6 மாதமாக ஒரு ரூபாய் கூட கரண்ட் பில் கட்டவில்லை; சென்னை டீ ஸ்டால் ஓனரின் அசத்தல் யோசனை!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் இருளில் மூழ்கி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 61 வயது டீ கடைக்காரரின் ஐடியா அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் இருளில் மூழ்கி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 61 வயது டீ கடைக்காரரின் ஐடியா அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்தியாவில் நிலவி வரும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் மின் உற்பத்தி அளவில் நான்கில் ஒரு பங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் கண்காணிப்பு அறிக்கை மூலம் தெரிய வருகிறது. இதனால், குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் மின் வெட்டு அரங்கேறி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், சென்னையைச் சேர்ந்த தேநீர் கடைக்காரர் ஒருவரின் சீறிய முயற்சி அனைவருக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
காரணம் கொளுத்தும் வெயிலை முழுமையாகப் பயன்படுத்தி, அவர் சோலார் எனர்ஜி மூலமாக தனக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறார்.
செங்கல்பட்டில் மஹிந்திரா டெக் பார்க் அருகே டீக்கடை நடத்தி வருகிறார் 61 வயதான தாமோதரன். இவர் தனது கடையில் ஆறு மினி டியூப்லைட்கள், ஒரு மின்விசிறி, ரேடியோ என அனைத்தையும் தினந்தோறும் பயன்படுத்தினாலும், கடந்த 6 மாதமாக ஒரு ரூபாய் கூட கரண்ட் பில் கட்டியதே கிடையாது என்கிறார்.
இதுகுறித்து தாமோதரன் கூறுகையில்,
“நான் ஒரு நாள் யூடியூப் வீடியோக்களை தற்செயலாக ஸ்ரோலிங் செய்து கொண்டிருந்தேன், அப்போது சோலார் பேனல்கள் பற்றிய சில வீடியோக்களை பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்தேன். அப்போதுதான் நான் அதை முயற்சித்துப் பார்க்க முடிவு செய்தேன், அவற்றில் இரண்டை அமேசானில் இருந்து வாங்கினேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
பேனல்கள் அமைக்க அவர் செலவழித்தது, லேபர் சார்ஜ் உட்பட ரூ.20,000 மட்டுமே.
“பேனல்கள் முழுமையாக சார்ஜ் ஆவதற்கு சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். பயன்பாட்டிற்குத் தயாரானதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யாமல் இரண்டு நாட்கள் வரை இயங்கும்,” என்கிறார்.
எல்லா நேரத்திலும் சூரிய ஒளி கிடைக்க வேண்டுமே என கவலை தெரிவிப்பவர்களுக்கு, மழையின் போதுகூட சிறிதளவு கிடைக்கும் சூரிய ஒளியை வைத்து சோலார் பேனல்கள் சார்ஜ் செய்யப்படுவதாகவும், பேட்டரிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய டிஜிட்டல் மீட்டர் அவற்றில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதைக் காட்டும் என்றும் நம்பிக்கையை விதைக்கிறார்.
சிறந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மஹிந்திரா டெக் சிட்டியில் அமைந்துள்ளன. எனவே, மாலை மற்றும் இரவு நேரத்தில் தேநீர் வியாபாரம் சூடுபிடிக்கிறது. அப்போது பளீச்சென தனது கடையை வைத்திருப்பதால், அதிக வாடிக்கையாளர்கள் இங்கு வந்து தேநீர் அருந்த ஆர்வம் காட்டுவதாக தாமோதரன் கூறுகிறார்.
"இது ஒரு மதிப்புமிக்க முதலீடு. என்னைப் போன்ற பிளாட்பார்ம் டீ ஸ்டால்களுக்கு, மின் இணைப்புகள் இல்லை. அதிக பேனல்கள் மற்றும் பெரிய பேட்டரிகளை வைத்தால், மின்விசிறிகள் கூட வேலை செய்யக்கூடும். சிறிய கடைகளுக்கு, இது ஒரு நல்ல முதலீடு,” என உறுதியுடன் தெரிவிக்கிறார்.
கொரோனா லாக்டவுன் தொடங்குவதற்கு முன்பு தாமோதரன் சராசரியாக ஒருநாளைக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்துள்ளார். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கவே மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
இதனால், மூன்று பேரைக் கொண்ட அவரது குடும்பம் வருமானமின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. தற்போது மீண்டும் ஐ.டி. கம்பெனிகள் திறக்கப்பட்டுள்ளதால், தனது பழைய வருமானத்தை மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்துள்ள தாமோதரன் முகத்தில் புன்னகை தவழ்கிறது.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி