'சிட்டுக்குருவிகளின் சரணாலயம்' - 'கூடுகள்' மூலம் சமூகத் தாக்கம் ஏற்படுத்தும் பொறியாளர் கணேசன்!
அழிந்துவரும் சிட்டுக்குருவிகள் இனத்தை காத்து, அவற்றிற்கான இருப்பிடத்தை உருவாக்குவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையை காக்கவேண்டியதன் அவசியத்தையும் கற்பித்துவருகிறார் கூடுகள் அமைப்பு நிறுவனர் கணேசன்.
"இயற்கை; மனிதர்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறது, ஆனால், மனிதன் இயற்கைக்கு அதிகம் திருப்பித் தருவதில்லை..." என்கிறார் கூடுகள் நெஸ்ட்-ன் (நெட்வொர்க் ஃபார் என்விரான்மென்ட் சஸ்டைனபிலிட்டி டிரஸ்ட்) நிறுவனர் கணேசன் டி.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம், அதன் தனித்துவமான முயற்சிகள் மூலம் நகரத்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பெங்களூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் விவசாய பின்னணியைக் கொண்ட கணேசன், எப்போதும் இயற்கையின் மீது ஆழ்ந்த அன்பைக் கொண்டிருந்தார். இதுவே பின்னாளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தீவிர அர்ப்பணிப்பாக உருவானது.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் கழிவுகளைக் குறைப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தி, சுற்றுசூழலில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த அவரை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்கான தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டார்.
சுற்றுச்சூழல் போராளி ஆன பொறியாளர்
கணேசன் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின், அவர் SRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு கற்பிப்பதோடு, சுற்றுச்சூழல் மீதான ஆர்வங்களையும் தொடர்ந்து வளர்த்தார். பேராசிரியராக இருந்த நிலையில், அவர் ஐடி துறைக்கு மாறினார். டெக் வாழ்க்கைக்கு மத்தியில் இயற்கையைத் தேடத் துவங்கியதில், கூடுகள் நெஸ்ட் பிறந்தது. ஆனால், அதற்கான விதைகள் கணேசனின் மாணவப் பருவத்திலேயே நடப்பட்டன.
"2014ம் ஆண்டிலே, எம்டெக் படிப்பின் போது, சிட்டுக்குருவி பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை போன்ற திட்டங்களில் பணியாற்றத் தொடங்கினேன். பள்ளி வளாகங்களிலே மரம் நடும் முயற்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 மரங்களை நட வேண்டும் என்ற தனிப்பட்ட இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன்," என்றார்.
2020ம் ஆண்டு ஜூலை மாதம், கணேசனும், பேராசிரியரும், கணிதத்தில் முனைவர் பட்டமும் பெற்றவரான அவரது மனைவி சாந்தினியும், Koodugal Nest எனும் அமைப்பை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தனர்.
"திருமணத்திற்குப் பிறகு, என் மனைவி சாந்தினி கூடுகளின் முதுகெலும்பாக மாறினார். திட்ட மேலாளராகப் பொறுப்பேற்றார். அசைக்க முடியாத ஆதரவுடன் பணியை வழிநடத்தினார்," என்றார்.
ஒரு தனிப்பட்ட திட்டமாகத் தொடங்கி கூடுகள் இன்று ஒரு முழுமையான அமைப்பாக வளர்ந்துள்ளது. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதும், அதன் இருப்பை உறுதி செய்வதுமே கூடுகளின் நோக்கமாகும். இந்த அமைப்பு மாணவர்களையும் சமூகத்தாரையும் சிட்டுக்குருவிகளுக்கான கூடு பெட்டிகளை உருவாக்கும் நடைமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.
அதிகரித்துவரும் நகரமயமாக்கல் காரணமாக கடுமையான வாழ்விட இழப்பை எதிர்கொள்ளும் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தங்குமிடத்தை இந்த கூடு பெட்டிகள் அளிக்கின்றன.
"பூச்சி உண்ணிகளான சிட்டுக்குருவிகள், கொசுக்கள், ஈக்கள் மற்றும் பயிர் சேதப்படுத்தும் பூச்சிகள் போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது. மனித ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அவை பயிர்களையும் பாதுகாக்கின்றன. விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன. சிட்டுக்குருவிகள் விதை பரவலில் முக்கியப் பங்கு வகிப்பதால், பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பது அவசியம்," என்கிறார்.
பல்வேறு தாவரங்களிலிருந்து விதைகளை உண்பதன் மூலம், சிட்டுக்குருவிகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் முழுவதும் தாவர இனங்களைப் பரப்ப உதவுகின்றன. தாவர வாழ்வின் மீளுருவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த செயல்முறை ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட வாழ்விடங்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது. இதனால் சுற்றுச்சூழல் சமநிலைக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, என்று விளக்கினார் கணேசன்.
"சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை 15% அதிகரிப்பு"
சமூகத்தில் கூடுகள் அமைப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம் அலாதியானது. கடந்த சில ஆண்டுகளில், கூடுகள் சென்னையில் உள்ள 40-45 பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு 10,000க்கும் மேற்பட்ட குருவிக்கூடு பெட்டிகளை விநியோகித்துள்ளது.
"இதுவரை விநியோகித்துள்ள கூடுப்பெட்டிகளில் சுமார் 60-70% சிட்டுக்குருவிகள் ஆக்கிரமித்துள்ளன. வட சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது. நாங்கள் முதலில் வட சென்னையில் உள்ள மக்களை அணுகியபோது, அவர்கள் தயங்கினர். சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது ஏன் முக்கியமானது என்பது பலருக்குப் புரியவில்லை. ஆரம்பத்தில் உள்ளூர்வாசிகள், பள்ளிகள் மற்றும் அமைப்புகளை பங்கேற்கச் செய்வது பெரும் தடையாக இருந்தது. 10 பள்ளிகளுக்கு இத்திட்டத்தை கொண்டு சேர்த்தபின் ஊடக கவனத்தைப் பெற்றோம். அதன்பின், பள்ளிகள் எங்கள் திட்டங்களை வரவேற்கத் தொடங்கின."
அடுத்த சவால் கூடு பெட்டிகளை கட்டுவதற்கான செலவு. ஆரம்பத்தில், கூடுகள் ஒரு தச்சருடன் இணைந்து பெட்டிகளை உருவாக்கி வந்தது. அவர் ஒரு கூடு பெட்டிக்கு சுமார் ரூ.200-250 வரை வசூலித்தார். ஆனால், குழு திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்ற விரும்பியது. இதை சமாளிக்க, சொந்த கருவிகளை தயாரித்தோம். கூடுப்பெட்டிகளை வழங்குவதற்கு பதிலாக, மாணவர்களுக்கு அவர்களது சொந்த கூடு பெட்டிகளை ஒன்று சேர்க்க பயிற்சி அளித்தோம். இந்த அணுகுமுறை ஒரு பெட்டிக்கான செலவை ரூ.100-150 ஆகக் குறைத்தது. இருப்பினும், கார்ப்பரேட் பார்ட்னர்களின் உதவியின்றி கூடுகள் அதன் இலக்கை அடைந்தது சாத்தியமற்றது, என்றார்.
எதிர்காலத் திட்டங்களைப் பொறுத்தவரை, சென்னை முழுவதும் சிட்டுக்குருவிகள் வாழ ஒரு பொதுவான இடமாக மாற்றவும், திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தவும் கணேசன் உறுதியாக உள்ளார். பள்ளி மாணவர்களிடையே சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை அறிய வைப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகங்களில் அவர்கள் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தினை கவுரவிக்கும் விதமாக, 2023ம் ஆண்டில், உலக சிஎஸ்ஆர் காங்கிரஸ் மதிப்புமிக்க தமிழ்நாடு தலைமைத்துவ விருதை வழங்கியது.
"அடுத்த 10 ஆண்டுகளில் 1,00,000 குடும்பங்களைச் சென்றடைந்து, அதிக கூடு பெட்டிகளை விநியோகிப்பதே எங்கள் இலக்கு. பள்ளி வளாகங்களில் சிட்டுக்குருவிகள் சரணாலயங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். இதுவரை எட்டு சிட்டுக்குருவிகள் சரணாலயங்களை வெற்றிகரமாக நிறுவி, ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் 100 முதல் 200 சிட்டுக்குருவிகள் வரை வசிக்கும் இடத்தை வழங்கியுள்ளோம்," என்றார்.
200 சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி: புல்லினங்களின் சரணாலயமான இல்லம்!