வீட்டுச் சுவையில் மீன் குழம்பு சாப்பாடு: சென்னை நண்பர்களின் ‘மீன் சட்டி’ தொழில் முயற்சி!
அரவிந்த் சுரேஷ் மற்றும் ரிச்சி ரிச்சர்ட் ஆகிய இரு நண்பர்கள் தொடங்கிய நிறுவனம் ’மீன்சட்டி’. இங்கு ஒரு மெனு மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் டெலிவரியில் கவனம் செலுத்தும் நிறுவனம் சென்னையில் எக்ஸ்பிரீயன்ஸ் மையத்தை தொடங்கி இருக்கிறது
சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் செயல்பட்டுவந்த ’மீன் சட்டி’ நிறுவனத்தின் எக்ஸ்பிரியன்ஸ் மையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அரவிந்த் சுரேஷ் மற்றும் ரிச்சி ரிச்சர்ட் ஆகிய இருவரும் இணைந்து இந்த உணவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
’Meen Satti' தொடங்கியது பற்றி பகிர்ந்து கொண்ட நிறுவனர்கள் இருவரும் இணைந்து சர்வதேச உணவு நிறுவனத்தின் பிரான்ஸைசி ஒன்றை எடுப்பதற்கான திட்டத்தில் இருந்ததாக தெரிவித்தனர். ஆனால், அந்த பிரான்சைசி கட்டணம் மற்றும் செலவுகள் 30 லட்ச ரூபாய்க்கு மேல் ஆனது. இவ்வளவு அதிக செலவினை வேறு ஒரு பிராண்டுக்கு செலவு செய்வதை விட நாமே ஏன் ஒரு உணவு ப்ராண்டை தொடங்கக் கூடாது என யோசித்தோம்.
பலவிதமான ஐடியாக்கள் இருந்தன. ஆனால், பலவகையான உணவுகளுக்கு ஓட்டல்கள் உள்ளன. ஆனால் மீன்களில் மட்டும் கவனம் செலுத்தும் உணவு நிறுவனம் ஏதும் இல்லை. அதனால் மீன் உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டோம், என்றனர்.
”நாங்கள் வீட்டில் சாப்பிடும் மீன் குழம்பு சுவையை வெளியில் எங்கேயும் சாப்பிட்டது இல்லை. அதுவும் மண் சட்டியில் வைத்து செய்யும்போது அதன் சுவை வேறு மாதிரியாக இருக்கும். இங்கிருந்து உருவானதுதான் மீன் சட்டி,” என்கிறார் அர்விந்த்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இதற்கான ஐடியா கிடைத்தது. அதன் பிறகு, பல ஆராய்ச்சிகள் செய்தோம். எப்படி கொடுக்கலாம், என்னென்ன வகைகள் கொடுக்கலாம், எப்படி உணவகம் இருக்கலாம் என பல தேடலுக்குப் பிறகு தற்போதைய நிலையை எட்டி இருக்கிறார்கள்.
பிட்சா போல ஒரு பிரத்யேக உணவு மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல, ஓட்டல் என வைத்தால் அதற்கென ஒரு எல்லை இருக்கிறது. அதனால் டெலிவரியில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் விரிவாக்கம் செய்ய முடியும் என்பதால் கிளவுட் கிச்சன் மூலம் தொடங்கினோம்.
ஒரே மெனு
இவர்களிடம் ஒரே ஒரு மெனு மட்டுமே உள்ளது. பார்சல் வாங்கும்போது நான்கு பேர் வரை சாப்பிட முடியும். சென்னை முழுக்க டெலிவரி செய்கின்றனர். ஸ்விக்கி, ஜோமாட்டோ தவிர எங்களுடைய நேரடியான பார்டன்ர் மூலமும் டெலிவரி செய்கிறார்கள்.
”மண் பானையில் செய்த மீன் குழம்பு, அதனை நாங்கள் மண்பானையிலே டெலிவரி செய்கிறோம். ஒரு கிலோ கொடுவா மீனின் தலை, வால் மற்றும் சில பீஸ்கள் குழம்பில் இருக்கும். நான்கு ஸ்லைஸ் மீன் ரோஸ்ட் இருக்கும். மேலும், ஒரு கிலோவுக்கு மேல் அரிசி சாதம் இருக்கும். இதுதவிர 500 மில்லி ரசம் மற்றும் இனிப்பு ஆகியவை டெலிவரி செய்யப்படும்.”
இப்போதைக்கு இது மட்டுமே மெனு, இதில் மட்டுமே கவனம் செலுத்தலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம். சுவைக்காகவும் நாங்கள் அதிக மெனக்கெட்டிருக்கிறோம்.
மற்ற மாநிலங்களில் மீன் குழம்பில் தக்காளி அதிகமாக இருக்கும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை புளி அதிகமாக சேர்க்கப்படும். அதனால் தமிழக ஸ்டைலில் எங்களுடைய மீன் குழம்பு இருக்கும். எங்களுடைய அனைத்து நடைமுறையை ஒழுங்குபடித்தி இருப்பதால் சுவை அனைத்தும் ஒன்றாகவே இருக்கும்.
இப்போதைக்கு மதிய உணவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். இரவில் இட்லி மீன் குழம்பு கொடுக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவாகவே விற்பனையாகிறது.
முதலீடு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைனில் டெலிவரி செய்யத் தொடங்கினோம். இதுவரை 5,000க்கும் மேற்பட்ட டெலிவரி செய்திருக்கிறோம். உங்களுக்கு நாளைக்கு வேண்டும் என்றால் அதற்கு முதல் நாள் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் எங்களால் அதிக சேதாரம் இல்லாமல் சமைக்க முடியும். இப்போதைக்கு மதியம் மட்டுமே சுமார் 400 லஞ்ச் பாக்ஸ்கள் தயாரிக்க முடியும், என்றனர் நிறுவனர்கள்.
நாங்கள் டெலிவரி மட்டுமே செய்வதால் எங்கிருந்து உணவு வருகிறது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அதனால் ஈக்காட்டுதாங்களில் ஒரு எக்ஸ்பிரீயன்ஸ் மையம் அமைத்தோம். இங்குதான் எங்களுடைய கிளவுட் கிச்சனும் இருக்கிறது. இங்கு உணவருந்த முடியும் என்றாலும் ஓட்டல் போன்று நாங்கள் இருக்கையை அமைக்கவில்லை. அதிகபட்சம் 16 நபர்கள் மட்டுமே சாப்பிட முடியும். எங்களுடைய இலக்கே அதிக இடங்களில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதுதான்.
இந்த மையத்துக்கு சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம். அடுத்தகட்டமாக தமிழகத்தின் முக்கியமான நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. அதில் கவனம் செலுத்துகிறோம். அதேபோல விற்பனை அதிகரிக்கும் போது கியாஸ்க் போல சென்னையின் முக்கியான மையங்களில் டெலிவரி மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு யூனிட்டும் விற்பனையும் லாபத்தில்தான் நடக்கிறது. இதுவரை சொந்த முதலீட்டில் செயல்பட்டுவருகிறோம். அடுத்தகட்ட விரிவாக்கத்துக்கு சொந்த நிதியை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இப்போதைக்கு நிதி திரட்டும் திட்டமில்லை, என்றார் ரிச்சி.
பிரியாணி, பிட்சா என்பது ஒரு வகையான உணவுதான். அதுபோல மீன் குழம்பும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கான வேலைதான் இது.
“ஏன் கொடுவா மீன் என்றால், இந்த மீன்வகை சுவை மிகுந்தது. அதிகம் முள் இருக்காது. மீன் சாப்பிடத் தெரியாதவர்கள் கூட இதனை எளிதாக சாப்பிட முடியும். அதனால் கொடுவா மீனுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதில் பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு,” என்றார்.
பல வகையான மீன் வகைகள் உள்ளன. அவை குறித்து பிறகு பார்ப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு மீன் குழம்பினை சட்டியிலே வைத்து டெலிவரி செய்கிறோம். இதற்காக மண்பானை செய்யும் பலரிடம் பேசினோம். நாங்கள் ஒரு டிசைன் செய்து கொடுத்து அதற்கு ஏற்ப மண்பானை தயாரித்துக் கொடுத்தனர். வழக்கமாக சந்தையில் இதுபோன்ற டிசைன்களில் செய்யப்படுவதில்லை.
இதுவரை 5000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்தாலும் மண்பானையில் இருந்து கசிவோ அல்லது உடையவோ இல்லை. அந்த மண் பானையை வாடிக்கையாளர்கள் மற்ற சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என நிறுவனர்கள் இருவரும் பகிர்ந்தனர்.
நிறுவனர்களில் ஒருவரான அரவிந்த் சுரேஷ், கிஸ்ஃபுளோ நிறுவன நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்தின் மகன் ஆவார். இம்முயற்சி குறித்து பேசும் போது,
“கடந்த சில மாதங்களாக இந்த புராஜக்ட் நடந்துவருகிறது. எந்த இடத்திலும் என்னுடைய மகன் என்பதை எங்கும் தெரிவிக்கல்லை. அவர்களே முயற்சி செய்து கற்றுக்கொள்ளட்டு என விட்டுவிட்டேன்,” என்றார்.
செப் ரெஜி மேத்யூ மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் மீன்சட்டி எக்ஸ்பிரீயன்ஸ் மையத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழக பாரம்பரிய உணவு வகையான மீன் குழம்பை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல தொடங்கப்பட்டிருக்கும் ‘மீன் சட்டி’ சென்னையின் முக்கிய உணவு நிறுவனமாக மாறுவதற்கு வாழ்த்துகள்.