கட்டுமானக் கழிவுகளைக் கொண்டு 'பசுமை வீடுகள்' கட்டும் பெங்களூரு நிறுவனம்!
Hasiru Dala நிறுவனம் Hasiru Mane திட்டத்தின் மூலம் கட்டுமானக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி குறைவு விலையில் வீடுகளை கட்டுமானம் செய்கிறது.
நகரமயமாக்கல் காரணமாகவும் மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாகவும் இந்தியாவில் கழிவு மேலாண்மை சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நகரங்களில் மட்டுமே சுமார் 62 மில்லியன் டன் நகராட்சி கழிவுகள் உற்பத்தியாகிறது.
துரதிர்ஷ்ட்டவசமாக மறுசுழற்சிக்கு உகந்த கழிவுகளும் மற்ற மாநகராட்சி கழிவுகளுடன் நகரங்களுக்கு வெளியே நிலங்களில் கொட்டப்பட்டுகிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெங்களுருவைச் சேர்ந்த Hasiru Dala. இந்நிறுவனம் மணல், கான்க்ரீட், ஸ்டீல் கம்பிகள், இடிக்கப்பட்ட கட்டிங்களின் கழிவுகள், மரம், ப்ளாஸ்டிக் போன்ற கட்டுமானக் கழிவுகளைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Hasiru Mane என்றழைக்கப்படும் இந்த ப்ராஜெக்ட் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. Selco Foundation இதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
Hasiru Dala இயக்குனர் நளினி சேகர் ’தி இந்து’ உடன் உரையாடும்போது,
“நாங்கள் வடிவமைப்பில் தனித்துவமான வழிமுறையைப் பின்பற்றுகிறோம். புதிய வீட்டின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசினோம். எரி சாம்பல் செங்கல் போன்ற மாற்றுப் பொருட்களையும் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.
குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்திரா, ஸ்கிராப் டீலர் தேவ்ராஜ் கோசாய் போன்ற குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு இந்நிறுவனம் Hasiru Mane ப்ராஜெக்டின்கீழ் தற்சமயம் வீடு கட்டி வருகிறது. தேவ்ராஜ் தனது புதிய வீடு குறித்து பேசும்போது,
“இதற்கு முன்பு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடன்கூடிய மண் வீட்டில் வசித்தோம். அந்த வீடு பாழடைந்த நிலையில் இருந்தது. எங்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்து உதவும் Hasiru Dala-விற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அந்த வீடு அழகாக இருப்பதுடன் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்த விலையில் உள்ளது,” என்றார்.
தேவராஜின் வீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இந்திராவின் வீட்டிற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருவதாகவும் நளினி தெரிவித்தார்.
கட்டுமானப் பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தி புதிய வீடுகள் கட்டுவது குறித்து இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்டட வடிவமைப்பாளரான கார்த்திக் நடராஜன் கூறும்போது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களையும் மாற்றுப் பொருட்களையும் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவதால் அவை நிலப்பரப்பில் கொட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது என்றார். இதனால் விலை குறைவதுடன் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக இருக்கும் என்றார்.
கட்டுமானக் கழிவுகள் கொண்டு தனது வீட்டைக் கட்டியுள்ள ஜி தசாரதி கூறுகையில்,
“கட்டுமானக் கழிவுகளைப் பயன்படுத்தி மறுகட்டுமானம் செய்வது பொருளாதார ரீதியில் பலனுள்ளதாக அமையும். வழக்கமான முறையில் ஒரு வீட்டைக் கட்டும்போது 40 லட்ச ரூபாய் வரை செலவாகும். நான் கட்டுமானக் கழிவுகளைப் பயன்படுத்தி கட்ட திட்டமிட்டதால் இந்த செலவு 17 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது,” என தெரிவித்ததாக The Soft Copy குறிப்பிடுகிறது.
வரும் நாட்களில், ஏற்கெனவே இருக்கும் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட சிறிய ப்ராஜெக்டுகளையும் ஏற்று செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிதி ஆதரவு குறித்து நளினி கூறுகையில்,
”குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கோரி நாங்கள் சில நிதி நிறுவனங்களை அணுகினோம். ஆனால் பலனில்லை. இந்த இரு வீடுகளையும் பார்த்து வங்கிகளும் மற்ற நிறுவனங்களும் கடன் வழங்க முன்வருவார்கள் என்றும் கார்ப்பரேட்கள் இந்த ப்ராஜெக்டிற்கு நிதி வழங்குவார்கள் என்றும் நம்புகிறோம்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA