யூபிஎஸ்சி: தேசிய அளவில் 7ம் இடம் பிடித்த தமிழக இளைஞர் கணேஷ் குமார்!
2019-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வந்தன.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய யூபிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது. 2019-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் பிரதீப் சிங் இந்தத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களில்; பிரதீபா வர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இவர் மதுரை கேந்திர வித்யாலயாவில் படித்தவர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் மத்திய அரசு ஊழியர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் கணேஷ் குமார் பாஸ்கர். பள்ளிப்படிப்பை குர்கான் உட்பட பல்வேறு பகுதிகளிலும், பிளஸ் டூவுக்குப் பிறகு கான்பூர் ஐஐடி-யில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும், அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ முதுகலையும் முடித்துள்ளார்.
இதனையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் பாஸ்கர். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
ஐஏஎஸ் பணிக்குச் செல்வதை விட ஐஎஃப்எஸ் எனப்படும் வெளிவிவகாரத் துறையில் பணிபுரியவே ஆர்வம் அதிகம் உள்ளதாக பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டிற்கான தேர்வில் மொத்தம் 829 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 829 பேரில் 304 பேர் பொதுப் பிரிவினர். பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் 78 பேர், ஓபிசி பிரிவில் 251 பேர், பட்டியலினப் பிரிவில் 196 பேர் என மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வின் இறுதி முடிவுகளை யூபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணலாம். சிவில் சர்வீஸ் 2019-ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே யூபிஎஸ்சி இறுதிப் பட்டியலை அறிவித்துள்ளது.
முதல் முறையாக 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 78 பேர் தேர்வாகியுள்ளனர். மேலும் 11 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.