தண்ணீர், உணவு, எரிவாயு என தன் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் தானே உருவாக்கும் 'சோலார்’ சுரேஷ்!
”அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசாங்கமே தீர்வளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களே தீர்வுகளைக் கண்டறிந்து அரசாங்கத்திற்கு உதவலாம்...”
என்கிறார் புரட்சி உருவில் இருக்கும் இந்த மனிதர். இவர் ‘சோலார் சுரேஷ்’ என்று அன்புடனும் வியப்புடனும் அழைக்கப்படுகிறார். அவரது சொந்த பயோகேஸ் ஆலையினால் சக்தியூட்டப்பட்ட அடுப்பில் காஃபி தயாரித்து மெல்ல ருசிக்கிறார். காஃபியை ருசித்தபடியே அடுப்பிலிருக்கும் கறியின் மணத்தை ரசிக்கிறார். அதுவும் அவரது கொல்லைப்புறத்திலேயே பயிரிடப்பட்ட தக்காளி மற்றும் மிளகாய் கொண்டு தயாரிக்கபடுகிறது.
கம்பீரமான மூங்கில் மற்றும் கொடிகளால் சூழப்பட்ட தோட்டத்திலிருந்து வரும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஃபேனை நிறுத்துகிறார். அந்த ஃபேனும் அவரது வீட்டு மொட்டைமாடியிலுள்ள சூரிய ஒளி ஆலையால் இயங்குகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள புதிய எண் 17, வாசு தெருவில் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் வசிக்கிறார் டி சுரேஷ். குடும்பத்தினர் அனைவரும் அவரது முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கின்றனர். இவர் ஐஐடி சென்னை மற்றும் IIM-A பட்டதாரி. 45 வருட பணி வாழ்க்கையிலிருந்து 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் டெக்ஸ்டைல் மார்கெட்டிங் பிரிவில் எம்டி, சிஇஓ என பல்வேறு நிலையில் பணியாற்றியுள்ளார். தொழில்முனைவில் ஈடுபட விரும்பி லாஸ்ட்-மைல் கனெக்டிவிட்டி (last-mile connectivity) பகுதியில் செயல்படும் SAKS Ancillaries Ltd என்கிற நிறுவனத்தை நிறுவினார்.
சூரிய மின்னுற்பத்தி ஆலை
தன்னிறைவான வீட்டை (self-sufficient home) உருவாக்கும் எண்ணம் எப்போது தோன்றியது என்பது இவருக்குத் தெளிவாக நினைவில்லை. இருப்பினும் 20 வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது இந்த எண்ணத்திற்கான விதை விதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
”ஜெர்மனியில் பலரது வீட்டின் மொட்டைமாடியில் சூரிய ஆலைகள் இருப்பதைப் பார்த்தேன். சூரிய ஒளி மிகவும் குறைவாகக் கிடைக்கும் ஒரு நாட்டில் இதை நிறுவும்போது, சூரிய ஒளி அதிகப்படியாக கிடைக்கும் இந்தியாவில் ஏன் அதைப் பயன்படுத்தக்கூடாது?” என்று யோசித்ததை நினைவுகூர்ந்தார்.
மின்னுற்பத்தி செய்ய சூரிய ஆலையை நிறுவ ஒரு சரியான விற்பனையாளரைத் தேடினார். தகுந்த சூரிய ஆலை விற்பனையாளரைக் கண்டறிவதிலும் முறையான சோலார் இன்வெர்டரைப் பெறுவதிலும் சிக்கல்கள் நிலவியது.
”மிகப்பெரிய புள்ளிகளான டாடா BP சோலார், Su Kam போன்றோர் எந்தவித ஊக்கமும் அளிக்கவில்லை. என்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய அறிவாற்றல் மிக்க ஒரு உள்ளூர் விற்பனையாளரை கண்டறிந்தேன். ஒரு வருடத்திற்கும் மேல் கடுமையாக உழைத்து என்னுடைய வீட்டிற்கான சூரிய மின்னுற்பத்தி ஆலையை உருவாக்கி வடிவமைத்தேன்.” என்று விவரித்தார்.
2012-ம் ஆண்டு சுரேஷ் தனது வீட்டு மொட்டைமாடியில் ஒரு கிலோவாட் ஆலையை நிறுவி அதிகாரப்பூர்வமாக சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யத் துவங்கினார். இதை நிறுவ நிழலில்லாத பகுதி மட்டுமே தேவைப்படும். ஒரு கிலோவாட்டிற்கு 80 சதுர அடி பகுதி தேவைப்படும். மொட்டைமாடியாக இருந்தால் சிறந்தது. வீட்டிற்குள் தனியாக வயரிங் செய்யப்படவேண்டிய அவசியமில்லை.
நிபுணர்களும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் போன்ற மூத்த அரசாங்க அதிகாரிகளும் அவரது வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 கிலோவாட்டாக அதை அதிகரித்தார். இது தற்போது 11 ஃபேன்கள், 25 விளக்குகள், ஒரு ஃப்ரிட்ஜ், இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு தண்ணீர் பம்ப், இரண்டு தொலைக்காட்சிகள், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மிஷன், ஒரு இன்வர்டர் ஏசி உள்ளிட்ட சாதனங்களை இயக்க பயன்படுத்தப்படுகிறது.
இன்று ஆலைகளை ஒரே நாளில் அமைத்துவிடுகின்றனர். இதை பராமரிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேனல்களை சுத்தப்படுத்தவேண்டும்.
”வெப்பம் அல்லது வெளிச்சத்தின் தீவிரத்தை சார்ந்திராமல் பேனலில் விழும் UV கதிர்களை சார்ந்திருப்பதால் மிதமான மழை நாட்களில் கூட இந்த ஆலை மின்னுற்பத்தி செய்யும். மிகவும் கன மழை பெய்யும் நாட்களில்கூட பேட்டரி உதவியால் லோட் வழங்கப்படும். இந்த பேட்டரிகள் க்ரிட்டினால் அல்லாமல் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்.” என்று விவரித்தார் சுரேஷ்.
மின்சார பிரச்சனைக்குப் பெயர்போன நகரத்தில் வசிக்கும்போதும் கடந்த நான்கு வருடங்களில் ஒரு நிமிடம்கூட மின்வெட்டை சந்தித்ததில்லை என்கிறார் சுரேஷ். ஒரு நாளுக்கு 12-16 யூனிட் வரை உற்பத்தி செய்வதால் அவரால் மின்சார செலவையும் குறைக்கமுடிகிறது.
“இது ஒரு நிலையான, மலிவான, சாத்தியமான திட்டம். தற்போது பேட்டரி மாற்றியமைத்தலுடன் 6 சதவீத வரியில்லாத ரிடர்ன் வழங்கப்படுகிறது.”
பயோகேஸ் ஆலை
சூரிய மின்னுற்பத்தி ஆலையை வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு வெளியிலிருந்து பூர்த்திசெய்யப்படும் கேஸ் தேவைக்கு தீர்வுகாண திட்டமிட்டார். 1 க்யூபிக்மீட்டர் திறன் கொண்ட வீட்டுக்குரிய பயோகேஸ் ஆலையை நிறுவ திட்டமிட்டார். நாள் ஒன்றிற்கு 10 கிலோ ஆர்கானிக் கழிவுகளை ப்ராசஸ் செய்து ஒரு மாதத்திற்கு 20 கிலோ கேஸ் உற்பத்தி செய்ய திட்டமிட்டார்.
எந்தவித வாசனையும் வெளிவராது என்று நிரூபித்து, அதன் மீது இருந்து பொதுவான அவநம்பிக்கையை தகர்த்தெறிந்தார். சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகள், கெட்டுப்போன உணவுகள், காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் போன்ற ஆர்கானிக் கழிவுகள் செடிகளுக்கு அளிக்கப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, வெங்காயம் போன்ற சிட்ரிக் வகைகள், முட்டை ஓடு, எலும்பு அல்லது சாதாரண இலைகள் போன்றவற்றை அளிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
இரண்டு பயனுள்ள வளங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது – சமையல் எரிவாயு மற்றும் ஆர்கானிக் உரம். அவரது பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர்களில் சிலர் கழிவுகளை அப்புறப்படுத்த கட்டணம் செலுத்தி வந்தனர். இப்போது மகிழ்ச்சியாக அவரது பயோகேஸ் ஆலையில் கழிவுகளை கொட்டிவிடுகின்றனர்.
