பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி தரும் கோவை ஆசிரியர்!
பாரம்பரிய கைவினை கலைஞர்களிடம் இருந்து பனை ஓலை கலையை கற்றுக்கொண்ட மோகன வாணி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடம் அதை கொண்டு செல்கிறார்.
கோவையில் வளர்ந்த மோகன வாணிக்கு சிறு வயதில் இருந்தே பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. பின்னர், பயணங்களின் வாயிலாக அவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கைவினைக் கலைகளை பரிட்சியம் செய்து கொண்டவர், பனைஓலை கலைப்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டார்.
ஐந்தாண்டுகளுக்கு முன், கன்னியாகுமரியில் கிராமம் ஒன்றில் வயதான கைவினைக் கலைஞர் ஒருவர் பனை ஓலையில் பொருட்களை உருவாக்குவதை பார்த்தார்.
“பல ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்திற்காக அவர் செய்த ஓலை பாயை பார்த்தேன், நுட்பமாக நெய்யப்பட்டிருந்த பாய், இன்னமும் சிறப்பாக இருந்தது. அது பரம்பரையாக வருகிறது,” என்று ஹெர்ஸ்டோரியிடம் கூறுகிறார் வாணி.
இதையடுத்து, இந்த கலையில் ஆர்வம் கொண்டு தேடலில் ஈடுபட்டவர், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் விதவிதமாக பன ஓலை பயன்படுத்தப்படுவதை பார்த்தார். உதாரணத்திற்கு செட்டிநாட்டில் பனைஓலை கூடைகள் பின்னப்படும் நிலையில் திருச்சியில் பனை ஓலை விசிறி செய்யப்படுவதை கண்டார்.
இந்த கலையை கிராமத்தில் இருந்து உலகிற்கு எடுத்துச்சென்று அவற்றின் மூலம் கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பது கடினம் என வாணி அறிந்திருந்தார். எனவே, தனது கற்பித்தல் ஆர்வத்தை இந்த கலையுடன் இணைத்து, இந்த பாரம்பரியத்தை தழைக்கச்செய்யும் வகையில், இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பனை ஓலை கலை தொடர்பான பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார்.
திருவண்ணாமலையில் ஜவ்வாது மலையில் செயல்படும் மாற்று பள்ளியான குக்கூவில் அவர் தன்னார்வலராக இருக்கிறார். அங்கு அவர் மாணவர்களுக்கு பனை ஓலை கொண்டு பறவைகள், விலங்குகள், மற்ற பொருட்கள் செய்யக் கற்றுத்தருகிறார்.
“தற்போது வால்ட்ராப் கல்வி முறையின் ஒட்டுமொத்த முறை (ரூடால்ப் ஸ்டெய்னர் கல்வி முறை அடிப்படையிலானது) தொடர்பாக ஆய்வு செய்து வருகிறென். இந்த முறை குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்புத்திறனுக்கு ஊக்கம் அளிக்கிறது.”
“இந்த கலையை பயிற்சி செய்வது குழந்தைகளின் கற்பனையை வளர்க்கிறது. அவர்களுக்கு அடிப்படையை கற்றுத்தருகிறேன். அதன் பிறகு, அவர்களே சொந்தமாக பொம்மைகள், பொருட்களை செய்து தங்களுக்கான கதைகளை கூட உருவாக்கிக் கொள்கின்றனர். பென்சில் பெட்டி, திறந்த தன்மை கொண்ட பொம்மை போன்ற பயனுள்ள பொருட்களை உருவாக்குகின்றனர். அவர்களுடைய இயக்கத்திறன் மற்றும் கை கண் இணை செயல்பாட்டை காண்கிறேன்,” என்கிறார் வாணி.
கைவினைக் கலையை தக்க வைத்து, கலைஞர்களுக்கும் வாழ்வளிக்க சிறந்த வழிகளில் ஒன்று இளம் தலைமுறையினருக்கு இந்த கலையை கற்றுத்தருவது தான் என்கிறார் வாணி.
“கைவினைக் கலைஞர்களை பயிலறங்கு நடத்த அழைத்துவந்து, அதன் மூலம் அவர்கள் அறிவை பரவலாகக் கொண்டு செல்கிறேன் என்பவர், தமிழ்நாடு மற்றும் பெங்களூரு பள்ளிகளில் கலை வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.
பயிலறங்கு மற்றும் பயிற்சிக்காக பனை ஓலைகளை தமிழ்நாடு மற்றும் ஒடிஷா பாரம்பரிய கலைஞர்களிடம் இருந்து தருவிக்கிறார். மேலும், கைவினைப் பொருட்களை சர்வதேச வாடிக்கையாளர்கள் வாங்கச்செய்து கலைஞர்களுக்கு வருவாய் கிடைக்கவும் வழி செய்கிறார்.
என்னால் முடிந்த வழிகளில் உதவி வருகிறேன் என்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள ஒரு கலைஞரிடம் இருந்து 500 பொம்மைகள் வாங்கியுள்ளார் மற்றும் புற்றுநோயில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு பயிலரங்கும் நடத்தியுள்ளார். இந்த கலை தியான தன்மை கொண்டது மற்றும் எளிதானது, மன அழுத்தம் போக்க வல்லது என்கிறார்.
அவரது முக்கியப் பங்களிப்பாக, தமிழ்நாடு மற்றும் மும்பையில் பலருக்கு இந்த கலையை கற்றுத்ததிருப்பதும் அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தர துவங்கியிருப்பதும் தான்.
"குழந்தைகளிடம் தனது கற்றலை பகிர்ந்து கொள்ளும் வாணியின் ஈடுபாடு மகத்தானது. சிறு வயதிலேயே இயற்கை மீது அன்பையும் மதிப்பையும் உண்டாக்குவது, அவர்கள் வளரும் போது அணுகுமுறை மற்றும் பழக்க வழக்கத்தில் தாக்கம் செலுத்தும். ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவதன் மூலம் சுழற்சி விளைவை உண்டாக்கி மேலும் பலருக்கு இதை கொண்டு சென்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உண்டாக்குகிறார்,” என்கிறார் டாட்வா பள்ளி , மழலையர் ஒருங்கிணைப்பாளர் இந்திரா லட்சுமி.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
‘பேப்பியர் மாச்சே' கலை மூலம் ஸ்ரீநகர் பள்ளத் தாக்கை காண்பிக்கும் கைவினைக் கலைஞர்!
Edited by Induja Raghunathan