கம்ப்யூட்டர் பெண்கள் 20 - ஆப்பிளின் மேக் உருவாக்கத்தில் உதவிய வடிவமைப்பாளர் சூசன் கரே!
ஆப்பிள் நிறுவனம் என்றதும், ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் தவறாமல் நினைவுக்கு வரும் என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தை வளர்த்தெடுக்க உதவியவர்கள் பட்டியலில் நிச்சயம் வரைகலை கலைஞரான சூசன் கரேவும் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்
கம்ப்யூட்டர் பெண்கள் வரிசையில் இந்த வாரம் ஒரு வரைகலை கலைஞரை பார்க்கலாம். சூசன் கரே (Susan Kare) தான் அந்த கலைஞர். ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமாகக் கருதப்படும் மேகிண்டாஷிற்கான ஐகான்களை உருவாக்கியவர் எனும் ஒற்றை வரியே, கம்ப்யூட்டர் முன்னோடிகள் வரிசையில் இந்த வரைகலை கலைஞரும் வருவதற்கான காரணத்தை உணர்த்திவிடும்.
ஆப்பிள் நிறுவனம் என்றதும், ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் தவறாமல் நினைவுக்கு வரும் என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தை வளர்த்தெடுக்க உதவியவர்கள் பட்டியலில் நிச்சயம் வரைகலை கலைஞரான சூசன் கரேவும் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பர்சனல் கம்ப்யூட்டர் வரலாற்றில் ஆப்பிளின் ’Mac’ ஒரு மைல்கல் என்றாலும், அதன் பின்னே உள்ள வரைகலை தன்மை, பயன்பாட்டு எளிமை, ஐகான்களின் வழிகாட்டல் உள்ளிட்ட கருத்தாக்கங்களுக்கான ஊக்கமாக அமைந்த அடிலி கோல்ட்பர்க் பற்றி இந்த தொடரில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதே வரிசையில் தான் சூசன் கரேவும் வருகிறார்.
முன்னோடி வரிசை
அடிலி, ஆப்பிளின் மேக்கிற்கு வழிகாட்டியாக அமைந்த, ஸ்மால்டாக் புரோகிராமிங் மொழியை அடிலி உருவாக்கினார் என்றால், மேக்கின் பயன்பாட்டை எளிதாகவும், ஈர்ப்புடையதாகாவும் மாற்றிய இடைமுக தன்மைக்கான ஐகான்களை சூசன் கரே உருவாக்கிக் கொடுத்தார்.
ஆப்பிளின் மேக்கின் வருகைக்கு பின்னர் தான், கம்ப்யூட்டரில் வரைகலை உருவாக்கும் ஆற்றலும் பிரபலமானது என்பதை கவனத்தில் கொள்ளும் போது, அந்த கம்ப்யூட்டரின் இடைமுகத்தை நட்புக்கும், நேசத்திற்கும் உரியதாக்கிய ஐகான்களை உருவாக்கிய சூசன் கரேவை மனதார கொண்டாடலாம்.
ஆப்பிளின் ஆரம்ப காலத்தில் அதனுடன் இணைந்து மேக்கின் அடையாளச் சின்னங்களை உருவாக்கிய சூசன், அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தனியே துவக்கிய நெக்ஸ்ட் கம்ப்யூட்டரில் பணியாற்றியதோடு, மைக்ரோசாப்ட் முதல் ஃபேஸ்புக் வரையான நிறுவனங்களில் வரைகலை ஆக்கங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
மைக்ரோசாப்டில் நீங்கள் அடிக்கடி விளையாடியிருக்கக் கூடிய டிஜிட்டல் சீட்டுக்கட்டு (சாலிடயர்), அதன் நோட்பேடிற்கான ஐகான், ஃபேஸ்புக்கின் மெய்நிகர் பரிசுச்பொருட்களையும் சூசன் தான் உருவாக்கினார்.
கம்ப்யூட்டர் துறையில் வரைகலை இடைமுக முன்னோடியாகவும், பிக்சல் கலை முன்னோடியாகவும் கருதப்படும் சூசன், தனக்கென வடிவமைப்பு கொள்கையும் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் கட்டளைகளுக்கென உருவாக்கும் காட்சி ரீதியான பிரதிநித்துவம் எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்,
”நல்ல ஐகான்கள் போக்குவரத்து விளக்குகள் போல அனைவராலும் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்,” என்கிறார்.
ஆப்பிளின் மேக்கிற்காக அவர் உருவாக்கிய ஐகான்கள் இந்த வகையைச்சேர்ந்தவை தான்.
