தக்ஷா டிரோன் நிறுவனத்தில் ரூ.150 கோடி முதலீடு செய்து கோரமண்டல் பங்குகள் அதிகரிப்பு!
இந்தியாவின் முன்னணி வேளாண் சேவை தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல், சென்னையைச் சேர்ந்த டிரோன் தயாரிப்பு நிறுவனம் தக்ஷா அன்மேண்ட் சிஸ்டம்ஸ்-இல் மேலும் 7 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வேளாண் சேவை தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல், தனது துணை நிறுவனம் கோரமண்டல் டெக்னாலஜி லிட் வாயிலாக சென்னையைச் சேர்ந்த டிரோன் தயாரிப்பு நிறுவனம் 'தக்ஷா அன்மேண்ட் சிஸ்டம்ஸ்' (Dhaksha Unmanned Systems) நிறுவனத்தில் மேலும் 7 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோரமண்டல் நிறுவனம் தக்ஷா நிறுவனத்தில் தனது மொத்த பங்குகளை 58 சதவீதமாக அதிகரிக்க, புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக ரூ.150 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2019ல் துவங்கப்பட்ட தக்ஷா, இந்தியாவில் டிரோன் பரப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. விவசாயம், கண்காணிப்பு, நிறுவன செயல்பாடுகள் தொடர்பான ஆளில்லா விமான சேவையை வழங்கி வருகிறது. டிரோன் இயக்குவதற்கான டிரோன் பைலெட் பயிற்சியும் வழங்குகிறது.
கடந்த ஆண்டு தக்ஷா, பாதுகாப்பு மற்றும் வேளாண் நிறுவனங்களிடம் இருந்து ரூ.256 கோடி அளவில் ஒப்பந்தம் பெற்றது. அண்மையில் சென்னைக்கு வெளியே உள்ள தனது ஆலை உற்பத்தி திறனை விரிவாக்கியது. தற்போதைய நிதி, நிறுவனத்தின் ஆய்வு, மேம்பாடு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
“கோரமண்டல் நிறுவனம் தக்ஷாவுடன் துவக்கம் முதல் தொடர்பு கொண்டுள்ளது. ஆய்வு, மேம்பாடு பணிகளில் உதவி வருகிறது. கடந்த ஆண்டு நிறுவனம் தனது தொழில்நுட்ப, ஆய்வு திறனை மேம்படுத்தியுள்ளது. இந்த முதலீடு, தொழில்நுட்பத் துறையில் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கோரமண்டல் நிறுவன தொலைநோக்கிற்கு ஏற்ப அமைகிறது,” என கோரமண்டல் இண்டர்நேஷல்னல் செயல் தலைவர் அருண் அழகப்பன் கூறியுள்ளார்.
கோரமண்டல் இண்டர்நேஷனல் இந்தியாவின் முன்னணி வேளாண் சேவைகள் தீர்வு அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட இரண்டு முக்கியப் பிரிவுகளில் செயல்படுகிறது. உரங்கள், பயிர் பாதுகாப்பு, உயிரி தயாரிப்பு, சிறப்பு ஊட்டச்சத்து உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது. இரண்டாவது பெரிய பாஸ்பேட் உரம் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. புகழ் பெற்ற முருகப்பா குழுமத்தின் அங்கமாக விளங்குகிறது.
Edited by Induja Raghunathan