கம்ப்யூட்டர் பெண்கள் 21 - ஃபேஸ்புக்கிற்கு முன் சமூக ஊடகத்தை உருவாக்கிய ஸ்டேஸி ஹார்ன்!
இன்றைய சமூக ஊடகங்களுக்கு முன்னோடியாக கருதப்படும் இணைய சமூகத்தை உருவாக்கிய முன்னோடியாக ஸ்டேஸி ஹார்ன் கருதப்படுகிறார்.
கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பெண்களின் தொடர்ச்சியாக, இணையத்தின் வளர்ச்சியிலும் தவிர்க்க இயலாதவர்களாக விளங்கும் முன்னோடி பெண்களின் தொழில்நுட்ப சாதனைகளைப் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த வாரம், சமூக ஊடக வரலாற்றில் முன்னோடியாக திகழும் ’ஸ்டேஸி ஹார்ன்’ (Stacy Horn) பற்றி பார்க்கலாம்.
சமூக ஊடகம் என்றதும் பெரும்பாலானோருக்கு ஃபேஸ்புக்கும், டிவிட்டரும், அதன் நிறுவனர்கள் ஜுக்கர்பகும், ஜேக் டோர்சியும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக ஊடக வரலாறு என்பது ஃபேஸ்புக்கையும், டிவிட்டரையும் விட பழையமையானதாக இருக்கிறது.
2004ல் ஃபேஸ்புக், ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, இணையத்தின் முதல் சமூக வலைப்பின்னல் தளம் என அறியப்படும் சிக்ஸ்டிகிரீஸ்.காம் தளம் அறிமுகமாகிவிட்டது.
இதற்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக 1994ல், இணைய உலகின் முதல் வலைப்பதிவு அறிமுகமாகிவிட்டது. (ஜஸ்டின் ஹாலின் இணையதளம்).
சமூக ஊடக மூலம்
இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்னரே பி.பி.எஸ் (BBS) எனப்படும் மின்னணு தகவல் பலகை அமைப்புகள் உருவாகத் துவங்கி விட்டன. 1978ல் முதலில் அறிமுகமாகி, 1980-களிலும், 90களிலும் செழித்து விளங்கிய தகவல் பலகை அமைப்புகளே சமூக வலைப்பின்னல் தளங்களை உள்ளடக்கிய சமூக ஊடகங்களின் மூலமாகக் கருதப்படுகின்றன.
தகவல் பலகைகளில் இருந்து தான், இணைய விவாத குழுக்கள் உருவாயின. அதைவிட முக்கியமாக சமூக ஊடகங்களின் முக்கிய அம்சமாக அமையும், இணைய சமூகம் அல்லது ஆன்லைன் சமூக வெளி எனும் கருத்தாக்கம் இவற்றில் இருந்து தான் உருவாயின.
அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஒருமித்த ஆர்வத்தின் அடிப்படையில், கம்ப்யூட்டர் சார்ந்த மெய்நிகர் வெளியில் சந்தித்து தங்களுக்குள் கருத்து பரிமாற்றத்திலும், நட்பு உருவாக்கத்திலும் ஈடுபடுவதிலும், தகவல் பலகை அமைப்புகளே முக்கிய துவக்க புள்ளியாக அமைகின்றன.
இத்தகைய தகவல் பலகை சார்ந்த இணைய சமூகங்களில் மைல்கல்லாக விளங்கும் எக்கோ சேவையை துவக்கியவர் என்ற வகையில் ஸ்டேஸி ஹார்ன், இணைய வரலாற்றிலும், குறிப்பாக சமூக ஊடக வரலாற்றிலும் தவிர்க்க இயலாதவராகிறார். ஸ்டேஸியின் எக்கோ சேவை ஆரம்ப கால இணைய சமூகங்களில் ஒன்றாக விளங்குவதோடு, இணையத்தில் நீண்ட காலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இணைய சமூகமாகவும் விளங்குகிறது.
எக்கோ சேவை
ஆம், 1980ம் ஆண்டு துவக்கப்பட்ட echo சேவை இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகத்தின் அடையாளமாக பலரால் கருதப்படும் ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான பயனாளிகள் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது எக்கோ-வின் பயனாளிகள் எண்ணிக்கை அற்ப சொற்பம் என்றாலும், அதன் வீச்சும், வரலாறும் நிகரில்லாதது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஃபேஸ்புக்கின் பிரச்சனையாகக் கருதப்படும் பல விஷயங்கள் அல்லது ஃபேஸ்புக்கால் பிரச்சனையாகக் கருதப்படும் பல விஷயங்கள் இல்லாத இணைய சமூகமாக எக்கோ விளங்கியது. (கிறது). இந்த காரணத்திற்காகவே எக்கோவையும், அதை உருவாக்கிய ஸ்டேஸியையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் ’எக்கோஎன்ஒய்சி’ (https://www.echonyc.com/) இணையதளத்தை நீங்கள் எட்டிப்பார்த்துவிட்டு வருவது பொருத்தமாக இருக்கும். இந்த தளம், 1990-களின் வரி வடிவ முகப்புப் பக்கத்தை கொண்டிருப்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம். மாறாமல் இருப்பது, இதன் எளிமையான ஆர்ப்பட்டம் இல்லாத வடிவமைப்பு மட்டும் அல்ல, பின்னணியில் உள்ள தொழில்நுட்பமும் தான்.
ஆம், எக்கோ சேவைக்கு என இணையதளம் இருந்தாலும், இதன் மூலம் இந்த சேவையில் உறுப்பினராக இணைய முடியாது. அதற்கு டெல்நெட் வசதி வேண்டும். அதாவது, தொலைபேசி மூலமாகவே இந்த சேவையை அணுக முடியும்.
அதோடு, உறுப்பினர் கோரிக்கை ஏற்கப்பட்டு உள் நுழையும் அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். அப்போதும் கூட, இதில் ஃபேஸ்புக் போல நிலைத்தகவல்களோடு, படங்களையும், வீடியோக்களையும் பகிர முடியாது. எல்லாமே வரி வடிவில் தான் அணுக முடியும்.
இணைய சமூகம்
’டிக்டாக்’ யுகத்தில், இத்தகைய வரி வடிவ சேவை வியப்பையும், குழப்பத்தையும் அளிக்கலாம் என்றாலும், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் எல்லாம் வருவதற்கு முன், இணையம் வாயிலாக தொடர்பு கொள்வதற்கான மெய்நிகர் சமூகம் என்பது பெரும்பாலும் இப்படி தான் இருந்தது.
ஆனால் என்ன, எக்கோவில் உள்ளே நுழைந்தால், உறுப்பினர்கள் இது நம்ம இடம் எனும் இணக்கத்தை உணரலாம். அதோடு, விருந்து நிகழ்ச்சியில் பேசிக்கொள்வது போல, சக உறுப்பினர்களோடு உரையாடலாம். அதைவிட முக்கியமாக, உறுப்பினர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்பில் சக உறுப்பினர்கள் புழங்கும் இணைய அறைகளை கண்டறிந்து அவர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடலாம். இத்தகைய பரிமாற்றம் மூலம், பரஸ்பர புரிதலையும், நட்பைடும் உருவாக்கிக் கொள்ளலாம்.
எக்கோ நியூயார்க்வாசிகளுக்கு இத்தகைய இணைய சமூகத்தை தான் உருவாக்கிக் கொடுத்தது. ஆம், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட இணைய சமூகமாக தான் எக்கோ உருவாக்கப்பட்டது. இணையம் என்பதே பலரும் அறியாத புதுமையாக இருந்த காலகட்டத்தில், தொலைபேசி சார்ந்த சர்வர் மென்பொருள் வாயிலாக உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட முடியும் என்பது இணையத்தை விட புதுமையான கருத்தாக்கமாகவே இருந்தது.
இந்த பின்னணியில், நியூயார்க் நகர மக்களுக்கான இணைய சமூகமாக எக்கோ அறிமுகமானது. ’ஈஸ்ட் கோஸ்ட் ஹாங்கவுட்’ என்பதன் சுருக்கமே எக்கோ. எக்கோ உருவான காலத்தில், இதே போல, ஆயிரக்கணக்கான தகவல் பலகை அமைப்புகள் இருந்தன.
உண்மையில், இணைய சமூகங்களின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படும் வெல் (WELL) தகவல் பலகை அமைப்பின் தாக்கத்தால் தான் ஸ்டேஸி ஹார்ன் எக்கோ சேவையை துவக்கினார்.
’வெல்’ தந்த ஊக்கம்
ஸ்டேஸி ஹார்ன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தகவல் பலகைகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அதிலும், குறிப்பாக வெல் சமூகம் அவரை மிகவும் கவர்ந்தது. உறுப்பினர்கள் மெய்நிகர் வெளியில் சந்திப்பதும், உரையாடுவதும் வியக்க வைத்ததோடு, அங்கு நடைபெற்ற விவாதங்களும் ஆச்சர்யம் அளித்தன.
ஆனால், வெல் சமூகம் பிரதானமாக ஆண்கள், அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இளம் வயதினர் சார்ந்ததாக இருந்ததால், ஸ்டேசிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. இதன் காரணமாக அவர் பெண்களுக்கு என்று தனியே ஒரு தகவல் பலகையை உருவாக்க நினைத்தார். கல்லூரி முடித்து தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தகவல் பலகையை யோசனையை முன்வைத்தார். நிறுவனம் அதை நிராகரித்துவிட்டது.
அதன் பிறகு, ஸ்டேஸி வேலையை விட்டு விலகினார். இதன் மூலம் கிடைத்த இழப்பீடு பணத்தை வைத்துக்கொண்டு நியூயார்க்கில் இருந்த தனது வீட்டு அறையிலேயே சர்வர் ஒன்றை அமைத்து, எக்கோ சேவையை துவக்கினார். 1989-90 ம் ஆண்டு இந்த சேவை அறிமுகமானது.
எக்கோ மூலம் நியூயார்க் நகரவாசிகளுக்கு, இணைய வழி தகவல் தொடர்பை ஸ்டேஸி அறிமுகம் செய்தார். இந்த சேவையில் பெண்கள் அதிக அளவில் இணைவதை ஊக்குவித்தார். அதற்கேற்ப சேவையை வடிவமைத்தார். உறுப்பினர்கள் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.
எக்கோ சேவையில் நுழைய உறுப்பினர் கட்டணம் உண்டு என்பது இப்போது நம்ப முடியாததாக தோன்றலாம். இது தவிர தொலைபேசி பயன்பாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். பெண்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான முதல் ஆண்டு உறுப்பினர் கட்டணத்தை தள்ளுபடி செய்தார்.
இணைய முன்னோடி
மேலும், பெண்கள் உரையாடுவதற்கான பிரத்யேக அறைகளை உருவாக்கியதோடு, சீண்டல்கள் பற்றி புகார் அளிக்கும் வசதியையும் ஏற்படுத்தினார். பெரும்பாலான விவாதங்களை ஸ்டேஸியே முன்னின்று நடத்தியதோடு, புதிய உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். ஒவ்வொரு விவாத அறையிலும், கருத்து பரிமாற்றத்தை மேற்பார்வையிட, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் நியமிக்கப்பட்டிருந்தனர். பயனாளிகள் மத்தியில் இருந்தே இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விவாதங்கள் வழிநடத்தப்பட்ட விதம், இந்த இணைய சமூகத்தை இணக்கமானதாக மாற்றியது. உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர்ந்தனர். விதிகளை மீறுபவர்கள் நீக்கப்பட்டனர். இத்தகைய இணக்கமான அம்சம் தான் இப்போது ஃபேஸ்புக் போன்ற மாபெரும் இணைய சமூகங்களில் இல்லாததாக உணரப்படுகிறது.
மேலும், பயனாளிகள் விவாதத்தை நெறிப்படுத்தும் பொறுப்பு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படாமல், நிறுவனம் நியமிக்கும் ஊழியர்களால் மேற்கொள்ளப்படுவது நவீன சமூக ஊடகங்களின் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எக்கோ சேவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அமையவில்லை என்றாலும், அதில் காணப்பட்ட நட்புறவும், இணக்கமும் இன்றைய சமூக ஊடகங்களுக்கான பாடமாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஸ்டேஸி ஹார்ன் தனது சேவையை லாப நோக்கில் வளர்த்தெடுக்க விரும்பாமல் இணைய சமூகமாமவே பரமாரித்து வந்தது தான்.
எக்கோவின் ஆரம்ப ஆண்டுகளில் அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்டேஸி, பின்னர், அந்த சமூகம் இயல்பான வளர்ச்சி பெற்றதும், தனது மற்றொரு ஆர்வமான எழுத்தில் கவனம் செலுத்தத் துவங்கினார். எழுத்தாளராக மாறி பல புத்தகங்களை எழுதியவர் எக்கோ சேவை அனுபவங்களை சைபர்வில்லே எனும் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
(ஸ்டேஸி ஹார்ன் பற்றி, இணைய உலகில் முக்கியப் பங்காற்றிய பெண்களை அடையாளம் காட்டும் பிராட்பேண்ட் - Broad Band: The Untold Story of the Women Who Made the Internet புத்தகத்தில் கிளாரி ஈவன்ஸ் விவரித்திருக்கிறார்.)
ஸ்டேஸி தனது பெயரில் இணையதளம் ஒன்றையும் பராமரித்து வருகிறார். அவரது எக்கோ சமூகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தை எல்லோரும் அணுக வழி செய்த வைய விரிவு வலை அறிமுகம் ஆவதற்கு முன், எக்கோ தகவல் பலகை சேவை மூலம் இணைய சமூகத்தை உருவாக்கியவர் என்பதற்காக ஸ்டேஸி கொண்டாடப்படுகிறார்.
அதைவிட முக்கியமாக, இணைய பயனாளிகளில் 90 சதவீதம் பேர் ஆண்கள் என இருந்த நிலையில், 40 சதவீத பெண் பயனாளிகள் கொண்ட சேவையாக எக்கோ சமூகத்தை அவர் உருவாக்கி பெண்களின் இணைய பயன்பாட்டிற்கு வழி வகுத்தார்.