பிசி யுகம்
மேக் கம்ப்யூட்டர் ஆப்பிளுக்கும், அதன் பிரம்மா ஸ்டீவ் ஜாப்சிற்கும் அடையாளமாக மாறியதோடு, பிசி எனச் சொல்லப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவு பயனாளிகள் மத்தியில் பிரபலமாவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அடுத்த ஆண்டு 1984ல் மேக் கம்ப்யூட்டர் அறிமுகமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கம்ப்யூட்டர் துறை முன்னோடி நிறுவனமான ஐபிஎம், தனது முதல் பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தது.
கம்ப்யூட்டர் வரலாற்றில் பிசியின் அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல். ஏனெனில், அதுவரை ஆய்வுலகிலும் அதன் பிறகு வர்த்தக உலகிலும் மட்டுமே பிரதானமாக பயன்படுத்து வந்த கம்ப்யூட்டர்கள் அளவில் சுருங்கத்துவங்கி, மைக்ரோ, மினி கம்ப்யூட்டர்களாக மாறி, ’பிசி’க்களாக வரத்துவங்கின.
கம்ப்யூட்டர் என்பது, அதன் ஆற்றலையும், திறன்களையும் கேட்டு பிரம்மிப்பதற்கு மட்டும் அல்ல நாமும் அதை பயன்படுத்தலாம் எனும் ஆர்வத்தை ’பிசி’க்கள் தான் உண்டாக்கின. மெயின்பிரேம் காலத்தில் இருந்து கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தாலும், உடனே அது எல்லோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்து விடவில்லை.
எளிய பயன்பாடு
அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என்றால், கம்ப்யூட்டர் அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. மேலும், கம்ப்யூட்டரை இயக்குவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை. காரணம், கம்ப்யூட்டர் இடைமுகம் இன்னமும் சிக்கலானதாகவே இருந்தது.
புரோகிராம் கட்டளைகளை உள்ளீடு செய்வது போலவே கம்ப்யூட்டரை இயக்குவதற்கான ஆணைகளையும் உள்ளீடு செய்ய வேண்டியிருந்தது. எனவே, தான் ஐபிஎம் ‘பிசி’ தீவிரமானவர்களுக்கான தீவிரமான கம்ப்யூட்டர் என வர்ணிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் அறிமுகமான ஆப்பிளின் மேக் வரைகலை அம்சங்களோடு பயனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய அம்சங்களைக் கொண்டிருந்தது. மவுசுடன் இணைந்து பயன்படுத்தக்கூடிய வரைகலை இடைமுகம் அதன் ஆதார அம்சங்களில் ஒன்றாக இருந்தது.
மேக்கை தனது கனவு கம்ப்யூட்டராக உருவாக்கிய ஜாப்ஸ், அதன் அழகியல், நேர்த்தி, செயல்திறன் ஆகிய அம்சங்களோடு பயனர் நட்பு எனும் அம்சத்திலும் கவனம் செலுத்தினார்.
ஆப்பிளின் மேக் கம்ப்யூட்டர்கள் அதற்கு முந்தைய கம்ப்யூட்டர்களின் வரி வடிவ உள்ளீடு முறைக்கு பதிலாக வரைகலை தன்மை கொண்டிருந்தது. அதற்கேற்ப கம்ப்யூட்டர் திரை பயனர்களை, ஐகான்களோடு வரவேற்றன. இந்த ஐகான்கள் அழகிய தோற்றம் கொண்டிருந்ததோடு, அவற்றின் மீது கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் என்ன செய்யும் என்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி இருந்தன.
உதாரணத்திற்கு, வேண்டாத கோப்புகளை அகற்றுவதற்கான ரீசைக்கிள் பின் வசதியை குப்பைத்தொட்டி உணர்த்தியது. கம்ப்யூட்டர் இயக்கத்தை செயல்படுத்த நேரம் தேவைப்படும் எனில் அதுவரை பயனர்கள் பொறுமையுடன் காத்திருக்கும் வகையில் மேக் புன்னகை முகம் அமைந்திருந்தது.
கம்ப்யூட்டரில் ஏதேனும் அமைப்பு கோளாறு இருப்பதை கையெறி குண்டு உணர்த்தியது என்றால், வரைவதற்கான வழிகளும் வர்ண கேன்கள் மூலம் உணர்த்தப்பட்டன. இவை எல்லாமே மிக எளிதான வடிவமைப்பு கொண்டிருந்தன. பார்த்தாலே புரியும் வகையில் அமைந்திருந்ததோடு, கம்ப்யூட்டர் ஆற்றலும் அதிக அளவில் தேவைப்படாத வகையில் சிக்கனமான பிக்சல்களை (கம்ப்யூட்டரின் மூலக்கூறுகள்) கொண்டிருந்தன. இவை எல்லாமே, சூசனின் கைவண்ணம் தான்.
நுண்கலை ஆர்வம்
ஆனால், சூசன் கரே கம்ப்யூட்டர் துறையில் திட்டமிட்டு நுழைந்தவர் அல்ல. வரைவதிலும், வடிவமைப்பிலும் ஆர்வம் இருந்தாலும் கம்ப்யூட்டர் துறைக்கு அவர் தற்செயலாகவே வருகை தந்தார். அவருக்கு நுண்கலையில் தான் ஆர்வம் இருந்தது.
சூசன், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ’இதாகா’ பகுதியில் பிறந்து வளர்ந்தார். சூசனின் தந்தை பெனிசல்வேனியா பல்கலையில் பேராசிரியராக இருந்தார். வாசனைகளுக்கான ரசாயன ஆய்வகத்தின் இயக்குனராகவும் இருந்தார். சூசனின் அம்மா நுண் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தவர், அவருக்கு ஓவியம் வரைவதை கற்றுக்கொடுத்தார். சூசனினும், வரைவதிலும், கலைவினை பொருட்களை உருவாக்குவதிலும் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார்.
கலைகளின் வரலாற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தவர், எதிர்காலத்தில் உலக புகழப்பெற்ற கலைஞராக வர வேண்டும் என்பதை சிறு வயது கனவாக கொண்டிருந்தார். 1971ல் பள்ளிப்படிப்பை முடித்தவர், 1975ல் நுண்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார்.
கலை ஆர்வமும், டாக்டர் பட்டமும் இருந்ததே தவிர, சூசனுக்கு வடிவமைப்பிலோ, தொழில்நுட்பத்திலோ அறிமுகம் இருக்கவில்லை. இதனிடையே, அவர் நியூயார்க்கில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இடம் பெயர்ந்திருந்தார். விளம்பர நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அதற்கு தேவையான மாதிரிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக, வாழ்த்து அட்டைகளில் புகழ்பெற்று விளங்கிய ஹால்மார்க் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது. இதற்காக, வாழ்த்து அட்டை மாதிரிகளையும் உருவாக்கி வைத்திருந்தார்.
மேக்கின் அழைப்பு
அவர் எதிர்பார்த்தது போல ஹால்மார்க் நிறுவனத்தில் நேர்கானல் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் விளம்பர நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு செய்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் அவரது பள்ளி பருவத்து தோழர் ஆண்டி ஹெர்ட்ஸ்பீல்டு மூலம் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருந்த மேக் கம்ப்யூட்டருக்காக எழுத்துருக்களையும், வரைகலை இடைமுக அம்சங்களையும் உருவாக்கித்தரும் வாய்ப்பு கிடைத்தது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே லிசா கம்ப்யூட்டரை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தான், ஸ்டீவ் ஜாப்ஸ், மேக் கம்ப்யூட்டருக்கான திட்டத்தில் ஈடுபட்டிருந்தார். வீட்டு பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர்களுக்கான சந்தை உருவாகத்துவங்கியிருந்த நிலையில், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பரிவினர் எளிதாக பயன்படுத்த ஏற்ற வகையில் மேக் கம்ப்யூட்டரை உருவாக்க ஜாப்ஸ் திட்டமிட்டிருந்தார்.
எல்லோரும் பயன்படுத்த ஏற்ற வகையில் மேக்கின் வடிமவைப்பும், மென்பொருள் அமைப்பும் அமைந்திருந்தது. முக்கியமாக வரைகலை இடைமுக அம்சத்தை கொண்டிருந்தது. ஆக, எளிதான பயன்பாட்டிற்கான எல்லாமும் மேக்கில் இருந்தது. பயனாளிகளுக்கு இதை கடத்துவது தான் மிச்சம் இருந்தது. இதுவே சூசனின் பணியாகவும் அமைந்தது. அதாவது, மேக்கின் பயனாளிகள் எளிதாக அணுகுவதற்கு வழி செய்யும் இடைமுக அம்சங்களை வடிவமைக்க வேண்டியிருந்தது.
முதல் கட்டமாக சூசன், மேக்கிற்கான எழுத்துருக்களை உருவாக்கினார். ஏற்கனவே அவருக்கு எழுத்துருவாக்கம், வரைதல், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வம் இருந்ததால், அவை அனைத்தையும் எழுத்துருக்களில் கொண்டு வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் கம்ப்யூட்டருக்கான எழுத்துருக்கள் டைப்ரைட்டரின் தாக்கத்தை கொண்டிருந்தனர். எனவே குறிப்பிட்ட ஆங்கில எழுத்துக்கள் இடையே போதிய இடைவெளி இல்லாதது போன்ற குறைகள் இருந்தன. மேக்கிற்கான எழுத்துருக்கள் இந்த குறைகள் இல்லாமல் டிஜிட்டல் திரையில் தங்களுக்கான இடத்தோடு கச்சிதமாக இருக்கும் வகையில் சூசசின் வடிவமைப்பு அமைந்திருந்தது.
புதிய ஐகான்கள்
எழுத்துருக்களுக்கு உள்ளூர் நகரங்களின் பெயரை சூசன் சூட்டியிருந்தார். ஜாப்ஸ் தலையிட்டு அவற்றுக்கு சிக்காகோ, ஜெனியா, வெனிஸ் போன்ற உலக நகரங்களின் பெயரைச் சூட்டினார். அடுத்த கட்டமாக மேக்கிற்கான ஐகான்களை சூசன் வடிவமைக்கத்துவங்கினார்.
கம்ப்யூட்டரிலும், மென்பொருளிலும் அவருக்கு அதிக அனுபவம் இருக்கவில்லை என்றாலும், அவற்றின் தன்மையை நன்கு உள்வாங்கியிருந்தார். கம்ப்யூட்டரில் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக பிக்சல்கள் அமைந்திருந்த நிலையில், அந்த சிறு சிறு கட்டங்களை ஓவியத்தின் பின்னணியில் பொருத்திப்பார்த்து, அதற்கேற்ப வரையத்துவங்கினார். 16க்கு 16 கருப்பு வெள்ளை புள்ளிகளுக்குள் தனது கற்பனை வளத்தையும், கைவண்ணத்தையும் காண்பித்தார். இதை ஒரு புதிர் விளையாட்டு போல கருதி மிகுந்த சுவாரஸ்யத்தோடு வடிவமையில் ஈடுபட்டார்.
மாணவர்கள் பயன்படுத்தும் நுண் கட்டங்கள் கொண்ட வரைகலை காகிதத்தை டிஜிட்டல் காகிதம் போல வைத்துக்கொண்டு, அதில் மேக் திரையில் தோன்ற வேண்டிய பயன்பாட்டு ஐகான்களை வடிவமைத்தார். ஒவ்வொரு ஐகானும், அழகாக இருப்பதோடு, அவற்றின் நோக்கமும், செயலும் என்ன என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில் வடிவமைத்தார். இந்த ஐகான்கள் தான் மேக்கிற்கான தனித்தன்மையை எடுத்துக்காட்டியதோடு, தொழில்நுட்ப பரிட்சியம் இல்லாதவர்களும் கம்ப்யூட்டரை தயக்கம் இல்லாமல் பயன்படுத்த வழி செய்தது.
மேக் கம்ப்யூட்டரில் மென்பொருள் இயக்கத்திற்கு வர சிறிது நேரம் பிடித்ததால், காத்திருக்கும் நேரத்தில் பயனர்கள் அதிருப்தி அடையாமல் இருக்கும் வகையில் திரையில் புன்னகை ஐகானை வடிவமைத்தார். இதுவே ’மகிழ்ச்சி மேக்’ எனப் பாராட்டப்பட்டது. டிராஷ் கேன், பெயிண்ட் பிரெஷ், காகித ஐகான் என அவர் வடிவமைத்த எல்லாமே மேக்கின் அடையாளங்களின் ஒன்றாக மாறின. மேக்கின் வசீகரத்திற்கு சூசனின் கைவண்ணமும் முக்கியக் காரணமாக அமைந்தது.
அடுத்த சில ஆண்டுகளில் ஆப்பிளில் பணியாற்றிய சூசன், பின்னர் ஜாப்ஸ் சொந்தமாக துவக்கிய நெக்ஸ்ட் கம்ப்யூட்டரிலும் வடிவமைப்பாளராக இருந்தார். பின்னர், மைக்ரோசாப்ட், பிண்டிரெஸ்ட், ஃபேஸ்புக், பேபால் உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் சார்பாகவும் வடிவமைப்பையும், வரைகலையையும் மேற்கொண்டார். எல்லாமே அவரது தனி முத்திரையாக அமைந்துள்ளன.
மேக்கிற்காக அவர் உருவாக்கிய ஐகான்களின் மூல வடிவம் கம்ப்யூட்டர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றளவும் கம்ப்யூட்டர் வரைகலை கலைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பவராக சூசன் விளங்குகிறார்.