சிறுத்தை, பாம்பு என 14கிமீ காட்டை கடந்து பள்ளிக்குச் செல்லும் 9ம் வகுப்பு மாணவி!
ஒரு பொருள் நமக்கு எளிதில் கிடைத்தால் அதன் மதிப்பை நாம் அறிவதில்லை, அதனாலே தான் என்னவோ சுலபமாக கிடைக்கும் கல்வியை பலர் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. பள்ளிக்கூடத்திற்கு சென்று கல்வியை கற்பதற்கே தினம் தினம் போராடும் குழந்தைகளுக்கே அதன் அருமை தெரிந்துள்ளது.
மருத்ததுவர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற காடுகளைத் தாண்டி 14 கிமீ டிரெக்கிங் செய்து பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார் 9 ஆம் வகுப்பு மாணவி நிகிதா கிருஷ்ணா.
மஹாராஷ்டிரா, ரைகாத் மாவட்டம், பலசில் கிராமத்தில் உள்ள தனது பள்ளிக்கு செல்ல மோர்வாடி கிராமத்தைச் சேர்ந்த நிகிதா, அருகிலுள்ள காட்டை கடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை. கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது குறிக்கோளில் வலுவாக நிற்கும் நிகிதா சிறுத்தைகள், பாம்புகள் மற்றும் காட்டுப் பன்றி அதிகம் வலம் வரும் அடர்ந்த காட்டை தினமும் கடக்கிறார்.
இது குறித்து தன் பள்ளியில் இருந்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,
“நான் செல்லும் வழியில் பெரும்பாலும் பாம்புகள் மற்றும் காட்டு பன்றிகளை அதிகம் பார்ப்பேன். சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தையை கூட கண்டு அதிர்ந்து போனேன் ஆனால் தூரத்தில் இருந்ததால் தப்பித்தேன்,” என்கிறார்.
தனது கிராமத்தில் இருந்து பள்ளியை அடைவதற்கு 7கிமீ நடக்க வேண்டும் அதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதனால் 10.45 பள்ளிக்கு நிகிதா 8.45 மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். சனிக்கிழமைகளில் 9 மணிக்கெல்லாம் பள்ளி துவங்குவதால் 6 மணிக்கு கிளம்பிவிடுவார் நிகிதா.
“இந்த இடத்தில் கன மழை அதிகம் ஏற்படும் அப்பொழுதெல்லாம் பாதையை கடக்க மிக சிரமமாக இருக்கும். ஒரு தடவை இடுப்பு வரை தேங்கியிருந்த மழை நீரில் தொப்பலாக நனைந்து பள்ளியை அடைந்தேன்,” என்கிறார்.
பகலிலே இவ்வளவு சிரமம் என்றால் திரும்பி வருகையில் இவர் எதுப்போன்ற ஆபத்துகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்.
“4.30 மணிக்கு பள்ளி முடியும், வீடு திரும்புவதற்குள் இருட்டி விடும், 2 கிமீ வரை இருட்டில் தான் நடப்பேன். சில சமையங்களில் ஓடி அந்த பாதையை கடந்து விடுவேன், காட்டு விலங்குகளிடமும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும்,” என்கிறார்.
இவரது பெற்றோர்கள் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள், இவருக்கு ஓர் அண்ணனும் உள்ளார். கடந்த வருடம் வரை நிகிதாவுடன் அவரின் அண்ணன் துணைக்கு சென்று பள்ளியில் சேர்ப்பார். ஆனால் மேல் படிப்பிற்காக அவர் இடம் மாற, ஒரு வருடமாக தனியாகவே செல்கிறார் நிகிதா.
“அண்ணன் இருந்ததால் தைரியம் இருந்தது, ஆனால் இப்பொழுது நானே சமாளிக்க வேண்டும். இதை விட அருகில் வேறு எந்த பள்ளியும் இல்லை. மேலும் மருத்துவ வசதிக்குக் கூட மையில்கள் கடக்க வேண்டும். இதற்காக என் கிராமத்திற்குச் சேவை செய்ய என் கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராக வேண்டும்,” என்கிறார்.
இவ்வவளவு சிக்கலகளையும் தடைகளையும் தாண்டி பள்ளிக்குச் செல்லும் நிகிதா படிப்பிலும் கெட்டிக்காரி தான். அறிவியல் மற்றும் கணக்கில் முன்னிலையில் இருக்கும் இவரின் தைரியத்தையும் திறமையையும் கண்டு இவரது ஆசிரியர்கள் பெருமைக்கொள்கின்றனர். மேலும் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர் என தெரிவிகின்றனர்.
படிப்பு மட்டும் இன்றி பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு வருடமாக நிகிதாவே வெற்றியாளராய் இருக்கிறார். தான் தினமும் செய்யும் நடைப்பயணமே அவரை ஃபிட்டாக வைத்துள்ளது. நல்ல பயிற்சி கிடைத்தால் தேசிய அளவில் கூட இவள் சாதிப்பால் அதில் எந்த ஐயமுமில்லை என நிகிதாவின் ஆசிரியர்கள் தெரிவிகின்றனர்.
நிகிதாவின் சிரமத்தை கண்ட சிட்டி கார்ப்பரேசன் தனியார் நிறுவனத்தின் தலைமை நிறுவனர் அனிருதா தேஷ்பண்டா மின் மிதிவண்டியை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இது குறித்து அனிருதா சிட்டி கார்ப்பரேசன் வெளியிட்ட அறிக்கையில்,
“கல்விக்காக இவர் செய்யும் செயலை கண்டு நான் வியந்து போனேன். இவரை ஊக்குவிக்க என்னால் முடிந்ததை செய்தேன், இந்த மின் மிதிவண்டி இவரின் பயணத்தை எளிமையாக்கும் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
காடு, மழை, மலை என பல சிக்கல்களைத் தாண்டி கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படும் நிகிதாவின் தைரியத்திற்கும் திறமைக்கும் பாராட்டுகள் இனியாவது நமக்கு எளிமையாகக் கிடைக்கும் கல்வியை உதாசீனம் படுத்தாமல் மதிப்போம்!
தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்