இளம் வயதில் கொடுமைகளுக்கு ஆனான இவர், இன்று யூட்யூபில் பிரபல மூதாட்டி!
ஹைதராபாத் அருகே உள்ள லம்பாடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கங்காவ்வா மில்குரி தனது யூட்யூப் வீடியோக்கள் மூலம் மக்களிடையே பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக யூட்யூப் பலரது திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக விளங்குகிறது. இந்தியாவில் பலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
60 வயதான கங்காவ்வா மில்குரி இதுபோன்றே ஒரே நாளில் யூட்யூபில் பிரபலமாகி உள்ளார். 2016-ம் ஆண்டு ’மை வில்லேஜ் ஷோ’ என்கிற யூட்யூப் சானலில் இவரது வீடியோ ஒன்று வெளியானது. இது உடனடியாக அவரை மிகவும் பிரபலமாக்கியது.
கிராமப்புற வாழ்க்கை குறித்த வீடியோ ஒன்றை சானல் படம்பிடித்தபோது ஹைதராபாத்தில் இருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கும் லம்பாடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கங்காவ்வா பிரபலமானார்.
’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கங்காவ்வாவின் நடிப்பு குறித்து சானல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரான ஸ்ரீகாந்த் ஸ்ரீராம் குறிப்பிடும்போது,
”அவரது உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை, நகைச்சுவை, இயல்பான நடிப்பு போன்றவை பலரைக் கவர்ந்தது,” என்றார்.
கங்காவ்வாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் சானலின் மேலும் அதிக வீடியோக்களில் இடம்பெறத் தொடங்கினார். இவர் பிரபலமடைந்ததைக் கண்டு நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் இவரைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கின்றனர். இதில் கங்காவ்வா உள்ளூர் செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளராக இருப்பார்.
கங்காவ்வா தனக்கான வரிகளை எவ்வாறு நினைவில் நிறுத்திக்கொள்கிறார் என்று கேட்டபோது,
“எனக்குப் படிக்கத் தெரியாது. அதனால் குழுவினர் நான் சொல்லவேண்டிய வரிகளையும் படப்பிடிப்பு எதைப் பற்றியது என்றும் என்னிடம் விவரிப்பார்கள். அதற்கேற்றவாறு நான் கேமரா முன்பு பேசுகிறேன்,” என தெரிவித்ததாக ’தி இந்து’ தெரிவிக்கிறது.
60 வயதான இவரது கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். எப்போதும் கங்காவ்வாவை துன்புறுத்தி வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கங்காவ்வாவின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவரது பழைய நாட்களை நினைவு கூறும்போது,
“நான் கூலியாக பணியாற்றியுள்ளேன். பீடி சுற்றுவேன். என்னுடைய நாட்கள் மோசமாகவே இருந்தது,” என தெரிவித்ததாக ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிடுகிறது.
நம்மில் பலர் கேமரா முன்பு தோன்ற பயப்படும் நிலையில் இவர் சற்றும் பதட்டப்படுவதில்லை. ’தி இந்து’ உடனான உரையாடலில் குறிப்பிடும்போது,
”இதில் பதட்டப்படுவதற்கு என்ன இருக்கிறது? இது எனக்கு புதிதல்ல. நான் இரண்டாண்டுகளாக ஸ்ரீகாந்துடன் வீடியோக்கள் படம்பிடித்து வருகிறேன். பேசவேண்டும், நான் நானாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்,” என்றார்.
தொடர்ந்து பிரபலமடைந்து வந்த கங்காவ்வாவிற்கு தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வரவிருக்கும் ’மல்லேசம்’ தெலுங்கு திரைப்படத்தில் இவர் இடம்பெறுகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA