‘பேப்பியர் மாச்சே' கலை மூலம் ஸ்ரீநகர் பள்ளத் தாக்கை காண்பிக்கும் கைவினைக் கலைஞர்!
ட்ரெண்ட் ஆகும் மக்பூல் என்பவரின் படைப்புகள்!
ஜூலை 27 அன்று, பாசித் சர்கார் என்ற புகைப்பட பத்திரிக்கையாளர் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த மக்பூல் என்பவரின் ‘பேப்பியர் மாச்சே' கலையை வெளிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்டார். சிறிதுநேரத்தில் இந்தப் புகைப்படங்கள் வைரலாகின.
ஸ்ரீநகரின் வரைபடம், ஷிகாரா படகுகள், மிகச்சிறந்த முகலாயக் கட்டிடக்கலை, அழகிய சினார் மரங்கள், நூற்றாண்டு பழமையான கலாச்சாரங்களில் ஊறப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் அழகிய டால் ஏரி என காஷ்மீர் நிலப்பரப்பை முன்னிலைப்படுத்திய அவரின் படைப்புகள் தான் வைரலாகி வருகின்றன.
ஆயிரக்கணக்கான லைக்குகளையும் நூற்றுக்கணக்கான மறு ட்வீட்களையும் பெற்றுவரும் அவரின் படைப்புகள் குறித்த பாராட்டுகளை பொருட்படுத்தாமல் மக்பூல், ஸ்ரீநகர் பள்ளத்தாக்கின் வரைபடத்தின் இறுதி முடிவுகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதில் கவனம் செலுத்தகிறார்.
ஸ்ரீநகரில் வசித்து வரும் மக்பூல் தனது கைவினைக் கலைக்காக நான்கு மாநில விருதுகளை பெற்றிருக்கிறார். அவரின் படைப்புகள் இணையத்தில் வரவேற்பு பெற்றுவருவது குறித்து பேசியுள்ள மக்பூல்,
“எனது கைவினைப்பொருளை பலர் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். செய்தி நிறுவனங்களும் என்னை அணுகியுள்ளன. காஷ்மீர் ஆனது குறைந்து வரும் பல கலை வடிவங்களால் நிரம்பியுள்ளது. ’பேப்பியர் மாச்சே' கலை அவற்றில் ஒன்றாகும். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை செய்யத் தொடங்கியதை ஒப்பிடும்போது, ஒரு சில கலைஞர்கள் மட்டுமே இப்போது இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்கிறார்கள். இந்தியா முழுவதும் இது பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும், சமூக ஊடகங்கள் இதற்கு ஒரு தொடக்கமாக இருக்கலாம்," என்பவர் கடந்த ஒருவருடமாக இந்த கலை மூலம் ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்ரீநகர் பள்ளத்தாக்கின் வரைபட பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
பேப்பியர் மாச்சே என்பது 14 ஆம் நூற்றாண்டு கலை, இது பாரசீக நாட்டைச் சேர்ந்த மிர் சையத் அலி ஹம்தானியால் தொடங்கப்பட்டது. மிர் சையத் அலி காஷ்மீரை நோக்கிய பயணத்தின்போது இந்த கலையை இங்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் திறமையான கைவினைஞர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 'பேப்பியர் மச்சே' ('மெல்லப்பட்ட காகிதம்') என்ற சொல் பிரெஞ்சு வர்த்தகர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு பிசின் மூலம் வலுவூட்டப்பட்ட ஒரு காகித கூழ் ஆகும்.
மக்பூல் மற்றும் அவரது சகோதரர், குழந்தைகள், மனைவி மற்றும் சகோதரி உட்பட அவரது முழு குடும்பமும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பஷ்மினா சால்வைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் சோஸ்னி எம்பிராய்டரியில் ஈடுபட்டிருந்த அவர்களின் மூதாதையர்களிடமிருந்து மக்பூல் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த கைவினைத் திறன்களைப் பெற்ற்றுள்ளனர். இருப்பினும், மக்பூலுக்கு 2 வயதாக இருந்தபோது அவரது தந்தை காலமானார். இதனால் குடும்பத்தின் முழு சுமையும் அவரது தாயின் கைகளில் சென்றது.
இதனால் மக்பூல் வாழ்க்கையும் மாறத் தொடங்கியது.
“காஷ்மீர் யுத்தம் ஒருபுறம் என்றால் மறுபுறம் நிதிச் சூழல் காரணமாக 6 ஆம் வகுப்போடு கல்வியை விட்டுவிட நேர்ந்தது. தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்களின் வீடு சிறிய இடங்களே கொண்டது. அதனால் நான் தொழிற்சாலையில் தூங்குவேன். காலையில் தொழிலாளர்கள் வருவதற்கு முன், நான் அந்த இடத்தை சுத்தம் செய்வேன். உஸ்தாத் குலாம் ஹாசன், என் முதலாளி, கலை மற்றும் கடின உழைப்புக்கான எனது திறமையைக் கண்டறிந்து, வர்த்தகத்தின் அடிப்படைத் திறன்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.”
காலப்போக்கில், நான் கலை வடிவத்தில் தேர்ச்சி பெற்று, என் தந்தை விட்டுச் சென்ற பழங்கால கருவிகளைப் பயன்படுத்தி எனது சொந்த தொழிலை நிறுவுவதற்காக நிறுவனத்தை விட்டு வெளியேறினேன். பணத்தை மிச்சப்படுத்த நான் உணவைத் தவிர்த்தேன். நான் என் ஆற்றல், நிதி வளங்கள் மற்றும் நேரத்தை செலவழித்து பேப்பியர் மாச்சேவில் தீவிரமாக உழைத்து எனக்கென்று நிலையான பெயரை ஏற்படுத்தினேன், என்று கூறும் அவருக்கு 2007-2008 இல் கைவினைப் பொருட்களுக்கான மதிப்புமிக்க யுனெஸ்கோ முத்திரை வழங்கப்பட்டது.
மக்பூலின் அடுத்த குறிக்கோள் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபை சுவர்களில் அவரது கலையை பார்க்க வேண்டும் என்பதே.
”இப்படி செய்வது எங்கள் பகுதிக்கு நான் அளிக்கும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். காஷ்மீரின் மதச்சார்பற்ற கலை, இந்தியாவின் பாராளுமன்றம் சுவர்களை அலங்கரிப்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும்," என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மக்பூல்.
தகவல் மற்றும் படங்கள்: thebetterindia | தமிழில்: மலையரசு