பயோகேஸ் ஒரு கம்ப்ரெஸ் செய்யப்படாத கேஸ் என்பதால் எரிவாயு குமிழ் திறந்துவைக்கப்பட்டாலும் எரிவாயு கசிவு அல்லது வெடித்துவிடுதல் போன்ற ஆபத்துகள் இல்லாதது இதன் சிறப்பம்சமாகும். மேலும் இது மாசற்றது. அது மட்டுமல்லாது புதைபடிவ எரிபொருளை சார்ந்திருப்பதை குறைப்பதால் நாட்டின் அந்நிய செலாவணியை குறைக்கிறது.
மழைநீர் சேகரிப்பு
இருபது வருடங்களுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்தார் சுரேஷ். தினசரி பராமரிப்பு அவசியமில்லை என்றும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மொட்டை மாடி மற்றும் தொட்டியை சுத்தப்படுத்தினால் போதும் என்றும் விவரித்தார்.
நவீன கட்டிடங்கள் சூழ்ந்த பகுதி மற்றும் சமையலறை தோட்டம்
தடிமனான மூங்கில் வேலியையும் அதைச் சுற்றி கொடிகளையும் அவரது வீட்டைச் சுற்றி அமைத்து காடு போல உருவாக்கியுள்ளார் சுரேஷ்.
”மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது நகரத்தின் பரபரப்பைத் தாண்டி காட்டிலிருப்பது போல் காட்சியளிக்கும். அருகிலிருக்கும் கட்டிடங்களையோ அல்லது பரபரப்பான ட்ராஃபிக்கையோ பார்க்கமுடியாது. பசுமை நிறைந்து காணப்படும்.” என்றார் அவர்.
காடு போலவே காட்சியளிக்கும் அவரது வீடு ரசனை மிக்கதாகும். அனுபவமற்றவராகவே வெண்டைக்காய் மற்றும் தக்காளி வகையுடன் சமையலறை தோட்டத்தைத் துவங்கினார். இன்று 15-20 வகை ஆர்கானிக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார். வீட்டிற்குத் தேவையான காய்கறிகளில் பெரும்பாலான பகுதியை இந்த சமையறை தோட்டம் பூர்த்தி செய்துவிடுகிறது.
புரட்சியை பரவச்செய்தல்
மொட்டைமாடியில் சூரிய ஆலை அமைத்ததன் காரணமாக கணிசமான தொகையை சேமிக்க முடிந்தது என்கிறார் சுரேஷ். அதற்கு முன்பு 8,100 யூனிட்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தப்படும். ஆனால் 1 கிலோவாட் ஆலையை அமைத்த பிறகு 5,550 யூனிட்களாக குறைந்தது. மேலும் 2016-ம் ஆண்டு 3 கிலோவாட் ஆலையை அமைத்த பின்பு 3,450 யூனிட்டாக குறைந்தது. மின்கட்டணங்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளார்.
தனி ஒருவன்
இந்த மாபெரும் புரட்சியை வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல தன்னால் இயன்ற அனைத்து முயற்சியையும் எடுக்க உறுதியெடுத்துள்ளார் சுரேஷ். இது குறித்து எடுத்துரைப்பது, பயன்படுத்தத் தூண்டுவது, இலவசமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மூன்று அலுவலகங்களிலும், நான்கு பள்ளிகளிலும், ஏழு வீடுகளிலும் சூரிய மின்னுற்பத்தி ஆலைகளையும் சென்னையில் ஆறு இடங்களில் சமையலறை தோட்டம் நிறுவவும் உதவியுள்ளார்.
சென்னையிலுள்ள நிறுவனங்கள் அவரது முயற்சியின் பலன் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க அவரை அழைத்தனர். மாணவர்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும் இடமாக மாறியது புதிய 17, வாசு தெரு. 500 க்கும் மேற்பட்ட மக்கள் அவர் செயல்படுத்தியதை நேரில் பார்க்க அவரது வீட்டிற்கு வருகின்றனர். அடுத்த கட்டமாக இரண்டு ப்ராஜெக்டுகளில் இணைய உள்ளார் சுரேஷ். ஒன்று வளிமண்டல காற்றிலிருந்து சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீர் உற்பத்தி செய்வது. இரண்டாவது இரு சக்கர வாகனங்களுக்கான டிஜிட்டல் கீ உருவாக்குவது. அதாவது ஒரு தனிப்பட்ட நான்கு இலக்க பாஸ்வேர்டை பயன்படுத்தினால் மட்டுமே வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும்.
உங்கள் முயற்சிகளை தொடர வாழ்த்துக்கள் சோலார் சுரேஷ்!