்டிக்ஸ் வசதியையும் இது வழங்குகிறது. 

ஒராண்டில் சினிகிளவுட் தனது மேடையில் 5 மில்லியன் டிக்கெட்களை கையாண்டுள்ளது. பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான பொங்கல் பண்டிகை காலத்தில் அதன் சேவை உச்சத்தை தொட்டது. காலா படத்திற்கான டிக்கெட் சேவை அளித்தது இந்த மேடைக்கான முதல் வெற்றியாக அமைந்தது. அப்போது ஒரு மில்லியன் டிக்கெட்டிற்கு மேல் கையாண்டது. இந்த ஆண்டுக்குள் 50 மில்லியன் எண்ணிக்கையை தொட திட்டமிட்டுள்ளது.

“இது போன்ற சேவையை முழுவதுமாக சில மாதங்களில் உருவாக்குவது சாத்தியம் இல்லை என பலரும் கூறினர். பெரிய வெளியீடுகள் அல்லது பண்டிகையின் போது எங்கள் அமைப்பு கிராஷாகும் என்றும் எச்சரித்தனர். ஆனால் வேகமான, லேசான, எளிதாக பயன்படுத்தக்கூடிய அமைப்பை உருவாக்கி இவற்றை பொயாக்கியுள்ளோம்,” என்கிறார் சுரேஷ்.

சினிகிளவுட்டில் ஒரு திரையரங்கை இணைத்து டிக்கெட் அச்சிட்டுக்கொள்ள 7 நிமிடங்கள் தான் ஆகும் என்கிறார் அவர். இதற்கு முன்னர், பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகள், இருக்கை அமைப்பு, அட்டவனை, டிக்கெட் பட்டியல் ஆகியவற்றை செய்து முன்பதிவை துவக்க 20 முதல் 30 நாட்கள் ஆகலாம் என்கிறது இந்த ஸ்டார்ட் அப். சினிகிளவுட்டின் ஏபிஐ, புக்மைஷோ, பேடிஎம், டிக்கெட்நியூ ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  

 “திரையரங்குகளுக்கு அவற்றின் முந்தைய தரவுகளைக் கொண்டு, புத்திசாலித்தனமான அட்டவனை சேவையை உருவாக்கியுள்ளோம். இனி எக்செல் ஷீட்களுக்கே வேலையில்லை. திரையரங்க உரிமையாளர்கள் செலவுகளை குறைத்து, வருவாயை பெருக்கிக் கொள்ளலாம்,’ என்கிறார் சுரேஷ்.

வளர்ச்சி வாய்ப்புகள்

தற்போது, சினிகிளவுட், சென்னை, ஐதராபாத், கவுஹாத்தி, விஜயவாடா உள்ளிட்ட 20 நகரங்களில் 45 திரையரங்குகளுக்கு சேவை அளித்து வருகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ், மியூசிகா எண்டெர்டெய்ன்மெண்ட், ஒய்ஸ்கிரின்ஸ், கோல்ட் சினிமாஸ் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களாக உள்ளனர். சிறிய திரையரங்குகளுக்கு சேவை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

பிவிஆர் சினிமான்ஸ் மற்றும் கார்னிவல் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் திரையரங்குகளை கொண்ட இந்நிறுவனங்களின் வீச்சு, சினி கிளவுட் சேவையின் விரிவாக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும் துபாயைச்சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு 3 முதல் 4 திரைகளை நிர்வகிக்க உதவி வருகிறது. அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. மும்பை பிக் சினி எக்ஸ்போ 2018 கண்காட்சியில் தனது சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்ததாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.

”கிளவுட் சேவையை எளிதாக விரிவாக்கம் செய்யலாம் என்பதால், ஆண்டு இறுதிக்குள் 1,000 திரையரங்குகளை இலக்காக கொண்டிருப்பதாக சுரேஷ் கூறுகிறார். நிறுவனங்களிடம் 10 திரைகள் என்றாலும் பிரச்சனை இல்லை 100 திரைகள் என்றாலும் பிரச்சனை இல்லை என்கிறோம்,” என கூறுகிறார் சுரேஷ்.

செயல்பாடுகள், சவால்கள்

கிளவுட் சார்ந்த அமைப்பு தரும் அணுகூலங்களை மீறி சினிகிளவுட் திரையரங்குகள் உரிமையாளர்களின் தயக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

“யாரும் தற்போதுள்ள அமைப்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. இது மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாகும். இதில் ஏற்கனவே சில நிறுவனங்கள் தோல்வி அடைந்திருப்பதும் ஒரு காரணம்,” என்கிறார் அவர்.

எப்படியும், புதிய நிறுவனத்தை உருவாக்கி நடத்துவது எளிதல்ல. சினிகிளவுட் இதுவரை சுயநிதியில் செயல்பட்டு வருகிறது. நிறுவனர்கள் ரூ.3-4 கோடி முதலீடு செய்துள்ளனர். விரிவாக்கத்திற்கு மேலும் ஊழியர்களும், நிதியும் தேவை. 70 பேர் கொண்ட இந்நிறுவனம், 2020 வாக்கில், 10 முதல் 12 மில்லியன் டாலர் ஏ சுற்று நிதி திரட்ட உள்ளது. நெக்சஸ் வென்ச்சர் பாட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ளன.

சினிகிளவுட் நிறுவனம் ரூ.2 கோடி வருவாயை எட்டியுள்ளது. வழக்கமான மென்பொருள் சேவை அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு திரை எனில் 99 டாலர், மினிபிளக்சிற்கு 149 டாலர் மற்றும் மல்டிபிளக்ஸ்களுக்கு 249 டாலர் என மாத சந்தா அடிப்படையில் சேவை அளிக்கிறது. இதைத்தவிர டிக்கெட் விற்பனையிலும், கமிஷன் பெறுகிறது.

“நிதி பெறுவதற்கு முன் எங்கள் வருவாயை ரூ.6-7 கோடியாக உயர்த்த விரும்புகிறோம்,” என்கிறார் சுரேஷ்.

சினிகிளவுட்; திரையரங்குகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.50,000 டாலர் வருவாய் பெற்றுத்தருவதாக கூறுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஸ்டா, ஜிடிசி தியேட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், ஈவண்ட் புரோ, ஈவண்ட் அவ்ன்யூ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது.

எனினும் இவற்றில் பல சர்வதேச நிறுவனங்கள். எனவே, சினிகிளவுட், இந்தியாவில் உள்ள சிறிய திரையரங்குகளுக்கு கிளவுட் சார்ந்த சேவை அளிப்பதை தனது முக்கிய அம்சமாக கொண்டுள்ளது.

“திரையரங்குகள் தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு திரைப்படங்கள் பற்றி புரிவதில்லை என்று எண்ணுகிறார்கள். இந்த இரு தரப்பினருக்கும் இடையே பாலமாக இருக்கிறோம்,” என்கிறார் சுரேஷ்.

வலைதள முகவரி: இணையதளம்

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்

11+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags