ஆன்லைன் பிசினஸ் நிறுவனங்களுக்கு 60 நிமிடங்களில் ஆப் ரெடி செய்து தரும் சென்னை நிறுவனம்!
தற்போதைய நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு செயலிகள் தேவைப்படும். அந்த செயலியில் பொருட்களை வகைப்படுத்துவதற்கு தேவையான டூல் இருக்க வேண்டும், பேமெண்ட் கேட்வே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்படும். இவற்றை சுலபமாக உருவாக்கித் தருகிறது இந்த சென்னை நிறுவனம்.
மென்பொருள் பிரிவில் ஒவ்வொரு சமயத்தில் ஒரு டெக்னாலஜி அதிகம் பேசப்படுவதாகவும் பிரபலமானதாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது low code no code என்பதில் பெரும்பாலான நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த
நிறுவனம் இப்பிரிவில் வேகமாக வளர்ந்துவருகிறது.தற்போதைய நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு செயலிகள் தேவைப்படும். அந்த செயலியில் பொருட்களை வகைப்படுத்துவதற்குத் தேவையான டூல் இருக்க வேண்டும், பேமெண்ட் கேட்வே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்படும். இவற்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் எனில் பல லட்சங்கள் தேவைப்படும். பெரிய நிறுவனங்கள் எனில் கோடிகள் கூட செலவாகும்.
ஆனால், இதுபோன்ற நிறுவனங்களுகாக ஏற்கெனவே டூல்களை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம்தான் ’வஜ்ரோ’. இவர்கள் பலவிதமான டூல்களை வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அவற்றை தேர்ந்தெடுத்து தங்களுக்கு தேவையான செயலியை உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு வேளை கூடுதலாக எதாவதுத் வசதி (பியூச்சர்) தேவை என்றால் குறைந்த கோடிங் பயன்படுத்தினால் போதும். இதுதான் low code no code.
வஜ்ரா நிறுவனத்தின் நிறுவனர்கள் பாஸ்கர் அக்னீஸ்வரன் மற்றும் நிவின் சந்தோஷ். பாஸ்கர் Vajro பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகாலம்
சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்பா சி.ஏ. +2-ல் நல்ல மதிப்பெண் இருந்தாலும் சிஏ படிக்க நினைத்தேன். தொலைதூர கல்வியில் பி.காம் படித்துக்கொண்டே சி.ஏவும் படித்தேன். ஏன் சிஏ என்று என்னை கேட்காத நபர்கள் இல்லை. அவர்களுக்கு சொல்வதெல்லாம் நன்றாக படிக்கும் மாணவர்கள் சிஏ படிக்கக் கூடாதா என்பதுதான்.
சி.ஏ முடித்த பிறகு அப்பாவின் நிறுவனத்திலே வேலை செய்தேன். நிறுவனங்களுக்குத் தேவையான ஆடிட் செய்தோம். அதற்கடுத்து சிஸ்டம் பேஸ்டு ஆடிட் செய்யத் தொடங்கினோம். மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ஆடிட் செய்யத் தொடங்கினோம்.
இந்த சமயத்தில் என்னுடைய மைத்துனர் நிவின் சந்தோஷ் இன்ஜினீயரிங் முடித்திருந்தார். நானும் அவரும் சேர்ந்து எதாவது செய்யலாம் எனத் திட்டமிட்டோம். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-ல் மட்டுமே இருந்தது. அப்போது விண்டோஸ் போன்கள் அதிக புழக்கத்தில் இருந்தன. அந்த மீடியத்துக்காக ஃபிளிப்கார்ட் ஆப் உருவாக்கினோம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதனை வளர்க்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து விலையை ஒப்பீடு செய்யும் செயலி (prizap) உருவாக்கினோம். இந்த தளத்தில் ஒரு பொருளை தேடினால் ஒவ்வொரு இ-காமர்ஸ் தளத்திலும் உள்ள விலைகளை ஒப்பீடு செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும். இந்த செயலியும் தோல்வி அடைந்தது.
