அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை 1.5 கிமீ தோளில் சுமந்து காப்பாற்றிய கான்ஸ்டபில்!
இணையதளம் ஒரு போக்காக மாறிய பிறகு தவறோ சரியோ எது நடந்தாலும் உலகம் முழுவதும் கண் இமைக்கும் நொடியில் பரவி விடுகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் வலம் வந்த ஒரு வீடியோ டிரன்டானது மட்டுமின்றி ஒரு காவல் அதிகாரியையும் கொண்டாடச் செய்தது.
இரு தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி இரத்த காயங்களுடன் இருந்த ஒருவரை, தனது தோளில் தூக்கி 1.5 கிமீ வரை ஓடிய காட்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில் விபத்தில் சிக்கியவரை தூக்கிக் கொண்டு ஓடுபவர் 30 வயதான போலிஸ் கான்ஸ்டபில் பூனம் சந்திரா. இவர் மத்திய பிரதேஷ் ஹோஷாகாபாத் பகுதியில் சிவ்பூர் காவல் நிலையத்தின் கான்ஸ்டபில் ஆவார்.
ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்த பயணியை காப்பாற்ற உதவி வரும் வரை காத்திருக்காமல் தன் தோளிலே 1.5கிமீ சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் பூனம். இது குறித்து பெட்டர் இந்தியாவிற்கு பேட்டி அளித்த பூனம்,
“சனிக்கிழமை காலை 8:45 மணியளவில் நான் டயல்-100 சேவையில் இருந்தபோது பகல்பூர் எக்ஸ்பிரஸ் பயணி ஒருவர் போபால் கண்ட்ரோல் அறைக்கு போன் செய்து, தனது சக பயணி ஒருவர் இரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என பதட்டத்துடன் தெரிவித்தார்,”என்று அன்றைய நிகழ்வை நினைவுகூறுகிறார் பூனம்.
சூழ்நிலையை அறிந்தவுடன் டயல்-100 வண்டி ஓட்டுனர் ராகுல் சக்கல் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார் பூனம். சிவ்பூர் ரயில்வே கேட் எண் 2ல் இருந்து 1.5கிமீ தாண்டி உள்ள தடத்தில் விழுந்திருந்தார் பாதிக்கப்பட்டவர். அங்கு சரியான சாலை வசதி இல்லாததால் போலிஸ் வாகனத்தால் உள் நுழைய முடியவில்லை அதனால் அந்த இடைவெளியை அடைய உதவிக்காக காத்திருக்காமல் நடந்தே கடக்கலாம் என முடிவு செய்துள்ளார் இந்த கான்ஸ்டபில்.
“அவருக்கு அதிகமாக இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது; மேலும் அங்கு ஸ்ட்ரெட்சர் ஆம்புலன்ஸ் போன்ற வசதியும் இல்லை. அதனால் தேவயின்றி நேரம் கடத்தினால் உயிருக்கு ஆபத்து என்று தோளில் சுமந்து நடந்தேன்,” என்கிறார்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நடத்துக் கொள்ள வேண்டும் என்று காவலர் பயிற்சியின் போதே பயிற்சிபெற்றதாகவும். ஒரு உயிரை காப்பாற்றுவதே தனது முக்கிய நோக்கமாக இருந்தது என தெரிவித்துள்ளார் பூனம்.
“எனது கடமையைத் தான் நான் செய்தேன். என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினேன். எங்கேயும் நிற்கவில்லை அவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது...”
தான் வந்த வாகனத்தை நெருங்கியதும் ஆம்புலன்ஸ் ஏதும் வராததால் தங்கள் வாகனத்திலே பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர் அஜித், மருத்துவமனியில் சேர்த்த அன்று உடல் நிலை மிக மோசமாக இருந்தாலும் தற்போது உடல் நலம் தேறிவருகிறார். தன் மகனை காப்பாற்றியது பூனம் தான் என தெரிந்த அஜித்தின் குடும்பம் நன்றி சொல்லி மீளவில்லை என நெகிழ்கிறார் பூனம்.
இருப்பினும் “போலிசாக என் கடமையைத் தான் நான் செய்தேன்...” என தன்னடக்கத்துடன் முடிக்கிறார் பூனம்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: ஏஎன்ஐ