காண்ட்ராக்டர் நேசமணி குணமடைய #Pray_for_Neasamani: மீம்ஸ், நிறுவனங்கள் செய்த விளம்பரங்கள்!
சோஷியல் மீடியாவில் அடுத்து வைரலாகி, இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆன #PrayforNesamani நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் காமெடி காட்சியில் இருந்து உருவானதே. அதையே தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மார்க்கெட்டிங்க் செய்யத் தொடங்கினர் நிறுவனங்கள் பல.
கடந்த இரு தினங்களாய் சோஷியல் மீடியாக்கள் முழுவதும் #prayfornesamani என்ற ஹேஷ்டெக்கில், நேசமணி இட்லி சாப்பிட்டார், நேசமணி நலமாக உள்ளார், நேசமணிக்கு சிகிச்சையளிக்க லண்டன் டாக்டர் வருகிறார், நேசமணி குணமடைய வேண்டுகிறோம் என்றெல்லாம் பதிவிட்ட நெட்டிச பெருமக்களால் உலகளவில் டிரெண்டிங் ஆகியது #Pray_for_Neasamani #prayfornesamani போன்ற ஹேஷ்டெகுகள்.
அன்றைய நாள் நேசமணிக்கு அப்படி இருந்திருக்க வேண்டாம். நாட்குறிப்பில் ஒரு நாளில் வெண்ணிற மேகங்களற்ற ஒரு பொழுதில் நேசமணி அந்த கொடுங்கருவியை தன் அண்ணன் மகனிடம் கொடுத்திருக்க வேண்டாம். ஐந்தாண்டுகளுக்குப் பின் ஒரு நாள் நமக்காக விடியும் அன்று நேசமணியும் நம்முடன் இருப்பார்... விழிப்பார் - இப்படியாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் நெட்டிசன் ஒருவர். அறியாதோர் பலரும் யாருய்யா இந்த நேசமணி என்று பொழம்பி வருகின்றனர். சரி, யாரிந்த நேசமணி? அவருக்கு என்ன தான் ஆயிற்று?
2001ல் ஆண்டு வெளியாகிய ’ப்ரெண்ட்ஸ்’ படத்தில் கட்டிட வேலை செய்யும் காண்டரக்டர் கதாபாத்திரத்தில் குருநாதர் சோஷியல் மீடியாக்களின் தலைவன் வடிவேலு நடித்திருப்பார். படத்தில் தலைவன் பேசிய அத்தனை வசனங்களுமே தலைமுறைகளை தாண்டியும் கெய்யக்க, பொக்கவேன சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தான் Civil Engineering Learners என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை பதிவிட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்கப்பட்டது. நம்மூர்காரயங்க தான் குறும்புகாரய்ங்களாச்சே... கமெண்டில் விக்னேஷ் பிராபாகர் என்பவர்,
“இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங் டங்’ என்ற சத்தத்தை வரவழைக்கும். ஜமீன் பங்களாவில் பெயிண்டிங் காண்டரக்டர் நேசமணி வேலை செய்து கொண்டிருக்கையில், அவருடைய அண்ணன் மகன் இதை வைத்து அவரது தலையை உடைத்தார்...பாவம்...” என்று எழுதி பல சோக ஸ்மைலிகளையும் பதிவிட்டார்.
அதற்குக் கீழே, “அவர் இப்போது நலமாக இருக்கிறாரா?” என்ற வெங்கடேஷ் என்பவர் பதில் கமெண்டிட... அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவரது டீம் அவருக்கு தண்ணீர் தெளித்து உடனடியாக முதலுதவி செய்தது” என்று பதிலளித்தார் விக்னேஷ். “நான் அவருக்காக பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். அவரை நன்றாக பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்... #Pray_for_Nesamani” என குறிப்பிட்டிரு ந்தார் வெங்கடேஷ். உடனே என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டார் விக்னேஷ். அங்கிருந்து தொடங்கியது நேசமணிக்கான பிரார்த்தனைகள்.
சும்மாயிருந்த மீம் கிரியேட்டர்களுக்கு டெம்ப்ளேட்டுடன், கன்டென்டும் கிடைக்க, தாறுமாறாக மீம்ஸ்களும், பதிவுகளும் சோஷியல் மீடியாக்களில் #PrayForNesamani என்ற ஹேஷ்டெக்கில் வெளியாகி ஒருநாளில் வேர்ல்ட் qபேமசாகியது. உலகளவில் டிரெண்டாகிய ஹேஷ்டெக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறைவாக மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, வைரலாகி வருகின்றது. இந்த கலகல சமாசாரத்தில் இணைந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நேசமணிக்காக வேண்டி வருகின்றனர்.
அதில் குறிப்பாக மஞ்சள் நாயகர்களுள் ஒருவரான ஹர்பஜன்சிங்,
"என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்... ட்ச்! மீண்டு வா நேசா! " ௭ன்று டுவிட் இட்டு கூடுதல் கலகலப்பை கூட்டினார்..
ஏன், சிஎஸ்கே அணியும் நேசமணி பற்றிய டுவிட்களை பதிவிட்டுள்ளது.
நேசமணிக்காக பிரார்த்திக்கும் இச்சமயத்தில், நேசமணியை கிடைத்த கேப்பில் மார்க்கெட்டிங்காக பயன்படுத்தி கொண்டுள்ளது சில கெட்டிக்கார வணிக நிறுவனங்கள்.
அதில், நிப்பான் பெயின்ட்.
" நன்கு பயிற்சி பெற்ற எங்களுடைய பெயிண்டர்கள், உங்களது தலையில் சுத்தியலை விழச்செய்ய மாட்டார்கள்..." என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இவை தவிர, the6.in, மதூர் புரூட்ஸ், சோஷியல் ஈகல், ஃபர்னிச்சர் மேஜிக், தானியா போன்ற பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், என்ஜிகே படக் குழுவும் நேசமணி பற்றி பதிவிட்டு புரமோஷன் தேடிக் கொண்டது.
அரசியல் நிகழ்வுகளும், பதவிப்பிரமாணங்களும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இன்று, இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருப்பதென்னவோ நம்ம நேசமணி தான். எப்படியோ எல்லாத்தையும் ட்ரெண்ட் பண்ணுவதில் கில்லிகள் நம்ம தமிழர்கள்...
கட்டுரையாளர்கள்: ஜெயஸ்ரீ மற்றும் இந்துஜா ரகுனாதன்