பார்ப்பதற்க்கு எளிமையாக இருப்பதுபோல தோன்றினாலும் பல விஷயங்களை ஒருங்கிணைத்தால்தான் இந்த செயலி சாத்தியம். Back End-ல் பல செயலிகளை ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும். அதனால் இந்த முயற்சியும் தோல்வி அடைந்தத்து. அதன் பிறகுதான் எங்களுடைய பலம் பலவீனம் குறித்து பரிசீலனை செய்யத் தொடங்கினோம்.
இ-காமர்ஸ்
தற்போது பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் செயலியை உருவாக்குவது என்பது சிரமமான வேலை. தவிர அதனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அவர்களுடைய தொழிலில் கவனம் செலுத்தாமல், டெக்னாலஜியில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் அந்த டெக்னால்ஜியை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் என்ன என்பதில் உருவானதுதான் Vajro.
ஏற்கெனவே உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் செயலிகள் இருக்கும்போது யார் வாடிக்கையாளர்கள் என்பது கேள்வியாக இருக்கும். உதாரணத்துக்கு அமேசானை எடுத்துக்கொண்டால் அமேசான் என்பது மார்கெட் பிளேஸ் மாடல். ஆனால், அமேசானுக்குள் பல லட்சம் விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை நபர்களுக்கம் செயலிகள் தேவை.
எங்களிடம் 200க்கும் மேற்பட்ட டூல்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு டெக்ஸ்டைல் நிறுவனம் செயலியை உருவாக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எங்கள் மூலமாக அவர்களுக்குத் தேவையான டூல்கள தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதில், எதாவது மாறுதல்கள் தேவை என்றால் அதனை நாங்கள் செய்துகொடுப்போம்.
மூன்று மாடல்களில் கட்டணம் வசூலிக்கிறோம். மாதத்துக்கு 99 டாலர், 199 டாலர் மற்றும் 399 டாலர் என கட்டணம் வசூலிக்கிறோம். நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தத் தொகை என்பது மிக மிக குறைவு.
சாதாரணமாக ஒரு ஆப்-பை உருவாக்க வேண்டும் என்றால் மாதக்கணக்கில் காலம் ஆகும். ஆனால், எங்கள் மூலமாக ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான செயலியை உருவாக்கிக் கொள்ள முடியும்.
எங்களுடைய வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவில் உள்ளனர். 15 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் உள்ளனர். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் சர்வதேச அளவில் 100 நாடுகளில் உள்ளனர்.
டிஜிட்டல் விளம்பரம் மூலம் எங்களது வாடிக்கையாளர்களைக் கண்டறிகிறோம். இதுவரை 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் பல முக்கியமான நிறுவனங்கள் (டி2சி பிராண்ட்கள்) எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்
நிதி
பல முதலீட்டு நிறுவனங்களில் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். சில நிறுவனங்களுக்கு எங்களுடைய பிசினஸ் மாடல் பிடிக்கவில்லை. சில முதலீட்டு நிறுவனங்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. கடந்த ஜனவரியில் 8.5 மில்லியன் டாலர் நிதியை திரட்டினோம்.
Fiveelms கேபிடல் நிறுவனம் இந்த முதலீட்டை செய்திருக்கிறது. இந்த முதலீட்டை டெக்னாலஜி, பணியாள்ர்கள், டிஜிட்டல் யுக்தி உள்ளிட்டவற்றுக்காக முதலீடு செய்ய இருக்கிறோம். அடுத்த கட்ட நிதி திரட்டல் குறித்த திட்டமிடல் இருப்பதால் வருமானம் குறித்து இப்போது தெரிவிக்க முடியாது என்று பாஸ்கர் அக்னீஸ்வரன் கூறினார்.
வஜ்ரோ என்றால் என்ன என்று கேட்டதற்கு இந்திரனின் ஆயுதம் என பாஸ்கர் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் பிரிவான low code no code-ல் பல பெரிய நிறுவனங்கள் நுழைய திட்டமிட்டிருக்கின்றன. ஆனால் விரைவாகவே நுழைந்திருக்கிறது வஜ்ரோ.