செம்பாக்கம் ஏரியை ரூ.5 கோடி செலவில் சீரமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!
100 ஏக்கர் ஏரியைச் சீரமைக்க Cognizant மற்றும் Grundfos நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் (Cognizant) மற்றும் மேம்பட்ட பம்ப் தீர்வுகள் மற்றும் நீர் தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் தலைமைத்துவம் வகிக்கும் க்ரண்டஃபாஸ் (Grundfos) நிறுவனமும் இணைந்து, சென்னையில் உள்ள செம்பாக்கம் ஏரியைச் சீரமைப்பதற்கான நிதி ஆதரவை இன்று அறிவித்தன.
தென்னிந்தியாவில் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலங்களுள் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைந்திருக்கும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பாக்கம் ஏரியைச் சீரமைக்க இந்நிறுவனங்கள் முனைந்துள்ளன.
இதற்கு காக்னிசன்ட் ரூ.2.7 கோடி நிதியையும், க்ரண்டஃபாஸ் ரூ.1.7 கோடி நிதி மற்றும் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் அழகுப் படுத்தும் பணிகளையும் மேற்கொள்ளும்.
இவ்விரண்டு நிறுவனங்களும், உலகின் மிகப் பெரிய இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தி நேச்சர் கன்சர்வன்சியின் இந்தியப் பிரிவு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனமான சென்னையைச் சேர்ந்த கேர் எர்த் டிரஸ்ட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
2021 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இப்பணியில், நீர் நுழைவு மற்றும் வெளியேற்றப் பகுதிகளைச் சுத்தம் செய்தல், ஏரி சார்ந்த நீர்நிலைகளின் இணைப்புகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை உருவாக்குதல், ஏரியையொட்டி நடைபாதைகள் மறறும் பசுமையான பகுதிகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
திடக்கழிவுகள், வண்டல் மற்றும் ஆக்கிரமிப்பு தாவரங்களை ஏரியிலிருந்து அகற்றுதல், ஏரியின் கொள்ளளவை 50% அதிகரித்தல், நிலத்தடி நீரளவை உயர்த்துதல், நீரின் தரத்தை மேம்படுத்துதல், ஆகியவற்றிற்கு இத்திட்டம் உதவும். இது ஏரியைச் சுற்றியுள்ள 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், சுமார் 180 தாவர இனங்கள் (11 நீர்வாழ் இனங்கள் உட்பட) மற்றும் 65 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடங்கிய பல்லுயிரியலைப் பாதுகாக்கும் வகையிலும் செயலாற்றும்.
இந்த ஏரியைச் சுற்றியுள்ள மக்களுக்கு இயற்கைச்சூழலில் அமைந்த பொழுதுபோக்கிற்கான இடத்தை ஏற்படுத்துவதும், அவர்களை நீரநிலைப் பராமரிப்பில் ஈடுபடுத்துவதும், இத்திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
COVID-19-ன் தற்போதய நிலைமையிலிருந்து மீண்ட பிறகு, காக்னிசன்டின் பணியாளர் தலைமையிலான தன்னார்வ அமைப்பாகய காக்னிசண்ட் அவுட்ரீச், க்ரன்ட்ஃபாஸ் மற்றும் திட்ட உறுப்பினர்கள் சேர்ந்து, சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள், நிபுணர் சொற்பொழிவுகள், இயற்கை சார்ந்த விழாக்கள் மற்றும் மரம் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, சீரமைப்புத் திட்டத்தின் நீண்டகால நன்மையை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
“உலகின் நீர் மற்றும் காலநிலை சவால்களுக்கான தீர்வுகளில் க்ரன்ட்ஃபாஸ் முன்னோடியாகத் திகழ்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் #6க்கு (நீர் மற்றும் சுகாதாரம்) நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதையொட்டி நாங்கள் மிகவும் தீவிரமான மற்றும் உறுதியான இலக்குகளை நிர்ணயித்துள்ளோம்.
2030-ஆம் ஆண்டிற்குள், க்ரன்ட்ஃபாஸ் 50 பில்லியன் கன மீட்டர் நன்னீரைச் சுத்திகரிப்பின் மூலம் சேமிக்கும். மேலும், எங்கள் நிறுவனம் 300 மில்லியன் மக்களுக்கு குடிநீரைப் பாதுகாப்பாக வழங்கும் வகையில் செயல்படும். செம்பாக்கம் ஏரியின் சீரமைப்பு எங்கள் நிறுவனத்தின் நோக்கங்களுடன் ஒன்றியுள்ளது.
“இந்த ஏரியை பாதுகாப்பதன் மூலம், அதன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கும் இயற்கைக்கும் இடையில், நீர்நிலை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை இணைக்கும் ஒரு தளத்தையும் நாங்கள் ஏற்படுத்துகிறோம்,” என்று க்ரன்ட்ஃபோஸின் CSO, குழு நிர்வாகத் துணைத் தலைவர் பால் டியூ ஜென்சன் கூறினார்.
“பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்திருக்கத்தக்க சுற்றுச்சூழலை உருவாக்குவதில் காக்னிசன்ட் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, செம்பாக்கம் ஏரியைப் புதுப்பிக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக இருப்பதில் மகழ்ச்சியடைகிறோம்.
இந்த ஏரி, பள்ளிக்கரணை நீர்நிலைப் படுகையின் 54 இணைக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இவ்வேரிகள் நகரத்தின் நீர்த் தேவைக்கும் வெள்ளம் மற்றும் வறட்சி தாங்குதிறனுக்கும் இன்றியமையாதவை.
நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நகர்ப்புற சுற்றுச்சூழலின் எதிர்கால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு இந்தக் கூட்டு முயற்சி ஓர் எடுத்துக்காட்டு. இதில் ஈடுபட்டிருக்கும் ‘கேர் எர்த் டிரஸ்ட்’ ’ஐஐடி’ மெட்ராஸ், ‘தி நேச்சர் கன்சர்வன்சி’, தனிநபர்கள் மற்றும் பெருநிறுவன பங்களிப்பாளர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று காக்னிசன்ட் டிஜிட்டல் வணிகத் துறை மற்றும் சென்னை மையத் தலைவருமான முத்துக்குமரன் கூறினார்
“செம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்படும் தூய்மை மற்றும் சீரமைப்புப் பணிகளில் காக்னிசன்ட் மற்றும் க்ரன்ட்ஃபாஸ் நிறுவனங்கள் மேன்மையான பங்களிக்கின்றன. அறிவியல் மற்றும் இயற்கை சார்ந்த முறைகளைப் பின்பற்றி ஏரியுள் நுழையும் கழிவு நீரைச் சுத்திகரிக்க உள்ளோம்.
தாவரங்களைக் கொண்டு பசுமையான முறையில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இம்முறை, குறைந்த செலவில் எவ்வித இரசாயனச் சேர்க்கையும் இல்லாமல் செயல்படுவதோடு அதிக மின் செலவையும் தவிர்க்கும். இந்த அணுகுமுறையில் பெறப்படும் பயன்பாட்டினை நாம் மற்ற நீர் நிலைகளில் பின்பற்றவும் இந்த செயல்முறை வழிவகுக்கும்,” என்று இ நேச்சர் கன்சர்வன்சியின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குனர் சீமா பால் கூறினார்.
இந்தத் திட்டத்தில் கன்சோர்டியா ஆஃப் ஃபினிஷ் சொசைட்டி, இந்தியன் லெதர் இன்ஸ்டிடியூட் ஃபவுண்டேஷன் (ILIFO), தி சொல்யூஷன்ஸ் சென்டர் (TSC) மற்றும் ஓயாசிஸ் டிசைன்ஸ் ஆகிய நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.